Show all

வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை! சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ், சரவணா செல்வரத்னம் நிறுவனங்களில்

பத்துக்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை: சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ், சரவணா செல்வரத்னம் நிறுவனங்களில்.

15,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: சென்னையில் உள்ள சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ், சரவணா செல்வரத்னம் ஆகிய நிறுவனத்திற்கு சொந்தமான பத்துக்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

தி நகர், புரசைவாக்கம், போரூர், குரோம்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள சூப்பர் சரவணா ஸ்டோர்களில் சோதனை நடைபெறுகிறது. இதுவரை நடந்த சோதனையில் கைப்பற்றப்பட்டவை குறித்த விவரங்களை இன்னும் அதிகாரிகள் விவரிக்கவில்லை.

இந்த நிறுவனம் 52 ஆண்டுகளுக்கு முன்பு பாத்திரக்கடையாக தொடங்கப்பட்டு படிப்படியாக பல்பொருள் அங்காடியாக இந்த நிறுவனம் மதுரை, திருநெல்வேலி, கோவை உள்ளிட்ட இடங்களிலும் தொடங்கப்பட்டுள்ளது. நிறுவனம் மெல்ல வளர்ந்து தற்போது மும்பை, டெல்லி, பெங்களூரிலும் தொடங்குவதற்கு ஆயத்தமாகி வருகிறது.

ஐந்து மாடிகளுக்கு மேல் கொண்டுள்ள இந்தக் கடையில் குண்டூசி முதல் நகை வரை அனைத்தும் கிடைக்கும். தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், ரம்ஜான் உள்ளிட்ட விழா நாட்களில் கடைகளுக்கு லட்சக்கணக்கானோர் வருகை தருவர். அது போல் சனி, ஞாயிறுகளிலும் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதும்.

இந்த கடையில் நுழைந்துவிட்டால் போதும் திருமணம், புது வீடு உள்ளிட்டவைகளுக்கு தேவையான அனைத்தையும் வாங்கிவிடலாம். விலையும் சற்று குறைவாக இருக்கும் என்பதால் இங்கு மக்கள் குழுமுகிறார்கள். இந்தக் கடையை போல் லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ், சரவணா செல்வரத்னம் ஆகியவை உள்ளன. இவற்றை சகோதரர்களின் குடும்பத்தினர் நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் இந்த சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் சரவணா செல்வரத்னம் ஆகியவற்றின் சென்னை கிளைகளில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். காலையில் உள்ளே சென்ற அதிகாரிகள் இன்னும் வெளியே வரவில்லை. 

வரி ஏய்ப்பு கணக்கில் வராத முதலீடு என்று சோதனைக்கு காரணம் சொல்லப்படுகிறது. 10 இடங்களுக்கு மேல் இந்த சோதனை நடத்தப்படுகிறது. கடைக்குள் எந்த ஊழியர்களும் அனுமதிக்கப்படவில்லை. இந்த சோதனை இன்று முடியாது என தெரிகிறது. இதுவரை நடத்தப்பட்ட சோதனையில் என்னென்ன கைப்பற்றப்பட்டது என்பது குறித்து அதிகாரிகள் இதுவரை தெரிவிக்கவில்லை.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சரவணா ஸ்டோர் அண்ணாச்சி கடைகளில் வரி ஏய்ப்பு செய்ததாக சோதனை நடந்தது. இந்த நிறுவனத்திற்கு சொந்தமான தி நகர், பாடி உள்ளிட்ட 70 க்கும் மேற்பட்ட இடங்களில் அந்தச் சோதனை நடத்தப்பட்டது. அப்போது ரூ 434 கோடி மதிப்பிலான பணம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. கைப்பற்றப்பட்டவை கணக்கில் வராத பணம் என்றும் சொல்லப்பட்டது. இந்த நிலையில் இன்று சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ், சரவணா செல்வரத்தினம் கடைகளில் சோதனை நடத்தப்படுகிறது.

எந்தவொரு நிறுவனமும் அரசு அங்கீகாரம் பெற்ற கணக்காய்வாளரை வைத்து கணக்கு எழுதுகிறது. ஆண்டுக்கு ஆண்டு தவறாமல் கணக்கு காட்டுகிறது. வரியும் கட்டுகிறது. இப்படி பல்வேறு நிறுவனங்களில் அவ்வப்போது சோதனையும் நடக்கிறது. 

ஆனாலும் எந்த அரசும்- நிறுவனங்கள் இப்படியான சிக்கலுக்கு உள்ளாவதில் தவறு முழுக்க முழுக்க அந்தந்த நிறுவனங்கள் சார்ந்ததா? அந்த நிறுவனங்களுக்கு கணக்கு எழுதும் காணக்காய்வாளர்கள் சார்ந்ததா? அரசு அதிகாரிகள் சார்ந்ததா? அரசின் பொருளாதாரக் கோட்பாடு சட்டதிட்டங்கள் சார்ந்ததா? என்று ஆய்வுக்கு உட்படுத்தாமல் பணத்தின் மீதான தீண்டாமையை இதுபோன்ற கடும் நடவடிக்கைகள் மூலம், மக்களுக்கு கருத்துப்பரப்புதல் செய்து வருகின்றன.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,084.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.