Show all

முதல் கண்டனத்தை பதிவிட்டுள்ளார் அன்புமணி இராமதாசு! திண்டுக்கல்லில் இளைஞர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை

அன்புமணி இராமதாசுவின் கண்டன நிகழ்வுத் தொடர்பில்- திண்டுக்கல் சரக காவல்துறைத் துணைத் தலைவர் விஜயகுமாரி மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாசன் ஆகியோர் கொலைக்கான காரணம் குறித்தும், தப்பிய குற்றவாளிகளைப் பிடிக்கவும் தனிப்படை அமைத்து விசாரணை நடத்திவருகின்றனர்.

20,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: திண்டுக்கல் மேற்கு மரியநாதபுரத்தைச் சேர்ந்த மாணிக்கம் என்பவரின் மகன் ராகேஷ் குமாரை (26) ஒரு கும்பல் துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தப்பித்துள்ளது. 

மார்பு, வயிற்றுப் பகுதியில் குண்டுகள் பாய்ந்ததால் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த ராகேசை உடனிருந்த நண்பர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்துவிட்டு, ராகேசின் வலது விலா எலும்பு, வயிற்றுப் பகுதி என மொத்தம் ஆறு இடங்களில் குண்டுகள் துளைத்து அதிக உதிரப்போக்கு ஏற்பட்டதால் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து நிகழ்வு இடத்துக்கு வந்த திண்டுக்கல் சரக காவல்துறைத் துணைத் தலைவர் விஜயகுமாரி மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாசன் ஆகியோர் கொலைக்கான காரணம் குறித்தும், தப்பிய குற்றவாளிகளைப் பிடிக்கவும் தனிப்படை அமைத்து விசாரணை நடத்திவருகின்றனர். இதற்கிடையே மோப்ப நாய் ரூபியுடன் தடயவியல் நிபுணர்கள் நிகழ்வு இடத்தில் தடயங்களை சேகரித்தனர்.

செட்டிகுளத்தில் மீன் குத்தகை எடுப்பதில் இருந்த முன்பகை காரணமாக இளைஞர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

இது குறித்து திண்டுக்கல் சரக காவல்துறைத் துணைத் தலைவர் விஜயகுமாரி, உடற்கூறு ஆய்வு அறிக்கை கிடைத்தவுடன்தான் நாட்டுத் துப்பாக்கிப் பயன்படுத்தப்பட்டிருக்கிறதா என்பதை உறுதியாகக் கூற முடியும். குற்றவாளிகளைப் பிடிக்க ஏழு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. நள்ளிரவு முதலே தொடர்புடைய  அனைவரிடமும் விசாரணையைத் தொடங்கிவிட்டோம். பல்வேறு காரணங்கள் இருக்கலாம் என யூகித்தாலும் குற்றவாளிகளை பிடித்த பிறகே கொலைக்கான காரணம் குறித்து உறுதியாகக் கூற முடியும் என்றார்.

இது குறித்து பாமக இளைஞரணி தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் சென்னையிலும், திண்டுக்கல்லிலும் நேற்றிரவு துப்பாக்கிகளை கொண்டு நடத்தப்பட்ட கொலை மற்றும் கொள்ளை நிகழ்வுகள் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளன.

தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாசாரம் தலைதூக்குவது தமிழ்நாட்டின் அமைதியையும், வளர்ச்சியையும் சீர்குலைத்துவிடும்; அந்த முயற்சிகளை அரசு முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும்.

தமிழ்நாட்டில் கள்ளத்துப்பாக்கிகள் தாராளமாக கிடைக்கின்றன என்பதையே இந்நிகழ்வுகள் காட்டுகின்றன. திண்டுக்கல் மாவட்டத்தில் குளங்களின் மீன்பிடி உரிமையை எடுப்பதில் குழு மோதல்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன. அந்த மோதல்கள் இப்போது துப்பாக்கிச்சூடு நடத்தி எதிரிகளை கொல்லும் அளவுக்கு கொடூரமாகியிருப்பது மிகவும் ஆபத்தான போக்கு ஆகும். இது ஒடுக்கப்பட வேண்டும்.

தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே கள்ளத்துப்பாக்கி கலாசாரம் அதிகரித்து வருகிறது என்பதை காவல்துறையின் புள்ளி விவரங்களில் இருந்து அறியலாம். துப்பாக்கி கலாசாரத்திற்கு உடனடியாக முடிவு கட்டாவிட்டால், சிறிய குற்றங்களுக்குகூட கள்ளத்துப்பாக்கியை பயன்படுத்தும்நிலை உருவாகிவிடும்.

தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாசாரத்தை முளையிலேயே கிள்ளி எறிவதற்கான உறுதியான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,118.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.