Show all

சீமான் நம்மாளுதான்! பாஜகவினர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு கொண்டாட்டம்

வெளிநாட்டு சமயங்களான கிறிஸ்தவர்கள் முஸ்லிம்கள் தாய்மதமான ஹிந்து மதத்துக்கு திரும்ப வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாக பாஜகவினர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு கொண்டாடி வருகின்றனர்.

31,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5123: நாங்கள் தமிழர்கள். எங்கள் சமயம் வேறு. எங்கள் வழிபாட்டு முறை வேறு. எங்கள் தெய்வங்கள் வேறு. எங்கள் சமயமே வேறு. இதில் உறுதியாக இருக்கிறோம். எங்களுடைய சமயம், மெய்யியல் கோட்பாடு என அனைத்தையும் மீட்டெடுப்போம் என்கிற முழக்கம் இன்னொரு தளத்தில் நாம் தமிழர் கட்சி முன்னெடுத்துவரும் முழக்கமாகும்.

'வீரத்தமிழர் முன்னணி' என்பது நாம் தமிழர் கட்சியின் இந்த வகைக்கான ஒரு துணை அமைப்பாகும். இது தமிழர் மெய்யியல் மீட்பை நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

வீரத்தமிழர் முன்னணி 24,தை,தமிழ்த்தொடராண்டு-5116: அன்று (07.02.2015) பழனி நகரில் உள்ள பழனி ஆண்டவர் கல்லூரியில் தொடங்கப்பட்டது. இதனைத் தொடங்கிய சீமான் தெய்வநம்பிக்கை கொண்டவர்கள், திருவள்ளுவர் நெறிகளைப் பின்பற்றுவோர்களுக்காக இந்த இயக்கம் தொடங்கப்பட்டதாகவும் இது திராவிட இயக்கத்திற்கு மாற்றாகச் செயற்படும் என்றும் தெரிவித்தார்.

திருசெந்தூர் முருகன் கோவிலில் தமிழில் வழிபாடு நடத்த கோரி பேரணி, வேல் வழிபாட்டை கடந்த ஐந்து ஆண்டுகளாக முருகனுக்கு உகந்த நாளான தைப்பூச நாளில் கொண்டாடி வருகிறது. ஒவ்வொரு தைப்பூச நாளன்றும் தமிழ்நாடு அரசு அரசுப்பொது விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது வீரத்தமிழர் முன்னணி.

நேற்று ஒரு நிகழ்வில் பேசிய சீமான், என்னுடைய மகனை வடபழனி முருகன் கோவிலுக்கு கூட்டிச் சென்ற போது என்ன கோத்திரம் என கேட்டனர். நான் சிவகோத்திரம் என்றேன். ஏனெனில் நாங்கள் சிவசமயம். எங்கப்பாவின் சொத்து பத்திரத்தில் சிவகோத்திரம் என்றுதான் எழுதி உள்ளது. வாங்க எங்க வீட்டில் காட்டுகிறேன். 

இன்றைக்கு அஸ் பர் ஹிந்து லா என்கிறீர்கள். அன்றைக்கு சிவசமயம் என்றுதான் எழுதி இருக்கிறது. எங்கள் சமயம் சிவனை வழிபடுவதால் சிவசமயம். முருகனை வழிபடுவதால் சைவம். மாயோனை வழிபடுவதால் கண்ணனை வழிபடுவதால் வைணவம். வைணவம் என்பதை தூய தமிழில் மாலியம் என்கிறோம், என்று பேசினார்.

அப்போது செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் வகையில், கிறிஸ்தவமும் இஸ்லாமும் தமிழர் சமயமே இல்லையே? ஒன்று ஐரோப்பிய மதம். இன்னொன்று அரேபிய மதம். என்னுடைய சமயம் சைவம். என்னுடைய சமயம் மாலியம். என்னுடைய சமயம் சிவசமயம். திரும்பி வா! மரச்செக்கு எண்ணெய்க்கு திரும்பியதைப் போல சீனியைவிட்டுட்டு கருப்பட்டிக்கு வருகிற மாதிரி திருப்பி வா! இவ்வாறு சீமான் கூறியுள்ளார். 

இந்தச் செய்தியின் அனைத்து அடிப்படைகளையும் வசதியாக மறைத்துவிட்டு, தமிழர்களை ஹிந்துக்காளாக நிறுவிக்கொண்டு- இஸ்லாம், கிறித்துவத்திலிருந்து சீமான் மீளச்சொன்னதுபோல், சீமான் நம்மாளுதான்! என்று பாஜகவினர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு பொல்லாங்கு பொய்ப் பரப்புரையில் ஈடுபட்டு மகிழ்ந்து கொண்டாடி வருகின்றனர்.  
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,039.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.