Show all

ஒவ்வொரு தமிழனுக்குமான வெற்றியாக அமையும்! அறம் செய்ய விரும்பு தொண்டு நிறுவனம் இந்த வழக்கில் வாகை சூடுவது

அறம் செய்ய விரும்பு தொண்டு நிறுவனம், கல்வியை மாநில பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றியது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது ஆகும் என்றும்  விதிமீறலாகும் என்றும் தெரிவித்துள்ளது, அது தொடர்ந்துள்ள பொது நல வழக்கில்.

29,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123: கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றக் கோரிய திமுக சட்டமன்ற உறுப்பினர் எழிலனின் தொண்டு நிறுவனம் தொடர்ந்த வழக்கில் ஒன்றிய மாநில அரசுகள் 8 கிழமையில் பதில் அளிக்க சென்னை உயர்அறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆயிரம் விளக்கு தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் முனைவர் எழிலன் நடத்திவரும் அறம் செய்ய விரும்பு என்ற தொண்டு நிறுவனத்தின் மூலமாக இந்த வழக்கு தொடரப்பட்டது.

அறம் செய்ய விரும்பு தொண்டு நிறுவனம் தொடர்ந்துள்ள பொது நல வழக்கில், கல்வியை மாநில பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றியது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது ஆகும் என்றும்  விதிமீறலாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்;ளது.

இந்தியாவில் 1975 முதல் 1977 வரையிலான நெருக்கடி சட்ட காலத்தில் பல்வேறு சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. பல்வேறு விதிமீறல்களும் இந்த கால கட்டத்தில்தான் மேற்கொள்ளப்பட்டன. முதன்மையாக மாநில அரசுகளின் அதிகாரம் பறிக்கப்பட்டு ஒன்றிய அரசுக்கு அதிகாரங்கள் பகிரப்பட்டது. மாநில அரசின் சில அதிகாரங்கள் பொது பட்டியலுக்கு மாற்றப்பட்டது. 1976ம் ஆண்டு, மொத்தம் 5 முதன்மையான துறைகள் பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டன. 

காடுகள் நிர்வாகம், கல்வி, எடை மற்றும் அளவிடல், விலங்குகள் மற்றும் பறவைகள் பாதுகாப்பு, அறங்கூற்று நிர்வாகம் ஆகியவை மாநில கட்டுப்பாட்டில் இருந்து பொது பட்டியலுக்கு மாற்றப்பட்டன.

மாநில அரசுகளின் அனுமதி இன்றி, முறையான சட்ட விதிகளை பின்பற்றாமல் நெருக்கடிசட்ட காலத்தில் சட்டம் இயற்றப்பட்டது கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது. இப்படி கல்வி பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்ட காரணத்தாலேயே தற்போது நீட் தேர்வுகள், புதிய ஒன்றியக் கல்விக்கொள்கை போன்ற சட்டங்கள் ஒன்றிய அரசு மூலம் நடைமுறைக்கு வந்துள்ளன. இது, கூட்டாட்சி கட்டமைப்புக்கு விரோதமானது என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தொடர்பாக சட்டங்கள் நிறைவேற்றும் மாநில அரசின் தன்னாட்சி அதிகாரம் பறிக்கப்பட்டு, மாநில சட்டங்கள் ஒன்றிய அரசின் சட்டங்களுக்கு கட்டுப்பட்டவையாக இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மனுவில் கூறப்பட்டுள்ளது. 

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளில் கல்வி மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், மாநில மக்களின் கல்வித்தேவை, விருப்பம் ஆகியன மாநில அரசுகளுக்கு மட்டுமே தெரிந்திருக்கும் எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு தலைமை அறங்கூற்றுவர் சஞ்ஜிப் பானர்ஜி, அறங்கூற்றுவர் பி.டி.ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தொண்டு நிறுவனம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ அணியமானார். அரசியல் சாசனத்தின் அடிப்படை கட்டமைப்பில் திருத்தம் கொண்டு வர முடியாது எனவும், அரசியல் சட்ட நிர்ணய அவையில் இது சம்மந்தமாக கொண்டு வரப்பட்ட திருத்தம் நிராகரிக்கப்பட்டதாகவும் அவர் வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட அறங்கூற்றுவர்கள், மாநில அரசுகளுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டால் மட்டுமே அது முழுமையான கூட்டாட்சி முறையாக இருக்கும் எனவும், மாநிலங்களுக்கு படைத்துறை, அன்னிய விவகாரங்கள் குறித்து முடிவெடுக்க அதிகாரம் வழங்கப்படவில்லை எனவும் தெரிவித்தனர். பின்னர் இந்த வழக்கில் தமிழ்நாடு அரசை தாமாக முன்வந்து எதிர்மனுதாரர்களாக சேர்த்து அறங்கூற்றுவர்கள் உத்தரவிட்டனர். மேலும் வழக்கு குறித்து ஒன்றிய மாநில அரசுகள் எட்டு கிழமைகளுக்குள் பதில் மனு பதிகை செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை 10 கிழமைகளுக்கு தள்ளிவைத்தனர்.

புதிய இந்திய அரசியல் அமைப்பு 1950ல் கொண்டுவரப்பட்டது. அப்போது, கல்வி மாநிலப் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தது. அந்த நிலையே நீடிக்க வேண்டுமென அனைத்துக் கல்விக் குழுக்களும் கூறின. இதை அப்போதைய தலைமைஅமைச்சர் ஜவகர்லால் நேரு ஏற்றுக்கொண்டார். ஆனால், இந்திரா காந்தியால் 1976ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட நெருக்கடி நிலையின்போது, 26 ஆண்டு கால நடைமுறை மாற்றப்பட்டது. கல்வி, பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டது.

கல்வி பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டதால் மாநில அரசுகளுக்கும் அதில் மாற்றங்கள் செய்ய சம உரிமை உண்டு. ஆனாலும் ஒன்றிய அரசின் கை ஓங்கி இருப்பதால் மாநில அரசால் ஒன்றும் செய்ய இயலாத நிலையே உள்ளது. அது தான் நீட் தேர்வு தொடங்கி கல்வி சார்ந்த பல்வேறு விவகாரங்களிலும் நடைபெற்று வருகிறது. எனவே, மீண்டும் மாநிலப் பட்டியலில் கல்வியைச் சேர்க்க வேண்டும். இதைச்செய்யாமல், தமிழக அரசு தற்போது கல்வித்துறையில் பல மாற்றங்களை கொண்டு வருவது கல்வித்தரத்தை ஒருபோதும் மேம்படுத்தாது என்று கல்வியாளர்கள் கருதுகிறார்கள். இந்த நிலையில்தான், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றக் கோரிய திமுக சட்டமன்ற உறுப்பினர் எழிலனின் தொண்டு நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. 

‘அறம் செய விரும்பு’ என்ற தொண்டு நிறுவனம் அதை எதிர்நோக்கி, சென்னை உயர் அறங்கூற்றுமன்றத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளது. வாகைசூட நம் வாழ்த்துக்கள். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,006.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.