Show all

ஸ்டாலின் அரசின் முதலாவது வரவுசெலவுத் திட்டம்! பெட்ரோல் விலை ரூ.3 குறைப்பு

இந்த முறை வரவுசெலவுத் திட்ட பதிகையில் புதிய நடைமுறை நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது. அதாவது, காகிதமில்லா சட்டமன்றத்தை முன்னெடுக்கும் வகையில், உறுப்பினர்களுக்கு புத்தகமாக வரவுசெலவுத் திட்டத்தை வழங்காமல், கணினியில் பார்த்து தெரிந்துகொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

29,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள நிலையில், நேற்று முதலாவது திருத்த நிதிநிலை (வரவுசெலவு) அறிக்கை பதிகை செய்யப்பட்டது.

இந்த முறை வரவுசெலவுத் திட்ட பதிகையில் புதிய நடைமுறை நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது. அதாவது, காகிதமில்லா சட்டமன்றத்தை முன்னெடுக்கும் வகையில், உறுப்பினர்களுக்கு புத்தகமாக வரவுசெலவுத் திட்டத்தை வழங்காமல், கணினியில் பார்த்து தெரிந்துகொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சரியாக காலை 10.04 மணிக்கு நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், வரவுசெலவுத் திட்ட உரையை படிக்கத் தொடங்கினார். 

காலை 10.07 மணிக்கு எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக உறுப்பினர்கள் வரவுசெலவுத் திட்ட உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

அதன்பிறகு, நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், தங்குதடையின்றி பேசினார். அவர் தனது உரையை 1.01 மணிக்கு நிறைவு செய்தார். அதாவது, தொடர்ந்து, 2 மணி நேரம் 57 நிமிடங்கள் அவர் உரையாற்றினார்.

மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் முதல் வரவுசெலவுத்திட்டம் என்பதால் பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. அதற்கேற்ப வரவுசெலவுத் திட்டத்தில் புதிய வரிகள் விதிக்கப்படவில்லை. பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டன. பெரும்பாலானவர்கள் எதிர்பார்த்த குடும்ப தலைவிகளுக்கான ரூ.1,000 வழங்கும் திட்டம் குறித்த அறிவிப்பும் வெளியிடப்பட்டது.

அந்த வகைக்கு- தகுதி வாய்ந்த குடும்பங்களை கண்டறிந்த பிறகு குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

அ. பயனாளர்கள் குறித்த போதிய அடிப்படை தரவு கிடைக்கப்பெறாத காரணத்தால், சமூக பொருளாதார நீதியை மேம்படுத்தும் அரசு நலத்திட்டங்களைத் திறம்படச் செயல்படுத்த இயலாத நிலை உள்ளது. அனைத்து மக்கள் மற்றும் குடும்பங்களின் உண்மையான பொருளாதார நிலையை நன்கு அறிய, அனைத்து துறைகளிலுள்ள தரவுகளை ஒன்றிணைப்பதற்கான முயற்சி எடுக்கப்படும். இந்த அடிப்படை முயற்சியின் மூலம் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு மானியங்கள் வழங்கப்படுவது மேம்படுத்தப்படும்.

ஆ. எதை அளவிட முடியாதோ, அதை மேம்படுத்த முடியாது. எனவே, மாநிலத்தில் உள்ள அனைத்து பொது சேவைகளிலும் மின்னணு அளவீட்டு முறைகள் அறிமுகப்படுத்தப்படும். கொள்முதல் செய்யும் அனைத்து துறைகளிலும் மின்னணு கொள்முதல் முறை கண்டிப்பாக பின்பற்றப்படும். அரசு கொள்முதல் முறைகளில் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசிற்கென, தனி மின்னணு கொள்முதல் வலைத்தளம் ஒன்று உருவாக்கப்படும்.

இ. திறனையும், வெளிப்படைத்தன்மையும் மேம்படுத்துவதற்காக, திட்டமிடுதல், விலை விவர அட்டவணையை புதுப்பித்தல், விலை பட்டியலைப் புதுப்பித்தல், திட்ட வடிவமைப்பு, பணிகளின் மதிப்பீடுகள், ஒப்பந்தப்புள்ளிகள், பணிகளை அளவிடுதல் மற்றும் பணி பட்டியல்களுக்கு பணம் செலுத்துதல் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்ப துறைகளின் நடைமுறைகளும் முழுமையாக கணினிமயமாக்கப்படும்.

ஈ. சட்டமன்றத்தின் நூற்றாண்டை குறிக்கும் வகையில், வரலாற்று சிறப்புமிக்க இந்த மன்றத்தில் நூறாண்டு நடைபெற்ற நிகழ்வுகள் குறித்த ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்படும். பேரவையின் நிதிக்குழுக்களின் (மதிப்பீடு, பொது கணக்கு, பொதுத்துறை நிறுவனங்கள்) செயல்பாட்டை வலுப்படுத்துவதற்காக, உரிய அலுவலர்களுடன் கணினிமயமாக்கப்பட்ட சிறப்பு செயலகம் அமைக்கப்படும்.

உ. காவல்துறையில் ஒப்பளிக்கப்பட்ட 1,33,198 பணியிடங்களில், மீதமுள்ள 14,317 காலி பணியிடங்களை நிரப்ப உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பெரும் குற்றங்களில், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், இணையவழி குற்றங்கள், பொருளாதார குற்றங்களுக்கு உரிய தண்டனைகள் பெற்றுத்தரும் வகையில் விரைவாக விசாரணைகள் மேற்கொள்வதில் சிறப்பு கவனம் செலுத்தப்படும். காவல்துறைக்கு மொத்தம் ரூ.8,930.29 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஊ. தற்போதுள்ள 1985-ம் ஆண்டு தீயணைப்பு சேவைகள் சட்டம் முழுமையாக மாற்றியமைக்கப்படும். மீட்பு படையினர் குறைவான நேரத்திற்குள் வந்து சேரும் வகையில், புதிய தீயணைப்பு நிலையங்களின் அமைவிடங்கள் இயல்அறிவுப் பாடாக வரைபடங்களின் உதவியுடன் தேர்வு செய்யப்படும். இத்துறைக்கு ரூ.405.13 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

எ. தமிழ்நாட்டின் காடு மற்றும் மரங்களின் அடர்த்தியை மாநிலத்தின் நிலப்பரப்பில் 33 விழுக்காடாக உயர்த்துவதற்காக, தமிழ்நாடு பசுமை இயக்கத்தை அரசு ஏற்படுத்தவுள்ளது. பொது மற்றும் தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்புடனும், மக்களின் முழுஅளவிலான பங்களிப்புடனும், பலதரப்பட்ட நம் மண்சார்ந்த மரங்களை நடுவதற்கு பெரும் மரம் நடவுத் திட்டம் ஒன்று அடுத்த 10 ஆண்டு காலத்தில் செயல்படுத்தப்படும்.

ஏ. பருவநிலை மாற்ற மேலாண்மை மற்றும் தணிப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதற்காக, இந்த அரசு மொத்தம் ரூ.500 கோடி செலவில் பருவநிலை மாற்ற இயக்கம் ஒன்றினை அமைக்கும்.

ஐ. கிராமப்புர ஏழைகளுக்கு கான்கிரீட் கூரை வீடுகளை வழங்கும் திட்டத்தின்கீழ், ஏற்கனவே கட்டுமானத்திற்காக எடுத்துக்கொள்ளப்பட்ட 2,14,629 வீடுகள் இன்றும் நிறைவு செய்யப்பட வேண்டியுள்ளன. முழுமையடையாத அனைத்து வீடுகளும் விரைந்து முடிக்கப்படுவதை இந்த அரசு உறுதி செய்வதுடன், நடப்பு ஆண்டில் மொத்தம் ரூ.8,017.41 கோடி செலவில், மேலும் 2,89,877 வீடுகள் கட்டப்படும். கிராமப்புரங்களில் தற்போது வீடு இல்லாத 8,03,924 குடும்பங்களுக்கும் அடுத்த 5 ஆண்டுகளில் வீடு வழங்கப்படுவதை இந்த அரசு உறுதி செய்யும்.

ஒ. தற்போதுள்ள மேற்கூரைக்கான செலவான ரூ.50 ஆயிரத்துடன், கூடுதலாக மாநில அரசின் தரப்பில் இருந்து ரூ.70 ஆயிரம் வழங்கப்படுவதால், ஒரு வீட்டிற்கான அரசு மானியம் ரூ.2.76 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மிகவும் ஏழை, எளிய பயனாளர்களுக்கு விரைவாக, விலை குறைவாக வீடுகள் கட்டுவதற்காக, நவீன, விலை குறைவான கட்டுமான தொழில்நுட்பங்களை இந்த அரசு ஊக்குவிக்கும். 2021-22-ம் ஆண்டிற்கான திருத்த வரவு செலவுத்திட்ட மதிப்பீட்டில் கிராமப்புர வீட்டு வசதி திட்டத்தில், ரூ.3,548 கோடி வழங்கப்பட்டுள்ளது.


ஓ. சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்திற்கான நிதி, நடப்பு ஆண்டில் இருந்து ஒரு தொகுதிக்கு ரூ.3 கோடியாக மீண்டும் அளிக்கப்படும்.

ஔ. தமிழ்நாட்டில் 2.63 கோடி இருசக்கர வாகனங்கள் உள்ளன. இவைதான் எளிய உழைக்கும் வர்க்கம் அதிகமாக பயன்படுத்தும் போக்குவரத்து முறை. இவர்கள் பெட்ரோல் விலை உயர்வால் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். மத்திய அரசு பெட்ரோல் மீதான வரியை அதிகரித்து, மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்காமல் பெருமளவில் பயன் பெற்றதால், பெட்ரோலின் விலை உயர்விற்கு மத்திய அரசேதான் முழுமையாக பொறுப்பேற்க வேண்டும்.

இருப்பினும், முதல்-அமைச்சர், பெட்ரோல் விலை உயர்வால் பாதிக்கப்படும் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தின் வலியை உணர்ந்து, பெட்ரோல் மீது விதிக்கப்படும் வரியை ரூ.3 அளவிற்கு குறைக்க ஆணையிட்டுள்ளார். இதனால் ஆண்டுக்கு ரூ.1,160 கோடி வருவாய் இழப்பு ஏற்படும். 

க. இந்த அரசு, 2021-22-ம் ஆண்டில் ரூ.1,200 கோடி ஒதுக்கீட்டில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தை தொடங்கவுள்ளது. இத்திட்டம், குக்கிராம அளவில் நிலவும் அடிப்படை உட்கட்டமைப்பிற்கான இடைவெளிகளை நிறைவு செய்வதை உறுதி செய்யும்.

ங. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதாரத் திட்டம் புதுப்பிக்கப்பட்டு 36,218 சுயஉதவி குழுக்கள் பயன்பெறும் வகையில் ரூ.809.79 கோடி செலவில் 2021-22-ம் ஆண்டில் செயல்படுத்தப்படும். நடப்பு ஆண்டில் தமிழ்நாட்டில் உள்ள சுயஉதவி குழுக்களுக்கு வங்கிகளின் உதவியுடன் ரூ.5,500 கோடி சிறப்பு கொரோனா கடன் உள்பட ரூ.20 ஆயிரம் கோடி கடன் உறுதிசெய்யப்படும். தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம் சீரமைக்கப்பட்டு 2021-22-ம் ஆண்டில் மொத்தம் ரூ.212.69 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.

ச. நகர்ப்புரங்களில் உள்ள அனைவருக்கும் கழிப்பறை அணுகும் வசதி ஏற்படுத்தப்பட்டு, திறந்த வெளியில் மலம் கழிக்கும் நடைமுறை முற்றிலும் தடுக்கப்படும். அனைத்து நகர்ப்புற மக்களும் பயன்பெறும் வகையில் பாதாள சாக்கடை திட்டங்கள் அமைக்கப்படும். ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட 27 நகரங்களில் பாதாள சாக்கடை திட்டங்கள் செயல்படுத்தப்படும். கழிவுநீர் அமைப்பின் பேணுதல் முழுமையாக எந்திரமாக்கப்பட்டு செயல்படுத்தப்படும்.

ஞ. தமிழ்நாட்டின் அனைத்து நகர்ப்புரங்களிலும் ‘நமக்கு நாமே’ திட்டம் தீவிரமாக செயல்படுத்தப்படும். நமக்கு நாமே திட்ட பணிகளில் கணிசமாக பங்களிப்பவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் முதல்-அமைச்சரின் சிறப்பு விருது வழங்கப்படும். இத்திட்டத்திற்காக, ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மக்கள் சேவையில் மாநகராட்சி மற்றும் நமது சேவையில் நகராட்சி திட்டங்கள் மூலமாக அனைவருக்கும் இணையவழி சேவைகளை வழங்குவது உறுதி செய்யப்படும்.

ட. 15-வது நிதிக்குழு தனது அறிக்கையில் தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு மிகக் குறைந்த அளவே நிதி ஒதுக்கியுள்ளது. தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யும் நோக்கத்தில், ‘கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம்’ என்ற புதிய திட்டத்திற்கு ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் இந்த அரசு 2021-22-ம் ஆண்டு முதல் செயல்படுத்த உள்ளது.

ண. சீர்மிகு நகரங்கள் திட்டம் 31.3.2023-க்குள் நிறைவு செய்யப்படும். 2021-22-க்கான வரவு செலவுத்திட்ட மதிப்பீடுகளில், சீர்மிகு நகரங்கள் திட்டத்திற்கு ரூ.2,350 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

த. நகரமயமாக்கலை ஒழுங்குபடுத்தி, திட்டமிட்ட நகரங்கள் அமைவதை உறுதி செய்திட, புதிய பெருநகர வளர்ச்சிக் குழுமங்கள், மதுரை, கோயம்புத்தூர் - திருப்பூர் பகுதி, வேகமாக வளர்ந்து வரும் ஓசூர் பகுதிக்கு ஏற்படுத்தப்படும்.

ந. மாநிலத்தில் உள்ள வெண்பலகை கொண்ட நகர பேருந்துகளில் பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் 3-ம் பாலினத்தவர் ஆகியோர் இலவசமாக பயணிக்கலாம் என அறிவித்திருந்தார். இந்த நோக்கத்திற்காக, ரூ.703 கோடி மானியமாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.750 கோடி டீசல் மானியமாக வழங்கப்பட்டுள்ளது. ரூ.623.59 கோடி ஜெர்மன் வளர்ச்சி வங்கி உதவியுடன் 1,000 புதிய பேருந்துகள் வாங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ப. தமிழ்நாட்டின் வரலாற்று மரபு, தற்போதைய நிலைமை, எதிர்கால குறிக்கோள்களுக்கு ஏற்ப, மாநிலத்திற்கெனத் தனித்துவமான மாநில கல்வி கொள்கை ஒன்றை வகுப்பதற்கு, கல்வியாளர்கள் மற்றும் வல்லுநர்களைக் கொண்ட உயர்மட்ட குழு ஒன்றை இந்த அரசு நியமிக்கும்.

ம. பள்ளிக்கல்விக்கு அதிக முதன்மைத்துவம் அளிக்கப்படும் விதமாக இந்த வரவு-செலவு திட்டத்தில் மொத்தமாக ரூ.32,599.54 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

ய. மலைப்பாங்கான மற்றும் தொலைதூர பகுதிகளில் 12 தொடக்கப்பள்ளிகள் புதிதாக தொடங்கப்படுவதுடன், 22 பள்ளிகள் தரம் உயர்த்தப்படும். சிறப்பு தேவைகள் உள்ள குழந்தைகள் மற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படும்.

ர. நாள்தோறும் 8 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடும் திறன் பெற்றிருந்தும், 2.4 லட்சம் அளவில் மட்டுமே தடுப்பூசி வரப்பெறுகிறது. தமிழ்நாட்டு மக்களுக்கு போதுமான அளவில் தடுப்பூசி வழங்கவேண்டிய தேவையை முதல்-அமைச்சர், தலைமைஅமைச்சரின் கவனத்திற்கு அடிக்கடி எடுத்துச் சென்றார். மேலும், தனியார் மருத்துவமனைகளில் சி.எஸ்.ஆர். மூலம் இலவச தடுப்பூசி வழங்கும் முன்மாதிரி திட்டமும் செயல்படுத்தப்பட்டது.

ல. கொரோனா பெருந்தொற்றின் 3-வது அலையை எதிர்கொள்வதற்கு போதுமான மருத்துவ வசதிகளை இந்த அரசு உறுதி செய்து வருகிறது.

வ. முதல்-அமைச்சரால் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ எனும் மகத்தான முன்மாதிரி திட்டம் உருவாக்கப்பட்டு மொத்தம் ரூ.257.16 கோடி செலவில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

ழ. தலைவர் கருணாநிதி, தமிழ்நாடு சித்தா பல்கலைக்கழகத்தை அமைத்திட திட்டமிட்டார். அதற்கென, உரிய நிலமும் கண்டறியப்பட்டது. அதற்கு பின், இத்திட்டத்தை செயல்படுத்தவில்லை. மற்ற உள்நாட்டு மருத்துவ முறைகளைப் போல் சித்தாவிற்கும் உரிய அங்கீகாரம் அளிக்கும் விதமாக, தமிழ்நாடு சித்தா பல்கலைக்கழகத்தை இந்த அரசு அமைத்திடும். இதற்கென, முதல்கட்ட நிதியுதவியாகரூ.2 கோடி வழங்கப்படும்.

ள. மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறைக்காக மொத்தம் ரூ.18,933.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ற. தமிழ்நாட்டில் உள்ள நிலை-2 மற்றும் நிலை-3 நகரங்களிலும் தொழில்நுட்பப் பூங்காக்கள் ஏற்படுத்தப்படுகின்றன. முதல் கட்டமாக விழுப்புரம் மாவட்டத்தின் திருச்சிற்றம்பலம், வேலூர், திருப்பூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய இடங்களில் தொழில்நுட்பப் பூங்காக்கள் உருவாக்கப்படும்.

ன. கோயம்புத்தூரில், 500 ஏக்கர் பரப்பளவில், ரூ.225 கோடி மதிப்பில், பாதுகாப்பு கருவிகள் உற்பத்தி பூங்காவை மாநில அரசு அமைத்து செயல்படுத்தும். இதன் மூலம், ரூ.3500 கோடி மதிப்பிலான முதலீடுகள் ஈர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கா. தொழில் வளர்ச்சியில் பின்தங்கியுள்ள திருவண்ணாமலை, தர்மபுரி, திருநெல்வேலி, விருதுநகர், சிவகங்கை, விழுப்புரம், நாமக்கல், தேனி மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் புதிய சிப்காட் தொழிற்பூங்காக்கள் அமைக்கப்படும். இப்பூங்காக்களில், தயார்நிலையில் உள்ள தொழிற்கூடங்கள் உள்பட உலகத்தரம் வாய்ந்த உட்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படும். இதற்கென இப்பூங்காக்களில், முதற்கட்டமாக, ரூ.1,500 கோடி மதிப்பீட்டில், 4 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் மேம்படுத்தப்படும்.

ஙா. பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் மூலம் ஒரு புதிய சித்த மருத்துவ கல்லூரி தொடங்கப்பட்டு சித்தர்களின் அறிவாற்றலுடைய தொன்மைவாய்ந்த மருத்துவ முறையான சித்தமருத்துவம் மேம்படுத்தப்படும்.

சா. இரண்டிற்கும் குறைவான குழந்தைகள் உள்ள மகளிர் அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு கால விடுப்பு 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தப்படும் என்ற தேர்தல் அறிக்கையின் வாக்குறுதியை 1-7-2021 முதல் செயல்படுத்தப்படும்.

ஞா பணியில் இருக்கும்போது உயிரிழக்கும் அரசு பணியாளரின் குடும்பத்தினருக்கு, குடும்ப பாதுகாப்பு நிதியில் இருந்து வழங்கப்படும் உதவி மானியம் ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும். அதற்கிணங்க, குடும்ப பாதுகாப்பு நிதி திட்டத்தின் கட்டணம் மாதம் ஒன்றிற்கு ரூ.110 என உயர்த்தப்படும். குழு காப்பீட்டு திட்டத்தின் கீழ் உள்ள பணியாளர்களுக்கும் இது பயனளிக்கும்.

டா. மற்ற மாநிலங்களைப்போல் அல்லாமல், கொரோனா பெருந்தொற்று காலத்தில், தமிழ்நாட்டின் அரசு அலுவலர்களுக்கு தாமதமின்றி முழுமையாக சம்பளம் வழங்கப்பட்டது. பல்வேறு துறைகளில், அரசு அலுவலர்கள் தன்னலம் கருதாமல், அவர்களின் உயிரை பணயம் வைத்து சேவை ஆற்றினார்கள். இத்தருணத்தில், அகவிலைப்படியை உயர்த்துவதில் அரசு எதிர்கொள்ளும் நிதி நெருக்கடியை அரசு ஊழியர்கள் நன்கு அறிவார்கள். எனவே அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி 1-4-2022 முதல் வழங்கப்படும்.

ணா. சில மாவட்டங்களில் அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே சந்தேகத்திற்கு இடமான வகையில் அதிகமான அளவில் பயிர்க்கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. பயிர்க்கடன் தள்ளுபடி பெற்றவர்களின் தகுதியை ஆராய்ந்தபோது அடங்கலில் குறிப்பிட்டுள்ள பரப்பை விட கூடுதலாகவும், அடங்கலில் குறிப்பிடப்பட்டுள்ள பயிர் அல்லாமல் வேறு பயிரும், மேலும் அடங்களில் குறிப்பிடப்பட்டுள்ள பயிருக்கு அனுமதிக்கப்பட்ட கடனை விட கூடுதலாகவும் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நிகழ்ந்துள்ளன.

தா. தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களைப் பொறுத்தவரையில் மத்திய கூட்டுறவு கடன் சங்கங்களில் இருந்து அனுமதியில்லாமலும், தொகையைப் பெறாமலும், சில சங்கங்களில் கடன்கள் வழங்கப்பட்டன. மேலும், சில சங்கங்களில் திருப்பிச்செலுத்தப்பட்ட பல்வேறு கடன்களின் தொகையைக் கொண்டு பயிர்க்கடனை வழங்கியுள்ளன. இது அவர்கள் ஏற்கனவே வழங்கிய கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்காக புதிய கடன்கள் வழங்கப்பட்டதற்கு சமமாகும்.

நா. அதுபோலவே, வேளாண் நகை கடன்களில் அடமானம் வைக்கப்பட்ட நகைகளின் தரம் மற்றும் தூய்மை சரியாக கணக்கிடப்படவில்லை. எனவே, இந்த கடன் தள்ளுபடியை தொடர்ந்து அனுமதிக்கும் பட்சத்தில், தவறு செய்தவர்கள் பலரும் பலனைப் பெறக்கூடிய வாய்ப்புகள் நிகழும். எனவே, இந்த முறைகேடுகள் குறித்து தீர ஆராய்ந்து இத்திட்டம் முழுமையாகச் செயல்படுத்தப்படும்.

பா. இதுபோன்ற இதர நகை கடன்களை தள்ளுபடி செய்யும்போதும் இதே நிகழ்வு பொருந்தும் என்பதால் அதுகுறித்து உரிய விசாரணைக்கு பிறகு, தள்ளுபடி குறித்து இந்த முடிவு எடுக்கப்படும். அப்போதுதான் தவறு செய்பவர்கள் தவிர்க்கப்பட்டு, உண்மையான பயனாளிகள் பலன் அடைவர்.

மா. மகளிர் சுயஉதவி குழு கடன்களைப் பொறுத்தவரையில், இந்த கடன்கள் அனைத்தும் தகுதியான குழுக்களுக்கே சென்றடைந்துள்ளது என்பது முதற்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும், இந்த குழுக்கள் கொரோனா பெருந்தொற்று காலம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதால், இந்த கடன்கள் குறித்து சாதகமான முடிவு எடுக்க இயலும். அதன்படி, கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன் தொகை ரூ.2,756 கோடி தள்ளுபடி செய்யப்படும். கூட்டுறவு சங்கங்கள் கடன் வழங்குவதற்கு ஏதுவாக, இச்சங்கங்களுக்கு பல்வேறு கட்டங்களில் நிதி வழங்குவதற்கான நடைமுறையை அரசு வகுக்கும். இதற்காக, ரூ.600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு வரவுசெலவுத் திட்ட உரையில் அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.