Show all

பாஜகவினருக்கு புரியவில்லை! தமிழ்தாய் வாழ்த்துப்பாடலை முழுமையாகப் பாடுவது ஹிந்துத்துவா கோட்பாட்டிற்கு வலுசேர்க்காது

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை முழுமையாகப் பாடுவது-  தமிழ்மக்களைத் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திவரும் வடமொழிக்கும், வடமொழி சார்புமொழியான ஹிந்திக்கும்- தமிழில் இருந்து தோன்றியவைகளே தெலுங்கு கன்னடம் மலையாள மொழிகள் என்கிற வரலாற்று கசப்பு மருந்தை அம்மொழியினருக்கு ஊட்டும் வகைக்கான நெருக்குதல்களை முன்னெடுப்பதற்கான உறுதிமொழியே ஆகும்.  

04,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: வெள்ளிக் கிழமையன்று, தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை தமிழ்நாடு அரசின் மாநிலப் பாடலாக அறிவித்து அரசாணை வெளியிட்டிருந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இதற்குப் பல தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்துவருகின்றன. 

இந்த நிலையில் பாஜகவினர் பலரும், முதலமைச்சரின் இந்த நடவடிக்கையைப் பாராட்டுகிறோம். ஆனால், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை முழுமையாகப் பாட வேண்டும் என்று கோரிக்கை வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை நாளது 08,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5072: அன்று (23.11.1970) அப்போதைய முதல்வர் கருணாநிதி தமிழ்த்தாய் வாழ்த்தாக அறிவித்து, அரசாணை வெளியிட்டார். அப்போதே அப்பாடலை முழுமையாகப் பயன்படுத்தாமல்- அதில் வரலாற்று அடிப்படையில் தமிழை தூக்கிப்பிடிக்கும் வகையான சில வரிகளை ஏன் நீக்க வேண்டும் என்று தமிழ் ஆர்வலர்களிடம் இருந்து கேள்வி எழுந்தது.

நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே!
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!
பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்
ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்

சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே!

தற்போது, தமிழ்நாடு பாஜக இந்தப்பாட்டில் ஏன் இவ்வளவு தீவிரம்காட்டுகிறது என்று மேற்கொண்ட விசாரணையில், பரம்பொருள் என்ற சொல் வரும் வரியை ஏன் நீக்க வேண்டும், என்பதே அவர்களுடைய ஆதங்கமாக இருக்கிறது என்பதையும், அந்த ஆதங்கத்தின் வெளிப்பாடாக நிறைய இட்டுக்கட்டி பேசிக் கொண்டிருக்கின்றனர் என்பதையும் மிக மிகத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகின்றது.

அன்று தமிழ் ஆர்வலர்கள், வரலாற்று அடிப்படையில் தமிழை தூக்கிப்பிடிக்கும் வகையான சில வரிகளை ஏன் நீக்க வேண்டும் என்ற கோணத்தைப் பற்றியெல்லாம் பாஜகவினர் கருதாமல்- 

அந்த வகைக்கு தமிழுக்கு உவமையாக சுந்தரனார் முன்னெடுத்திருந்த பரம்பொருள் என்கிற சொல் ஹிந்துத்துவா சொல் என்பதாகக் கருதிக் கொண்டு- அதை மட்டும் தமிழ்த்தாய் வாழ்த்தில் நிறுவிவிட்டால் ஒட்டுமொத்த தமிழ்நாடும் பாஜகவிற்கு களமாகிவிடும் என்கிற பகல்கனவு அவர்களின் இந்த முன்னெடுப்புக்கு காரணமாக அமைகிறது.

திமுக அங்கீகரித்த தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில்-எடுத்துக் கொள்ளப்படாத வரிகளில்- வெளி, விண்வெளி, விசும்பு என்று சொல்லப்படுகிற பரவெளியில்- 

மற்றுமொரு அமைப்பான- எத்தனையோ கோள்கள், புவிக்கோளில் உயிரினங்கள் என்று தொடர்ந்து மாற்றங்களை சந்தித்து வந்தாலும்- 

வெளி, விண்வெளி, விசும்பு என்று சொல்லப்படுகிற பரவெளி ஆகிய பரம்பொருள் மாறாதிருப்பதை உவமையாக்கி தமிழைப் பரம்பொருள் என்றும் கொண்டாடுகிற போது- 

மற்றொரு அமைப்பாக உலக வழக்கொழிந்த வடமொழி தமிழில் இருந்து உதித்த தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகியவற்றைப் பேசுகிறார் மனோன்மனியம் சுந்தரனார்.

தமிழை வாழ்த்தும் போது மற்ற அமைப்பின் மீது வைக்கப்டுகிற திறனாய்வு வேண்டாமே என்கிற காரணம் பற்றியே- 

திமுக அங்கீகரித்த தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில் தமிழுக்கு பரம்பொருளை உவமையாக்கி-

வடமொழிக்கும் தெலுங்கு மலையாளம் கன்னடம் மொழிகளுக்கு- மாறிக்கொண்டிருக்கிற மற்றொரு அமைப்பை உவமையாக்கிய வரிகள் எடுத்துக் கொள்ளப்படவில்லை. என்று தற்போதும் தெளிவு படுத்தப்பட்டு வருகிறது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,102.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.