Show all

சாதியும் வேண்டாம் மதமும் வேண்டாம்! சான்றிதழ் பெறப்பட்டுள்ளது ஒரு சிறுமிக்கு

கோவை மாவட்டத்தில், ஒரு குழந்தைக்கு சாதி, மதம் இல்லை சான்றிதழ் பெறப்பட்டுள்ளது.

16,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5124: கோவை கே.கே.புதூரை சேர்ந்த முப்பத்தி மூன்று அகவை நரேஷ் கார்த்திக், தனது மூன்றரை அகவை மகளை மழலையர் பள்ளியில் மொட்டு (எல்.கே.ஜி) வகுப்பில் சேர்க்க பல்வேறு பள்ளிகளை நாடினாராம். விண்ணப்பத்தில், சாதி, மதம் குறிப்பிடமல் இருக்க பள்ளிகளில் அனுமதி கிடைக்கவில்லை என்று தெரிவிக்கிறார். இதையடுத்து அவர் தனது குழந்தைக்கு, சாதி, மதம் இல்லை என்ற சான்றிதழை பெற முயன்றுள்ளார். வருவாய் துறை முதல் முறையாக அவரின் குழந்தைக்கு இந்த சான்றிதழ் வழங்கியுள்ளது.

நரேஷ் கார்த்திக் கூறியதாவது: பெற்றோர் தங்களது குழந்தைகளின் சாதி, மதம் குறித்து குறிப்பிடத் தேவையில்லை என, தமிழ்த்தொடராண்டு-5075ல் (1973) தமிழ்நாடு அரசு, அரசாணை வெளியிட்டுள்ளது. இது குறித்து பல பள்ளிகளுக்கும் தெரியாமல் இருந்தது தான் வேதனைக்குரிய விடையம். வருவாய் துறையினரை சந்தித்து பேசியபோது அவர்களுக்கும் இதுகுறித்து தெரியவில்லை.

கோவை மாவட்ட ஆட்சியரைத் தொடர்பு கொண்டபோது அவர் வடக்கு வட்டாட்சியரைத் தொடர்புகொள்ள அறிவுறுத்தினார். அதன் பின்னரே குழந்தைக்கு, சான்றிதழ் கிடைத்தது. எனது குழந்தைக்கு வருங்காலத்தில் சாதி அடிப்படையான இடஒதுக்கீடு உள்ளிட்ட எந்த சலுகையும் தேவையில்லை. சாதியை இணைக்க விண்ணப்பிக்க மாட்டேன் என, உறுதி அளித்துள்ளேன்.

இது புதிய நடைமுறை என்பதால் சான்றிதழ் வழங்க காலதாமதம் ஏற்பட்டது. இனிமுயலும் குழந்தைகளின் பெற்றோர்களுக்குச் சான்றிதழ் எளிதில் கிடைக்கும். இவ்வாறு, அவர் கூறினார்.

இவரின் இந்த செயலை தெளிவான நோக்கம் குறித்ததாக சொல்லமுடியவில்லை. தமிழ்ப்பற்றாளராக இனஓர்மை பாராட்டி முன்னெடுத்த செயலாகவும் தெரியவில்லை. குழந்தையை ஆங்கில வழிப்பள்ளியில்தான் கையளித்து குழந்தையின் தான்தோன்றிச் சிந்தனையை முடக்கத்தான் முயல்கிறார். ஏதோ ஒருவகையான ஆர்வக்கோளாறில் குழந்தையைத் தவறாக வழிநடத்துகிறாரோ என்றே ஐயுறத் தோன்றுகிறது. 

மதம் வேண்டாம் என்பதில் பிழையேதும் இல்லை. சாதி வேண்டாம் என்று அந்தக் குழந்தையின் இடஒதுக்கீடு என்கிற அடிப்படை உரிமையை மறுத்து இவர் உறுதிமொழி தரவேண்டிய கட்டாயம் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,264.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.