Show all

விலக்கிக் கொள்ளப்பட்டது! காஞ்சிபுரம் அருகே 10 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற பெண் தொழிலாளர்கள் போராட்டம்

மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி- போராட்டக்காரர்களைச் சந்தித்து கலந்துரையாடி, பாதிக்கப்பட்டதாக கருதப்படுகிற பெண்கள் சிகிச்சையில் நலமுடன் இருப்பதை காணொளி அழைப்பில் அழைத்து பேச வைத்து தெளிவு படுத்த- பெண் தொழிலாளர்கள் போராட்டத்தை விலக்கிக் கொண்டனர்.

03,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் சுங்குவார்சத்திரத்தில் இயங்கி வரும் தனியார் செல்பேசி உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் பூந்தமல்லி அருகே உள்ள விடுதியில் தங்கி பணியாற்றி வருகின்றனர்.

பெண் ஊழியர்கள் தங்கி இருந்த விடுதியில் கடந்த புதன்கிழமை வழங்கப்பட்ட உணவு தரமற்றதாக இருந்துள்ளது. அந்த உணவை சாப்பிட்ட 400க்கும் மேற்பட்ட பெண்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட பெண்களில் பெரும்பாலானோர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வெளியேற அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், சில பெண்கள் மருத்துவமனையில் இருந்து இன்னும் வெளியேற்றப்படவில்லை. அவர்களின் நிலை என்ன என்று தனியார் செல்பேசி உதிரி பாகம் தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாகம் தரப்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த எட்டு பெண்களின் நிலை என்ன ஆனது என்று தெரியாத காரணத்தால் நிர்வாகத்திற்கும் பணியாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, சென்னை பெங்களூரு ஒன்றிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு 12 மணியளவில் திரண்ட சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். விடிய விடிய இந்தப் போராட்டம் நடைபெற்றதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. 

இதைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி போராட்டக்காரர்களைச் சந்தித்து கலந்துரையாடினார். 
அவர்களிடம் ஆட்சியர் ஆர்த்தி, 'இரண்டு பெண்கள் (கஸ்தூரி, ஐசுவர்யா) இறந்ததாக வெளியான தகவல் வதந்தி என்றும், இருவரும் நலமுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளதாகவும், உடல்நலம் பாதிக்கப்பட்டபோது மயங்கிய நிலையிலுள்ள காணொளி தவறாக பரப்பப்படுகிறது என்றும் தெளிவுபடுத்தினார்.

விடுதிகளில் இனி இப்படி நடக்காமல் இருக்க, தனியொரு குழு விரைவில் அமைக்கப்படும். தற்போது இந்தப்பாட்டில்- தரமற்ற உணவு வழங்கிய விடுதி காப்பாளர் மிது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது' என்று கூறியுள்ளார். 

மேலும், போராட்டாக்காரர்கள் மற்றும் இதழியலாளர்கள் முன்னிலையில் இரண்டு பெண்களிடமும் காணொளி அழைப்பில் பேசி அதனை போராட்டத்திலுள்ள தொழிலாளர்களிடம் காட்டினார் ஆட்சியர். இதையடுத்து, சுமார் 12 மணி நேரம் நடைபெற்ற போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,101.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.