Show all

ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி தேர்வாகியுள்ளனர்! ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்களாக

அதிமுக உட்கட்சி தேர்தலில்- ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்களாக- ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி இருவரும் போட்டியின்றி தேர்வாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

20,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: அதிமுக உட்கட்சித் தேர்தல் நளை நடக்கும் என்கிற நிலையில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி தவிர யாரும் போட்டியிடாததால் வேட்புமனுவை பரிசீலித்து ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி இருவரும் போட்டியின்றி தேர்வானதாக தேர்தல் அதிகாரி பொன்னையன் அறிவித்தார்.

செயலலிதா மறைவுக்குப்பின் சசிகலா அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். பின்னர் சசிகலா 4 ஆண்டுகள் தண்டனைப்பெற்று சிறைச்சென்றார். அதிமுகவுக்கு தினகரன் துணைப்பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்டார். 


அதன் பின்னர் ஓ.பன்னீர் செல்வம் கட்சிக்குள் கொண்டுவரப்பட்டார். சசிகலா, தினகரன் உள்ளிட்டோர் நீக்கப்பட்டனர். கட்சி விதிகள் திருத்தப்பட்டு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், வழிகாட்டுக்குழு அமைக்கப்பட்டது. ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி தலைமைக்கு வந்தனர். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பொதுக்குழு மூலம் தேர்வு செய்யப்படலாம் என விதி திருத்தப்பட்டது. இந்நிலையில் கட்சிக்குள் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி இடையே அதிகார போட்டி எழுந்தது. மறுபுறம் சசிகலா கட்சிக்கு திரும்புவது குறித்து அவ்வப்போது அறிக்கை வெளியிட்டு வந்தார்.

சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் தோல்விக்கு பின் குழப்பமான நிலை ஏற்பட்டது. தலைமைக்குள் மோதலும், ஒற்றைத்தலைமை எனும் கோரிக்கையும், சசிகலாவின் பொதுச் செயலாளர் வழக்கும் சிக்கல்களாக எழுந்தன. கட்சியில் அதிகாரம் செலுத்துவதில் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி இடையே போட்டி எழுந்தது. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மோதல் எழுந்த நிலையில் நேற்று செயற்குழு கூட்டம் கூடியது.

நேற்று நடந்த செயற்குழு கூட்டத்தில் தற்காலிக அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டார். கட்சி விதிகள் 20, 43, 45, ஆகியவை திருத்தப்பட்டன. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பொதுக்குழு மூலம் தேர்வு செய்யப்படுவது களையப்பட்டது. கட்சியின் பொதுச் செயலாளர் போல் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்து நேரடியாக கட்சித்தொண்டர்களால் ஒற்றை வாக்கில் தேர்வு என விதி திருத்தப்பட்டது.

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு குறித்து பொதுக்குழு எந்த முடிவும் எடுக்க முடியாது, கட்சி விதிகளில் அனைத்து திருத்தங்களை செய்ய ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு அதிகாரம் உண்டு அதே நேரம் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு குறித்து ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் முடிவு எதுவும் எடுக்க அதிகாரமில்லை என்று திருத்தப்பட்டது.

இந்நிலையில் கட்சியின் உட்கட்சி தேர்தல் குறித்து அறிவிப்பு வெளியானது. பொதுக்குழுவில் வைக்காதது, போதிய காலக்கெடு இல்லாமல் தேர்தல் நடத்துவது சரியல்ல என்கிற வாதம் எழுந்தது.

தேர்தல் அறிவிப்பு முறையாக இல்லை, வாக்காளர் பட்டியல் இல்லை, போதிய காலக்கெடு தரப்படாமல் தேர்தல் நாள் அறிவிக்கப்பட்டுள்ளதாக தேர்தலுக்கு தடைவிதிக்க வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தொடர்ந்த வழக்கில் தடைவிதிக்க மறுத்த உயர் அறங்கூற்றுமன்றம் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி விடையளிக்க கவனஅறிக்கை அனுப்பியது.

இந்நிலையில் வேட்புமனுவை வாங்க வந்த ஓட்டேரி ஓம்பிரசாத் சிங் தாக்கப்பட்டார். மறுநாள் சில பேர் தாக்கப்பட்டனர். இதனால் தங்களுக்கு எதிராக நிற்பவர்களை அச்சுறுத்தி யாரையும் எதிர்த்து போட்டியிடாமல் செய்ய வைக்க முயல்கிறார்கள் என்று எதிர்ப்பாளர்கள் குற்றம் சாட்டினர். ஆனாலும் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டப்படி வேட்புமனு பதிகை செய்தனர்.

இந்நிலையில் அவர்கள் வேட்புமனுக்கல் நேற்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி இருவருக்கும் ஆதரவாக கட்சியில் 20 க்கும் மேற்பட்டோர் வேட்புமனு பதிகை செய்திருந்தனர். இருவர் வேட்புமனுவையும் பரிசீலிக்கும் பணி நேற்று தொடங்கியது. இந்நிலையில் இன்று தேர்தல் முடிவுக்கு தடைகோரி உயர் அறங்கூற்றுமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அது நாளைக்கு விசாரணைக்கு வர உள்ளது.

இந்நிலையில் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி இருவரும் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதாக தேர்தல் அதிகாரிகள் பொன்னையன் மற்றும் பொள்ளாச்சி ஜெயராமன் அறிவித்தனர். இருவரையும் எதிர்த்து யாரும் போட்டியிடாததாலும் வேட்புமனுக்களை பரிசீலனை செய்தபோது அது கட்சி விதி 20(2)-ன் படி சரியாக இருந்ததாலும் இருவரையும் போட்டியின்றி தேர்வு செய்வதாக பொன்னையன் அறிவித்தார்.

இருவரும் தேர்வு செய்யப்பட்ட நிலையில் அதை ஒரு விழாவாக நடத்தி இருவரும் பொறுப்பேற்க உள்ளனர். அதற்கான நாள் நேரம் இடம் உள்ளிட்டவைகள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிகிறது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,089.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.