Show all

கர்நாடகாவில்- எந்த வெளிநாடுகளுக்கும் செல்லாத 46 அகவை மருத்துவருக்கு ஒமிக்ரான் குறுவி தொற்று! குழப்பத்தில் நலங்குத்துறை

இந்தியாவிலும் ஒமிக்ரான் குறுவி நுழைந்திருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. கர்நாடகாவில் இருவருக்கு இந்த குறுவி பாதிப்பு உறுதியானதாக நேற்று ஒன்றிய நலங்குத்துறை அறிவித்துள்ளது. 

17,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: கொரோனா குறுவியின் உருமாறிய ஒமிக்ரான் எனும் புதிய வகை உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில் முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்ட ஒமிக்ரான் வகை கொரோனா குறுவி, மிக வேகமாக பரவக்கூடியது என்பதால் ஆபத்தானதாக இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

உலகை அச்சுறுத்தி வரும் புதிய வகையான ஒமிக்ரான் குறுவி இதுவரை 29 நாடுகளைச் சேர்ந்தவர்களைப் பாதித்திருக்கும் நிலையில் இந்தியாவிலும் இந்தக் குறுவி நுழைந்திருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. கர்நாடகாவில் இருவருக்கு இந்த குறுவி பாதிப்பு உறுதியானதாக நேற்று ஒன்றிய நலங்குத்துறை அறிவித்துள்ளது. 

கர்நாடகாவைச் சேர்ந்த 46 அகவை மருத்துவர் ஒருவருக்கும் தென் ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியா வந்த ஒருவருக்கும் தாம் ஒமிக்ரான் குறுவித் தொற்று உறுதி செய்யப்பட்டதாக ஒன்றிய அரசு தெரிவித்தது. இதில் தென் ஆப்பிரிக்காவில் இருந்து வந்தவர் வரும்போதே கோவிட் இல்லை சான்றுடன் தான் வந்திருக்கிறார். இங்கு வந்த பின்னர் அவருக்கு எடுக்கப்பட்ட சோதனையில் கொரோனா இருப்பது தெரிந்து தனிமை சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் கொரொனா குணமானவுடன் அவர் துபாய்க்கு புறப்பட்டு சென்றுவிட்டார். இங்கிருந்து கிளம்பிய பின்னரே அவருக்கு வந்திருந்தது ஒமிக்ரான் வகை கொரோனா என்று தெரியவந்திருக்கிறது.

இதனிடையே கர்நாடகாவைச் சேர்ந்த ஒமிக்ரான் வகை கொரோனாவால் பாதிக்கப்பட்ட 46 அகவை மருத்துவர் எந்த வெளிநாடுகளுக்கும் செல்லாத நிலையில் பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது. இரண்டு தடவை தடுப்பூசிகளும் எடுத்துக்கொண்ட இவருக்கு கடந்த 12 நாட்களுக்கு முன்பு அறிகுறிகள் தென்பட்டது. பின்னர் அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 3 நாட்கள் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியிருக்கிறார்.

இந்த மருத்துவருக்கு தற்போது ஒமிக்ரான் இருப்பது உறுதியான நிலையில், அவரின் தடம் கண்டறிதலை மாநில நலங்குத்துறையினர் மேற்கொண்டுள்ளனர். இதில் அவரின் நேரடி தொடர்புகள் 13 பேரும், மறைமுக தொடர்புகள் 250 பேரும் இருப்பதாக தெரியவந்திருக்கிறது. 

இந்த தொடர்புகளில் 5 பேருக்கு தற்போது கொரோனா இருப்பது ஆகியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஐந்து பேரும் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்கானிப்பில் இருந்து வருவதாக நலங்குத்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த ஐந்து பேரில் மாதிரிகளும் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. இவர்களுக்கும் ஒமிக்ரான் வகை கொரோனா இருக்கிறதா என்பது வரும் நாட்களில் தான் தெரியவரும்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,086.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.