Show all

தமிழ்நாட்டின் அடையாளப் பண்! தமிழ்த்தாய் வாழ்த்து

தமிழ்த்தாய் வாழ்த்தை, தமிழ்நாட்டு அடையாளப் பாடலாக அறிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

02,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ்நாட்டின் மொழி அடையாளமாக தமிழும், தமிழ்நாட்டின் விலங்கு அடையாளமாக வரையாடும், தமிழ்நாட்டின் பறவை அடையாளமாக மரகதப்புறாவும், தமிழ்நாட்டின் மலர் அடையளமாக காந்தள் மலரும் தமிழ்நாட்டின் மர அடையாளமாக பனைமரமும்,  தமிழ்நாட்டின் பழ அடையாளமாக பலாவும், தமிழ்நாட்டின் விளையாட்டு அடையாளமாக சடுகுடுவும், இருந்து வரும் நிலையில், தமிழ்நாட்டின் பண் அடையாளமாக மனோன்மணியம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலை அறிவித்து ஆணை பிறப்பித்துள்ளது தமிழ்நாடு அரசு.

தமிழ்நாட்டின் அனைத்து விழாக்களிலும் மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய 'நீராரும் கடலுடுத்த' எனும் பாடல் பாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்தை, தமிழ்நாடு அரசின் அடையாளப் பாடலாக அறிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
மனோன்மணியம் சுந்தரனார் இயற்றிய தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் தமிழ்நாடு அரசின் அடையாளப் பாடலாக அறிவிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும் நிகழ்வு தொடங்குவதற்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும்.

தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் போது அனைவரும் தவறாமல் எழுந்து நிற்க வேண்டும்.

தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் பாடப்படும் போது மாற்றுத்திறனாளிகள் எழுந்து நிற்பதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

பொது நிகழ்வுகளில் 'தமிழ்த்தாய் வாழ்த்து' இசை வட்டுக்களைக் கொண்டு இசைப்பதைத் தவிர்த்து பயிற்சி பெற்றவர்களால் வாய்ப்பாட்டாக பாடப்பட வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,100.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.