Show all

யுவராஜூக்கு காலமாகும் வரை 'வாழ்க்கை தண்டனை' மூன்று வழங்கி தீர்ப்பு! கோகுல்ராஜ் ஆதிக்கக் கொலை வழக்கில்

கோகுல்ராஜ் ஆதிக்கக் கொலை வழக்கில் யுவராஜூக்கு காலமாகும் வரை 'வாழ்க்கை தண்டனை' வழங்கி சிறப்பு அறங்கூற்றுமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

24,மாசி,தமிழ்த்தொடராண்டு-5123: கல்லூரி மாணவர் கோகுல்ராஜ் ஆதிக்கக் கொலை வழக்கில், யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகள் என்று மதுரை மாவட்ட வன்கொடுமை வழக்குகளுக்கான சிறப்பு அறங்கூற்றுமன்றம் கடந்த சனிக்கிழமை அறிவித்திருந்தது.

கோகுல்ராஜ் ஆதிக்கக் கொலை வழக்கில் யுவராஜூக்கு காலமாகும் வரை 'வாழ்க்கை தண்டனை' வழங்கி சிறப்பு அறங்கூற்றுமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் கோகுல்ராஜ். இவர் நாமக்கல்லை சேர்ந்த மாணவி ஒருவரை காதலித்தார். ஏழு ஆண்டுகளுக்கு முன்பு கல்லூரிக்குச் சென்ற கோகுல்ராஜ், நாமக்கல் மாவட்டம் தொட்டிபாளையம் தொடர்வண்டி தண்டவாளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்தக் கொலை வழக்கை, தமிழ்நாடு குற்றப் புலனாய்வுப் பிரிவு காவல்துறையினர் விசாரித்து, சங்ககிரியைச் சேர்ந்த யுவராஜ் என்பவரையும் அவரது கூட்டாளிகள் 17 பேர்களையும் கைது செய்தனர். யுவராஜ், தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவை என்னும் அமைப்பை நிறுவி நடத்தி வருகின்றார்.  

நாமக்கல் அறங்கூற்றுமன்றத்தில் நடைபெற்ற வந்த வழக்கு விசாரணை, கோகுல்ராஜ் தாய் பதிகை செய்த மனுவின் அடிப்படையில் மதுரை மாவட்ட வன்கொடுமை வழக்குகளுக்கான சிறப்பு அறங்கூற்றுமன்றத்துக்கு மாற்றி உயர் அறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டது. மதுரையின் இந்த சிறப்பு அறங்கூற்றுமன்றத்தில் கடந்த 2 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வந்தது. 

இறுதிகட்ட விசாரணை முடிவடைந்த நிலையில் கடந்த சனிக்கிழமை காலை 11 மணிக்கு வழக்கின் தீர்ப்பு வெளியானது. யுவராஜ், அவரது உடன்பிறப்புகள் அருண், குமார், சதிஸ்குமார், ரகு, ரஞ்சித், செல்வராஜ், சந்திரசேகரன், பிரபு, கிரிதர் உட்பட 10 பேர் குற்றவாளிகள் என அறங்கூற்றுமன்றம் அறிவித்தது. முதல் குற்றவாளியான யுவராஜ் மீது அனைத்து குற்றங்களும் நிரூபணம் ஆகியுள்ளதாகவும் அறங்கூற்றுவர் தெரிவித்தார். அதேவேளையில் சங்கர், அருள்செந்தில், செல்வகுமார், தங்கதுரை மற்றும் சுரேஷ் ஆகிய 5 பேர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்நிலையில் கோகுல்ராஜ் கொலை வழக்கில் இன்று வழங்கப்பட்ட தீர்ப்பில், யுவராஜ் மற்றும் அவரது மகிழ்வுந்து ஒட்டுநர் அருண் இருவருக்கும் மூன்று 'வாழ்க்கை தண்டனை' வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டது. மேலும் மற்ற குற்றவாளிகளான குமார், சதிஸ்குமார், ரகு, ரஞ்சித் செல்வராஜ் இரண்டு 'வாழ்க்கை தண்டனையும்' சந்திரசேகரன் ஒரு வாழ்க்கை தண்டனையும், பிரபு மற்றும் கிரிதர் ஆகியோர் ஐந்து ஆண்டு கடுங்காவல் தண்டனையும் மற்றும் 5ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,181.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.