Show all

நல்ல முயற்சி!

தேனி நகரில் மதுரை செல்லும் சாலையில், தனியார் பள்ளி நிறுவனங்கள் இணைந்து பல லட்சம் ரூபாய் செலவில் இரும்பினாலான மேம்பாலம் அமைத்து மாணவர்கள், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விட்ட முன்னெடுப்பு பாராட்டப்பட்டு வருகிறது.
    
23,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5124: தேனி பங்களாமேட்டில் மாணவர் மற்றும் பொதுமக்கள் சிரமம் போக்க தனியார் பள்ளி நிர்வாகங்கள் இணைந்து அமைத்த தொடர்வண்டிப்பாதை மேம்பாலம் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.

தேனி நகரில் மதுரை செல்லும் சாலையில் உள்ள பங்களாமேட்டின் அருகில் சில தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த பள்ளிகளில் ஆயிரக்கணக்கான மாணவ மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் இந்த பகுதி வழியாக மதுரை போடி அகலத் தொடர்வண்டிப்பாதை செல்கிறது. இப்பாதையில் வண்டிகள் இயக்கப்படும் சாலைவழி அடைக்கப்பட்டால் பள்ளி செல்லும் மாணவ மாணவியர் மற்றும் பொதுமக்கள் பலமணி நேரம் காத்திருந்து அவதியுறும் சூழல் இருந்து வந்தது.

இதனைக் கருத்தில் கொண்டு பள்ளி வளாகத்தில் இருந்து இடமால் தெருவை இணைக்கும் வண்ணம் புதிய இரும்பு பாலம் அமைக்கப்பட்டது. தனியார் பள்ளி நிறுவனங்கள் இணைந்து பல லட்சம் ரூபாய் செலவில் இரும்பினாலான மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கும் மாணவ மாணவியருக்கும் பயனளிக்கும் இந்த மேம்பாலம் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது. நிகழ்வில் தனியார் பள்ளி நிர்வாகிகளுடன் தொடர்வண்டித்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,240.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.