Show all

கொரோனா பாதுகாப்பு நடவடிக்கை! விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டத்தில் பொது இடங்களில் சிலைகள் வைக்க தமிழ்நாடு அரசு தடை

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, தனி ஆட்கள் தங்களது வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், தனிநபர்களாக சென்று அருகில் உள்ள நீர்நிலைகளில் சிலைகளை கரைப்பதற்கும் அனுமதிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. 

15,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123: விநாயகர் சதுர்த்தி விழா அண்மைக் காலமாகத்தான், பெரிய பெரிய விநாயகர் சிலைகளை பொதுஇடங்களில் நிறுவி நீர் நிலைகளில் கரைக்கும் பழக்கம் தமிழ்நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 

கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக, விநாயகர் சதுர்த்தி விழாவை தனி ஆட்கள் தங்களது வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், தனிநபர்களாக சென்று அருகில் உள்ள நீர்நிலைகளில் சிலைகளை கரைப்பதற்கு மட்டும் அனுமதிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. 

ஆனாலும், சென்னையில் சந்தோம் முதல் நேப்பியர் பாலம் வரையிலான வழித்தடத்தில் விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் சிலை கரைப்பு செயல்பாட்டிற்கு தடை விதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. வரும் விழாக் காலங்களில் எச்சரிக்கையாக இருக்கும்படியும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றும்படியும் ஒன்றிய அரசும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து விழாக் காலத்தை முன்னிட்டு கொரோனா தடுப்பு நடவடிக்கையை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், விநாயகர் சதுர்த்தியை ஒட்டி பொது இடங்களில் விழா கொண்டாடுவதற்கும் சிலைகள் வைப்பதற்கும் அனுமதியில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்லவும், சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கும் அனுமதி இல்லை என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

தனிநபர்கள் இல்லங்களில் வைத்து வழிபாடு நடத்திய சிலைகளை கோயில்களின் வெளிப்புறத்திலோ சுற்றுப்புறத்திலோ வைத்து செல்வதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது என்றும், அவற்றை தமிழ்நாடு அறநிலையத்துறை முறையாக அகற்ற நடவடிக்கை எடுக்கும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல சென்னை மற்றும் நாகை வெளாங்கண்ணியில் கொண்டாடப்பட உள்ள மரியன்னையின் பிறந்தநாள் திருவிழாவின் போது, பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கும் தடை விதிக்கப்படுகிறது என்றும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.