Show all

திறந்தன பள்ளிகள்! குதுகலிக்கும் பெதும்பை மாணவியரும் விடலை மாணவர்களும்- பருவத்திற்கு ஏற்ற அறிவுடைமை கொண்டாடிட

தம்மின் தம்மக்கள் அறிவுடைமையைக் கொண்டாடும் தமிழ்மண்ணில், அதற்கான களமான பள்ளிகள்- பத்தொன்பது மாதங்களாக கொரோனா பேரிடர் தடுப்பு நடவடிக்கையின் பாற்பட்டு முடக்கப்பட்டிருந்தன. ஓரளவு கொரோனா குறுவித்தொற்றை தமிழ்நாடு வீழ்த்திய நிலையில், பெதும்பை, மங்கை மாணவியரும் விடலை மாணவர்களும்- பருவத்திற்கு ஏற்ற அறிவுடைமை எய்திட வேண்டி இன்றுமுதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன

15,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123: திறந்தன பள்ளிகள் இன்று, ஒன்று முதல் எட்டாம்வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு. மாணவிய, மாணவர்களுக்கு, ஆசிரியைகள் ஆசிரியர்கள், மலர், இனிப்பு வழங்கி வரவேற்றனர். 

தொற்றின் இரண்டாம் அலை பரவலால், கடந்த கல்வியாண்டில், அனைத்து பொதுத் தேர்வுகளும் களையப்பட்டன. இதையடுத்து, இரண்டு மாதங்களுக்கு முன்ப ஒன்பது முதல் பனிரெண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன. அதே நேரத்தில், ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, 19 மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படவில்லை.

தனியார் பள்ளிகளில், ஜூம் செயலி, கூகுள் மீட் வழியே, இயங்கலையில் பாடங்கள் நடத்தப்பட்டன. அரசு பள்ளி மாணவர்களுக்கு சில இடங்களில், புலனச்செயலி மூலமாக ஆசிரியர்கள் பாட குறிப்புகளை வழங்கினர். அரசின் கல்வி, தொலைக்காட்சியில் பாடங்களின் காணொளிகள் ஒளிபரப்பப்பட்டன. இவைகள் எல்லாம் கூட நிறைவான கற்பித்தலாக அமைந்ததாகக் கொண்டாட முடியவில்லை என்பதுதாம் உண்மை. ஆகவே, மாணவ - மாணவியருக்கு கற்பித்தல் இடைவெளி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது, நேரடி வகுப்புகள் நடத்தப்படுகின்றன் 19 மாதங்களாக வீடுகளில் அடைந்து கிடந்து, கற்பித்தல் கிடைக்காமல் பாதிக்கப்பட்ட, ஏராளமான மாணவ - மாணவியர் இன்று பள்ளிகளுக்கு குதுகலமாக வந்தனர்.

இந்த மாணவர்கள் சுழற்சி முறையில், அன்றாடம் பள்ளிக்கு வந்து செல்லும் வகையில் ஆர்வமூட்டி, மகிழ்ச்சியுடன் அவர்களை நடத்த, பல்வேறு முயற்சிகளை பள்ளிகள் மேற்கொண்டுள்ளன. அரசு தரப்பில், சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள்  ஐந்தாயத்து தலைவர்கள், ஆய உறுப்பினர்கள், பள்ளி வாயிலில் நின்று, மாணவர்களை மனமகிழ்வுடன் வரவேற்கவும், முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,054.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.