Show all

மழையின் வடிகால் தேடலில் நிகழ்ந்த சோகம்! குளிரூட்டிக்குள் இருந்த பாம்பு கடித்து முதியவர் பலி

இயற்கையின் வாழ்வாதாரமான மழைக்கு ஏரி குளம் குட்டைகள் வடிகால் பகுதிகள். மனிதனின் பொறுப்பின்மையால் ஆங்கே வீடுகள் முளைத்ததால், வீட்டுக்குள் மழையும், குளிரூட்டி வரை எலியும் பாம்பும் பயணிக்கின்றன.  

29,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123: சென்னையில் நல்லப் பாம்பு கடித்து 66 அகவை முதியவர் உயிரிழந்த நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை பள்ளிக்கரணை வ.உ.சி தெரு சிண்டிகேட் வங்கி காலனி பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் சிறிதரன் அவரது மனைவி, மகன் மற்றும் மகள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மதியம் 1 மணி அளவில் சிறிதரன் வீட்டில் உள்ள குளிரூட்டியில் இருந்து இறந்து போன எலியொன்று கட்டில் மேலே விழுந்துள்ளது. 

அந்த எலி குளிரூட்டியில் இருந்துதான் விழுந்திருக்க வேண்டும் என்று கருதிய சிறிதரன் அந்தக் குளிரூட்டியை திறந்து பார்த்துள்ளார். குளிரூட்டிக்குள் மறைந்திருந்த நல்லபாம்பு அவரின் கைவிரல்களில் கொத்தியுள்ளது. 

பின்னர் வலியால் துடித்த அவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர். அவரது நிலை மோசமாக இருந்ததால் அனுமதிக்க மறுத்த தனியார் மருத்துவமனை அவரை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு கூறிவிட்டது. 

இதையடுத்து உடனே அரசு மருத்துவமனைக்கு சிறிதரனை அழைத்து வந்து அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் அவர் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று மாலை 4.30 மணி அளவில் உயிரிழந்துவிட்டார். 

இந்த நிகழ்வு குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து நிகழ்வு இடத்திற்கு வந்த பள்ளிக்கரணை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறிதரனைக் கடித்த நல்லப் பாம்பை தீயணைப்பு துறையினர் பிடித்துச் சென்றனர். 

சென்னையில் கடந்த ஒரு கிழமையாக மழை பெய்துவரும் நிலையில், பெரும்பாலான இடங்களில் தண்ணீர் தேங்கியது. சென்னையின் புறநகர்ப் பகுதிகளான தாம்பரம், முடிச்சூர், வேளச்சேரி, பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததால் வீடுகளுக்கு பாம்பு, பூரான், தேள் உள்ளிட்ட நச்சு உயிரிகள் வந்து கொண்டிருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

சிறிதரனின் வீடு பள்ளிக்கரணையில் இருந்ததால் மழை வெள்ளத்தில் அடித்து வந்த பாம்புக்குத் தீனியாக எலி சிக்கியிருக்கும். எலியுடன் குளிரூட்டிக்குள் சென்ற பாம்பு முதியவரை கடித்திருக்கலாம் என கூறப்படுகிறது. 

இயற்கையின் வாழ்வாதாரமான மழைக்கு ஏரி குளம் குட்டைகள் வடிகால் பகுதிகள். மனிதனின் பொறுப்பின்மையால் ஆங்கே வீடுகள் முளைத்ததால், வீட்டுக்குள் மழையும், குளிரூட்டி வரை எலியும் பாம்பும் பயணிக்கின்றன.  
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,068.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.