Show all

இந்திய, விடுதலைவரலாறு அறியாத வடஇந்திய அதிகாரிகளின் குளறுபடி! குடியரசு நாள் விழா அணிவகுப்பில் தமிழ்நாடு ஒப்பனை ஊர்திக்கு மறுப்பு

குடியரசு நாள் விழா அணிவகுப்பில், தென்மாநிலங்களில், கர்நாடகாவைத் தவிர தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநில ஒப்பனை ஊர்திகளும் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

04,தை,தமிழ்த்தொடராண்டு-5123: டெல்லியில் ஆண்டுதோறும் குடியரசு நாள் விழாவையொட்டி 13,தை அன்று (ஜனவரி 26) அணி வகுப்பு நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டும் டெல்லியில் அணிவகுப்பு நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் நாட்டிலுள்ள ஒவ்வொரு மாநிலங்களும், அந்த மாநிலங்களின் பண்பாடு, கலாசாரத்தை பறைசாற்றும் விதமாக ஒப்பனை ஊர்திகளை அடையாளப்படுத்துவது வழக்கம்.

டெல்லியில் நடைபெற உள்ள குடியரசு நாள்விழா அணிவகுப்பில் கேரளா, மேற்கு வங்கத்தை தொடர்ந்து, தமிழ்நாடு அரசின் சார்பில் பங்குபெற இருந்த ஒப்பனை ஊர்திகள் நிராகரிக்கப்பட்டுள்ளது.

தென்மாநிலங்களில் கர்நாடகாவைத் தவிர அனைத்து மாநில ஒப்பனை ஊர்திகளும் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழ்நாட்டின் சார்ப்பில் குடியரசு நாள் அணிவகுப்பில் கலந்து கொள்ள கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி, வீரமங்கை வேலுநாச்சியார், பாரதியார் உருவப்படங்கள் ஆகியன ஒப்பனை ஊர்தியில் இடம் பெற்றிருந்தன. தமிழ்நாடு அரசின் ஒப்பனை ஊர்தி 4-வது சுற்று வரை சென்ற நிலையில், வ.உ.சி, வேலு நாச்சியார் ஆகியோர் பேரறிமுகமான விடுதலைப் போராட்ட வீரர்கள் இல்லை எனக்கூறி நிராகரித்ததாகக் கூறப்படுகிறது.

தங்களுக்கு கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி, வீரமங்கை வேலுநாச்சியார், ஆகியோர் பேரறிமுகமான விடுதலைப் போராட்ட வீரர்களாகத் தெரியவரவில்லை என்று ஒன்றிய அரசு அதிகாரிகள் கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

குடியரசு நாள் விழாவில் தமிழ்நாட்டு ஊர்திகள் புறக்கணிக்கப்பட்டது தொடர்பாக முதல்வர் ஒன்றிய அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகவும், இந்திய விடுதலை வரலாறு அறியாத வடஇந்திய அதிகாரிகளின் இந்தக் குளறுபடி குறித்து ஒன்றிய அரசுக்கு மடல் எழுத வாய்ப்பு இருப்பதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. 

இந்த ஆண்டுக்கான ஒப்பனை ஊர்திகள் இறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் இதனால் நிராகரிக்கப்பட்ட மாநிலங்கள் சார்பில் ஒப்பனை ஊர்திகள் இந்த முறை கலந்து கொள்ள முடியாது எனவும் கூறப்படுகிறது.

குடியரசு நாளன்று மேற்குவங்காளத்தின் சார்பில் பங்கேற்கும் ஒப்பனை ஊர்திக்கு ஒன்றிய அரசு அனுமதி மறுத்திருப்பது அதிர்ச்சியளிப்பதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். 

இந்த ஆண்டு டெல்லியில் குடியரசு நாள்விழாவை முன்னிட்டு மேற்கு வங்காளத்தின் சார்பில் பங்கேற்கும் ஒப்பனை ஊர்திக்கு மட்டும் ஒன்றிய அரசு அனுமதி மறுத்துள்ளதாக முதலில் தகவல் வெளியாக மேற்கு வங்க மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேற்கு வங்க ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்து, தலைமைஅமைச்சர் மோடிக்கு மடல் ஒன்றை எழுதியுள்ளார். அந்த மடலில், குடியரசு நாள் விழா அணிவகுப்பில் மேற்குவங்க ஒப்பனை ஊர்திக்கு அனுமதி மறுத்திருப்பது அதிர்ச்சி அளித்துள்ளது. 
இந்திய விடுதலைப் போராட்டத்தில் மேற்குவங்கம் முன்னணியில் இருந்தது. நாட்டின் விடுதலைக்காக மிகப்பெரிய விலையை செலுத்தியுள்ளது மேற்கு வங்கம். சுபாஷ் சந்திரபோஸின் 125-ம் ஆண்டு பிறந்த நாளையொட்டி, மேற்கு வங்கத்தின் சார்பில் அவரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையிலாக ஒப்பனை ஊர்திகள் சிறப்பாக தயார் செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஈஸ்வர் சந்திர வித்யாசாகர், ரவீந்திரநாத் தாகூர், சுவாமி விவேகானந்தர், மற்றும் பல தேச பக்தர்களின் உருவப்படங்களை ஊர்தி சுமந்து செல்ல இருக்கிறது. இதனால் ஒன்றிய அரசு இது குறித்து மறுபரிசீலனை செய்து குடியரசுநாள் விழாவில் மேற்கு வங்க ஒப்பனை ஊர்திகளுக்கு அனுமதியளிக்க வேண்டும்' என்று அந்த மடலில் மம்தா கோரிக்கை விடுத்துள்ளார். 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,131.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.