Show all

வடகிழக்கு பருவமழை தொடங்கும் வாய்ப்பில்! தமிழ்நாட்டில் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை பெய்யும்

தமிழ் நாட்டில் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை முடிவிற்கு வரும் நிலையில் உள்ளது. இதனால் தற்போது தென் இந்தியாவில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

08,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123: முதுவேனிற் காலத்தின் தொடக்கமான ஆனி மாதத்தில் தென்மேற்கு பருவக்காற்று மழை, கேரளாவில் தொடங்கி வட இந்தியா வரை சிறப்பான மழை கொடுக்கும். தமிழ்நாட்டிலும் பரவலாக மழை பெய்யும். 

வடகிழக்கு பருவமழை முன்பனி காலமான ஐப்பசியில் தொடங்கி தை மாதம் வரையுலுமே பெய்யும். தென்மேற்கு பருவக் காற்றினால் குறைந்த அளவு மழையை பெறும் தமிழ்நாட்டுக் கடற்கரையோரப் பகுதிகள், வடகிழக்கு பருவப் பெயர்ச்சிக் காற்றினால் 60விழுக்காட்டு மழையைப் பெறுகின்றன.

தமிழ்நாட்டின் உள் பகுதிகள் 40 விழுக்காடு முதல் 50 விழுக்காடு மழையை வடகிழக்கு பருவக் காற்றினால் பெறுகின்றன. தென்மேற்கு பருவக் காற்றினால் மழையைப்பெறும் கர்நாடகம், கேரளா, இலட்சத்தீவுகள் போன்றவை 20 விழுக்காட்டு மழையை வடகிழக்கு பருவக் காற்றினால் பெறுகின்றன.

தென்மேற்கு பருவக்காற்று தரும் மழை: தமிழ்நாட்டின் மேலைக் கடலில் நிலைகொண்ட காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த கிழமை மேற்கு தமிழ்நாட்டிலும், கடலோர மாவட்டங்களிலும் கனமழை பெய்து வந்தது. இதனால் கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த கிழமை வெள்ளம் ஏற்பட்டது.

கேரளாவில் ஏற்பட்ட மழை, வெள்ளம் காரணமாக முல்லைப்பெரியாறு அணை நிரம்பி வருகிறது. இதனால் வைகை அணைக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. அதேபோல் மேற்கு மாவட்டங்களிலும் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில்தான் இன்றில் இருந்து தமிழ்நாட்டில் மீண்டும் கனமழை தீவிரம் எடுக்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை முடிவிற்கு வரும் நிலையில் உள்ளது. இதனால் தற்போது தென் இந்தியாவில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு ஏற்ற காலநிலை உருவாகி வருவதாக வானிலை மையம் தெரிவித்து இருக்கிறது.

இதனால் இன்றில் இருந்து அடுத்த 4 நாட்களுக்கு தமிழ்நாட்டில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கழிமுக மாவட்டங்களிலும், கடலோர மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இன்று கிருட்டிணகிரி, வேலூர், அரசிப்பேட்டை, மதுரை, புதுக்கோட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, மதுரை, திருவண்ணாமலை ஆகிய  மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளையில் இருந்து அரசிப்பேட்டை, மதுரை, புதுக்கோட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் தீவிர கனமழை பெய்யும்.

கழிமுக மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை நாளை முதல் பெய்யும் என்று வானிலை மையம் கணித்து உள்ளது. சென்னையில் மாலை நேரத்தில் மழை தீவிரமாக பெய்ய வாய்ப்பு உள்ளது. தூத்துக்குடி, கோவை, சேலம், மதுரை, புதுக்கோட்டை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் நாளை மறுநாள் தீவிர கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,047.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.