Show all

கருத்துக்கணிப்பில் 85 விழுக்காட்டினர் ஆதரவு! ஆங்கிலப் புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்கு காவல்துறையின் தடைகளுக்கு

ஒரு இயங்கலை இதழ், ஆங்கிலப் புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்குக் காவல்துறையனரி;ன் தடைகளும் கட்டுப்பாடுகளும் சரியா என்று முன்னெடுத்த கருத்துக் கணிப்பில், சரியே என்று 85 விழுக்காட்டினர் ஆதரவு வாக்கு அளித்துள்ளனர். 

15,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: கடற்கரைகளில் பொதுமக்கள் கூடி ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்படுவதாக காவல்துறைத் தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு அறிவித்துள்ளார். குடும்பத்தினருடன் வீடுகளிலேயே ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாடுங்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள கடற்கரைகளில் வெள்ளிக் கிழமை நள்ளிரவில் பொதுமக்கள் கூடி ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட காவல்துறை தடை விதித்துள்ளது.

நள்ளிரவில் நாள் தொடங்குவதான ஆங்கிலப் புத்தாண்டில் அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என்றும் பொது இடங்களில் அமைதிக்கு குந்தகம் விளைவித்தால் காவல்துறையினர் தக்க நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் தமிழ்நாடு காவல்துறைத் தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தவும், தற்போது பரவி வரும் உருமாறிய ஓமிக்ரான் குறுவிப் (வைரஸ்) பரவலை தடுக்கவும், தமிழ்நாடு அரசு சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நடைமுறைபடுத்தியுள்ளது. மேலும் விழாக் காலங்களில் கொரோனா தொற்றுப்பரவல் அதிகரிக்கக்கூடும் என்பதால் பொது மக்கள் வெளியில் ஒன்று கூடுவதை முற்றிலும் தவிர்க்கும்படி தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.

வெள்ளிக் கிழமை நள்ளிரவு தமிழ்நாட்டிலுள்ள கடற்கரைகளில் பொதுமக்கள் கூடி ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட அனுமதி இல்லை. அதனால் அனைவரும் வீடுகளிலேயே அவரவர் குடும்பத்தினருடன் ஆங்கிலப் புத்தாண்டினை மகிழ்ச்சியுடன், மற்றவர்களுக்கு இடையூறு இல்லாத வகையில் கொண்டாடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வழிபாட்டுத்தலங்களில் தமிழ்நாடு அரசினால் அறிவுறுத்தப்பட்ட கோவிட் நடத்தை வழிமுறைகளை பின்பற்றுமாறும், ஆங்கிலப் புத்தாண்டு நாளில் பொது இடங்களிலும், சாலை ஓரங்களிலும் கூட்டம் கூடுவதையும், இரு சக்கர வாகனங்களில் சுற்றுவதையும் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்படுகிறது.

மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டக் கூடாது. வெள்ளிக்கிழமை நள்ளிரவு காவல்துறையினரின் வாகனச் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மது அருந்திய ஓட்டுநர்கள் கைது செய்யப்படுவர். அவர்களின் வாகனம் பறிமுதல் செய்யப்படும். நீண்ட தூரம் பயணம் செய்பவர்கள் இரண்டு சக்கர வாகனத்தில் இரவு நேரங்களில் பயணம் செய்வதை தவிர்த்து, தொடர்வண்டியிலும், பேருத்திலும் பயணிக்க அறிவுறுத்தப்படுகிறது. அதிவேகமாகவும். கவனக்குறைவாகவும் வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும். இதனால் விபத்துக்களை தவிர்க்கலாம்.

கட்டாயத்தேவைகளுக்காக நான்கு சக்கர வாகனத்தில் நீண்ட தூரம் இரவு நேரங்களில் பயணிப்பவர்கள் மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி தேநீர் அருந்தி, பின்னர் பயணத்தை தொடர அறிவுறுத்தப்படுகிறார்கள். உணவகங்கள் மற்றும் தங்கும் வசதியுடைய உணவகங்கள் தமிழ்நாடு அரசு வழிகாட்டுதல் நெறிகளின்படி இரவு 11 மணி வரை செயல்படும். உணவக ஊழியர்கள் அனைவரும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி உள்ளனரா என உணவக நிர்வாகம் உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும்.

வெளியூர் செல்பவர்கள் பூட்டிய வீட்டினை குறித்து தகவலை அருகிலுள்ள காவல் நிலையத்தில் தெரிவித்தால், ரோந்து காவலர்கள் கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்படும். இதனால் திருட்டு நிகழ்வுகள் தவிர்க்கப்படும். பொது இடங்களில் அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் ரோந்து கண்காணிப்பு படக்கருவிகள் மூலம் கண்காணிக்கப்படுவார்கள். வாகனத்தில் கன்னியமற்ற மற்றும் அநாகரீகமான செயல்களில் ஈடுபடுவோர், பைக் பந்தயம், உள்ளிட்ட ஆபத்தான செயல்பாடுகளில் ஈடுபடுகின்றவர்கள் மீது காவல்துறையினர் தகுந்த நடவடிக்கை எடுப்பார்கள்.

விரைவு உதவி தேவைப்படுபவர்கள் 100,112 என்ற எண்களை தொடர்பு கொள்ளுமாறும், காவலன் செயலியை பயன்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. விபத்தில்லா ஆங்கிலப் புத்தாண்டாக கொண்டாடவும், தமிழக காவல்துறைக்கு ஒத்துழைப்பு நல்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. 

அனைவருக்கும் தமிழ்நாடு காவல்துறையின் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்களை காவல்துறை தலைமை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,113.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.