Show all

மாடு திரிதல் இனி இருக்காது! சென்னை போக்குவரத்து இடையூறு, விபத்துக் காரணங்களில் ஒருவகைக்கு விடிவு.

மாடுகளின் உரிமையாளர்கள், தங்கள் மாடுகளைப் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாகத் தெருக்களில் சுற்றித்திரிய விடாமல் முறையாகப் பேணிக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. மீறினால் சாலைகளில் சுற்றி திரியும் மாடுகள் பிடிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்று அறிவித்து, களத்தில் இறங்கியுள்ள, சென்னை மாநகராட்சிக்குப் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

10,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளைப் பிடித்து, உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனச் சென்னை மாநகராட்சி அண்மையில் அறிவித்திருந்தது. 

இதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மக்களுக்கு இடையூறாக பொது இடங்களில் மாடுகள் சுற்றி திரிவது பெருஞ்சிக்கலாக உள்ளது. 

தலைநகர் சென்னையிலும் சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளிலும் மாடுகள் சுற்றித் திரிவது கடந்த சில ஆண்டுகளாகவே மிக மிக அதிகரித்து வருகிறது. 

இதனால் சாலையில் இருசக்கர சக்கர வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் பெரும் அவதியை எதிர்கொள்கின்றனர். இதைத் தடுக்க சென்னை மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பலரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். 

இதனிடையே சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளைப் பிடித்து, உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனச் சென்னை மாநகராட்சி அண்மையில் அறிவித்திருந்தது. 

அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு, சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் சுற்றித் திரியும் மாடுகளைப் பிடிக்கும் நடவடிக்கையைச் சென்னை மாநகராட்சி தீவிரப்படுத்தியுள்ளது. 

அப்படிப் பிடிக்கப்படும் மாடுகள் அனைத்தும் மாநகராட்சி தொழுவங்களுக்கு அனுப்பப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான தகவலைச் சென்னை மாநகராட்சி தனது கீச்சுப் பக்கத்திலும் பகிர்ந்திருந்தது. 

இதனிடையே அந்தக் கீச்சுவிற்குக் கீழே பலரும் தங்கள் பகுதிகளிலும் மாடுகள் சுற்றித் திரிவதாகப் புகைப்படத்துடன் பல பதிவுகளைப் பகிர்ந்து வருகின்றனர். 

திருவான்மியூர், அம்பத்தூர் சௌகார்பேட்டை, வேளச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் சாலைகளில் மாடுகள் சுற்றி திரிவதாகப் பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். 

இதற்குப் பதிலளித்துள்ள சென்னை மாநகராட்சி, அனைத்து புகார்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பதிலளித்துள்ளது. எனவே வரும் நாட்களில் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளைப் பிடிக்கும் பணிகள் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்தச் சூழ்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை மாநகராட்சி இது தொடர்பாகச் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. 

அதில், 'பெருநகர சென்னை மாநகராட்சியில், பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாகத் தெருக்களில் சுற்றித்திரியும் மாடுகள் மாநகராட்சி பொது நலங்குத்துறையினரால் கால்நடை பிடிக்கும் வாகனங்கள் மூலம் பிடிக்கப்பட்டு, புதுப்பேட்டை மற்றும் பெரம்பூரில் உள்ள மாநகராட்சி மாட்டுத் தொழுவங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டு வருகின்றது. 

அவ்வாறு தெருக்களில் சுற்றி திரிந்து மாநகராட்சியால் பிடிக்கப்படும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதத் தொகையாக மாடு ஒன்றிற்கு ரூ.1,550 விதிக்கப்படுகிறது. 

இரண்டாம் முறையும் மாடு பிடிக்கப்பட்டால் அதன்படி, மாடுகள் பிடிக்கப்பட்ட பின்னர், அதனை மாட்டுத் தொழுவத்தில் இருந்து விடுவித்து எடுத்துச் செல்ல மாடுகளின் உரிமையாளர்கள் சமர்ப்பிக்கும் உறுதிமொழிப் பத்திரத்தில் மாடுகளை விடுவிக்க நலங்கு ஆய்வாளர், மண்டல நல அலுவலர் மற்றும் மாடு வளர்ப்பவர்களின் வீடு அல்லது மாடு பிடிபட்ட எல்லைக்குட்பட்ட காவல் ஆய்வாளரின் பரிந்துரை கையொப்பத்தைப் பெற்றுச் சமர்ப்பித்து தங்களுடைய மாடுகளை விடுவித்துக் கொள்ள வேண்டும். 

மூன்றாவது முறையாக ஒரு மாடு பிடிபடும் பொழுது, உரிமையாளருக்கு திரும்ப வழங்கப்படாமல் செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்படும். 

மாநகராட்சியின் சார்பில் 15 மண்டலங்களிலும் மண்டல கால்நடை மருத்துவ அலுவலர்களின் மேற்பார்வையில் காவல் துறையுடன் இணைந்து பொதுமக்களுக்கு இடையூறாகச் சாலைகளில் சுற்றி திரியும் மாடுகள் தொடர்ந்து பிடிக்கப்பட்டு உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. 

அதன் அடிப்படையில், மாநகராட்சி நலங்குத்துறையின் சார்பில் இன்று ராயபுரம் மண்டலம், திரு.வி.க. நகர் மண்டலம், அண்ணா நகர் மண்டலம், தேனாம்பேட்டை மண்டலம் மற்றும் கோடம்பாக்கம் மண்டலங்களிலிருந்து 19 மாடுகள் பிடிக்கப்பட்டு உரிமையாளர்களுக்கு தலா ரூ.1,550 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

இந்த மாடுகள் மாநகராட்சியின் புதுப்பேட்டையில் உள்ள தொழுவத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன. மாடுகளின் உரிமையாளர்கள், தங்கள் மாடுகளைப் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாகத் தெருக்களில் சுற்றித்திரிய விடாமல் முறையாகப் பேணிக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. மீறினால் சாலைகளில் சுற்றி திரியும் மாடுகள் பிடிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,108.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.