Show all

ஒன்றிய அரசின் தமிழ்நாட்டிற்கான ஆளுநர் ஆர். என் ரவியை திரும்பப் பெறுக! உறுதிகாட்டும் திமுக

இரண்டாவது முறையாக அனுப்பி வைத்த நீட்விலக்கு சட்டமுன்வரைவையும் ஆளுநர் தன்னிடமே வைத்துள்ளதால், அவரது செயல்பாடுகளை விமர்சித்தும் எதிர்ப்பு தெரிவித்தும் திமுக பல தளங்களில் குரல் கொடுத்து வருகிறது. ஒன்றிய அரசின் தமிழ்நாட்டிற்கான ஆளுநர் ஆர். என் ரவியை திரும்பப் பெறுக! என்ற அடுத்தகட்டப் போரட்டத்தில் களம் இறங்கி போராடி வருகிறது திமுக.

22,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ்நாட்டில் ஆளும் திமுகவுக்கு, ஒன்றிய அரசின் தமிழ்நாட்டிற்கான ஆளுநர் ஆர். என் ரவி மீது கடும் சினம் மூண்டுள்ளது. நீட் தேர்வு விலக்கு சட்டமுன்வரைவை ஆளுநர் திருப்பி அனுப்பியது முதலே அந்தச் சினம் தீவிரம் அடைந்து வருகிறது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நாளது 28,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123 (13.09.2021) அன்று நீட் விலக்கு சட்டமுன்வரைவை தமிழ்நாடு அரசு நிறைவேற்றியபோதும், அதை மீண்டும் பேரவைத்தலைவருக்கே ஆளுநர் திருப்பி அனுப்பினார். இதையடுத்து அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசித்த தமிழ்நாடு அரசு மீண்டும் சட்டப்பேரவை சிறப்புக்கூட்டத்தில் அதே சட்டமுன்வரைவை நிறைவேற்றி குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கும்படி ஆளுநரை தமிழ்நாடு அரசு கேட்டுக் கொண்டது.

இந்திய அரசியலமைப்பு விதிகளின்படி இரண்டாவது முறையாக ஆளுநருக்கு அனுப்பி வைக்கும் சட்டமுன்வரைவை ஆளுநர் தமது அலுவலகத்திலேயே நிறுத்திவைக்க முடியாது என்றும் அதை அவர் குடியரசுத் தலைவருக்கே அனுப்பி வைக்க வேண்டும் என்றும் விதிகள் கூறுவதாக சட்ட வல்லுனர்களின் கருத்துக்களை மேற்கோள்காட்டி திமுக தலைவர்கள் கூறி வந்தனர்.

இந்த நிலையில், இரண்டாவது முறையாக அனுப்பி வைத்த சட்டமுன்வரைவையும் ஆளுநர் தன்னிடமே வைத்துள்ளதால், அவரது செயல்பாடுகளை விமர்சித்தும் எதிர்ப்பு தெரிவித்தும் திமுக பல தளங்களில் குரல் கொடுத்து வருகிறது. 

அண்மையில் டெல்லி வந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தலைமைஅமைச்சர் நரேந்திர மோடியைச் சந்தித்தபோது அவரிடம் அளித்த மனுவிலும் ஆளுநர் சட்டமுன்வரைவுகளை நிறுத்தி வைத்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில், ஒன்றிய அரசின் தமிழ்நாட்டுக்கான ஆளுநருக்கு எதிராக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெறக்கோரி, மக்களவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர திமுக கவனஅறிக்கை அனுப்பியது. 

ஆனால் திமுக கொண்டு வர முயன்ற கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதையடுத்து மக்களவையில் திமுக பாராளுமன்ற உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பினர். ஆளுநர் ஆர்.என். ரவியை திரும்ப பெறக்கோரி திமுக பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர் முழக்கம் எழுப்பினர்.

அண்மையில் நிதிநிலை அறிக்;கை விடையளிப்பு உரையில் பேசிய போது கூட நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மக்களால் தேர்வு செய்யப்பட்ட நாம் நிறைவேற்றிய சட்டங்கள் ஆளுனரிடமோ அல்லது குடியரசுத் தலைவரிடமோ முடங்கி உள்ளது. பத்தொன்பது நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் இன்று வரைஆளுநர், குடியரசுத் தலைவர் ஏற்காத காரணத்தால் முடங்கி உள்ளது. இது எப்படி மக்களாட்சியாகும். இது நியாயம் ஆகும் என்று கடுமையாக ஆளுநரை விமர்சனம் செய்து இருந்தார்.

அதோடு திமுகவின் அதிகாரப்பாட்டு நாளிதழான முரசொலியில் ஆளுநருக்கு எதிராக கடுமையான கட்டுரை ஒன்றும் வெளியிடப்பட்டு இருந்தது. அதில், ஆளுநர் ஆர். என் ரவி நீட் சட்டமுன்வரைவை இனியும் தாமதிப்பது தவறானதாக இருக்கும். அவரின் பதவிக்கு இது அழகு அல்ல. ஆளுநர் இந்த சட்டமுன்வரைவை குடியரசுத் தலைவருக்கு அனுப்புவதை விட வேறு வழியில்லை. ஆனால் அதை மீறி அவர் சட்டமுன்வரைவை அனுப்பாமல் காலம் தாழ்த்தி வருகிறார். இது சட்ட விதிகளுக்கு எதிரானது என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த நிலையில்தான் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற வேண்டும் என்று திமுக கவனஅறிக்கை அனுப்பி உள்ளது. ஆனால் திமுக கொண்டு வர முயன்ற கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. 

மக்களவைத்தலைவர் திமுகவின் கோரிக்கையை ஏற்காத காரணத்தால் திமுக பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். முன்னதாக ஆளுநர் ரவியுடன் எங்களுக்கு உறவு நன்றாக உள்ளது. ஆனால் ஆளுநர் ரவி நாங்கள் அனுப்பும் சட்டங்கள் எதற்கும் ஒப்புதல் அளிக்கவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் டெல்லியில் பேசியது குறிப்பிடத்தக்கது. அதோடு நீட் சட்டமுன்வரைவை உடனே ஒப்புதல் அளிக்க வழி செய்ய வேண்டும் என்று தலைமைஅமைச்சர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் பேசியிருந்தார்.

முன்னதாக மாநிலங்களையில் பேசிய திமுக பாராளுமன்ற உறுப்பினர் வில்சன் ஆளுநர்களின் அதிகாரத்திற்கு எதிராக மனுபதிகை செய்தார். அதில், மாநில சட்டமன்றங்களால் அனுப்பப்படும் சட்ட முன்வரைவுகள் மீது ஒன்றிய அரசு நியமிக்கும் மாநில ஆளுநர்கள் முடிவெடுப்பதற்கான காலக்கெடுவை நிர்ணயிக்க வேண்டும். இதற்காக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 200-வது பிரிவை திருத்த வேண்டும் என்று தனி உறுப்பினர் சட்டமுன்வரைவைப் பதிகை செய்தது குறிப்பிடத்தக்கது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,209.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.