Show all

பாஜக மகிழ்கிறதா! சசிகலாவை அதிமுக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கியது செல்லும் தீர்ப்புக்கு

அதிமுக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லுமா? செல்லாதா? என்கிற வழக்கின் தீர்ப்பு சாதகமாக வரும் என்று சசிகலா தரப்பினரும் எடப்பாடி, தரப்பினரும் எதிர்நோக்கியிருந்த நிலையில், எடப்பாடி தரப்புக்கு வெற்றி கிடைத்துள்ளது. இதில் பாஜகவும் மகிழ்வதாக ஒரு செய்தி இழையோடுகிறது.

29,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5123: அதிமுக பொதுச்செயலாளர் பதவியிலிருந்து தன்னை நீக்கிய பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து சசிகலா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சசிகலாவை அதிமுக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கியது செல்லும் என்று சென்னை உரிமையியல் அறங்கூற்றுமன்றம் தன்னுடைய உத்தரவில் தெரிவித்துள்ளது. 

தீர்ப்பு சாதகமாக வரும் என்று சசிகலா தரப்பினரும் எடப்பாடி, தரப்பினரும் எதிர்நோக்கியிருந்த நிலையில், எடப்பாடி தரப்புக்கு வெற்றி கிடைத்துள்ளது. 

இந்தத் தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்குச் சட்டப்பாடாக கிடைத்த வெற்றி ஆகும். சசிகலாவின் எழுச்சியைக் காரணம் காட்டிதான், அடிக்கடி கமுக்கக் கூட்டங்களை போட்டும், தம்பியை, மகனை தூது அனுப்பி கலந்துரையாடல் நடத்தியும், எடப்பாடிக்கு அதிர்ச்சி கொடுத்துக் கொண்டிருந்தார் ஓ.பன்னீர்செல்வம். 
சசிகலாவுக்கு எதிராக தீர்ப்பு வந்துள்ள நிலையில், இனிமேல் எடப்பாடி பழனிசாமியைப் பகைத்து கொண்டு எதையும் செய்ய முடியாத நிர்ப்பந்தத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் ஆளாகி உள்ளார். அதனால் ஓ.பன்னீர்செல்வம். விடையத்திலும் எடப்பாடிக்கே வெற்றி கிடைத்துள்ளது. 

அமமுக என்ற கட்சியை தொடங்கியது தினகரனுக்கு இந்த நேரத்தில் நல்வாய்ப்பாகப் பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, சசிகலாவை அமமுகவில் கொண்டு வருவதற்கான முயற்சியில் இறங்கி அதில் தோல்வியைச் சந்தித்த நிலையில், இன்று அதற்கான சூழலும் கனிந்து வந்துள்ளது. இனிமேல், சசிகலாவை சமாதானப்படுத்தி, மீண்டும் அமமுகவின் பொறுப்பை அவரிடம் ஒப்படைக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

அதிமுக உறுப்பினராகக்கூட இல்லாத சசிகலா, கட்சியினரிடம் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் தன்னை அதிமுகவின் பொதுச் செயலாளர் என்று கூறுவதைத் தடுக்கும் வகையில் அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறையில் ஜெயக்குமார் புகார் தந்திருந்தார். 

அதிமுகவிற்கு சட்டப்பாடாக அமையும் எந்த நெருக்கடியையும் பாஜக தனக்கான வெற்றியாக பார்த்து வருகிறது. அந்த வகையில் இந்த தீர்ப்பு தமிழ்நாட்டு பாஜக கிளைக்கட்சிக்கு வெற்றியான செய்தி என்று எதிர்பார்க்கலாம். பாஜகவைச் சேர்ந்த சில இரண்டாம் கட்ட நிர்வாகிகள், திமுகவிற்கு பாஜகதான் போட்டி. உண்மையான எதிர்க்கட்சி என்றெல்லாம் பொது வெளியில் கருத்து கூறி வருகிறார்கள். சசிகலா அதிமுகவில் வராவிட்டால் கண்டிப்பாக அது பாஜகவுக்கு இந்த வகையில் பலன்தரும் என்கிறார்கள் பாஜக தரப்பினர். 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,216. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.