Show all

தமிழர்ப்பண்பாடு கொண்டாடும் வகையில்! நிறைவடைந்து வரும் மதுரை பேருந்து நிலையக் கட்டுமானப்பணிகள்

தமிழர்ப்பண்பாட்டு அடிப்படையில் மதுரையின் பெருமைகளை காட்சிப்படுத்தியுள்ள விதம் பாராட்டும் வகையில் அமைந்து மதுரை பெரியார்பேருந்து நிலையக் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து வருகிறது. 

21,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: பெரியார் பேருந்து நிலைய கட்டுமான பணிகள் மற்றும் கட்டமைப்பு வசதிகள் தொடர்பாக சிற்சில புகார்களும், குற்றச்சாட்டுகளும் கூறப்பட்டு வந்தாலும், தமிழர்ப்பண்பாட்டு அடிப்படையில் மதுரையின் பெருமைகளை காட்சிப்படுத்தியுள்ள விதம் பாராட்டும் வகையில் அமைந்துள்ளது.

மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் தமிழர் பெருமைகளையும், நினைவுகளையும் போற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ள வண்ண ஓவியங்களும், ஒளிரும் வண்ணப் படங்களும் மக்களின் பாராட்டு பெற்று வருகின்றன.

மதுரை மாநகரின் மைய பகுதியில் நூறாண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட மையப் பேருந்து நிலையம்- ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு பெரியார் பேருந்து நிலையம் எனப் பெயர் மாற்றப்பட்டது. பின்னர், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில் மாட்டுத்தாவணி மற்றும் ஆரப்பாளையத்தில் தனித்தனியாக புறநகர் பேருந்து நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டன.

மூன்றாண்டுகளுக்கு முன்பு ஒன்றிய அரசின் மிடுக்குநகரம் திட்டத்தின் கீழ் நவீன வசதிகளுடன் பெரியார் பேருந்து நிலையத்தை புதுப்பிக்க திட்டமிடப்பட்டது. அதனை தொடர்ந்து, பெரியார் பேருந்து நிலையம் முழுமையாக இடிக்கப்பட்டது.

175 கோடி ரூபாய் மதிப்பில் நவீன வசதிகளுடன் மிக பேரளவாக இதன் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. 57 பேருந்துகள் நிறுத்தும் அளவில் பேருந்து நிலையமும், 450 கடைகள்  இயங்கும்படி வணிக வளாகமும் கட்டப்பட்டு வருகின்றன.

பேருந்து நிலையத்தின் தரை தளத்தின் கீழே 2 அடுக்குகளில் 5,000 இரு சக்கர வாகனங்களும், 350 நான்கு சக்கர வாகனங்களும் நிறுத்தும் அளவிற்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், பயணிகள் காத்திருப்பு பகுதி, தூக்கி, நகரும் படிக்கட்டுகள், சுரங்கப்பாதை ஆகியவையும் கட்டமைக்கப்படுகின்றன. 
இந்தப் பேருந்து நிலையத்திற்கு கூடுதல் அழகு சேர்க்கும் விதமாக வளாக சுவர்கள் முழுவதும் மதுரையின் நினைவுகளையும், பெருமைகளையும் போற்றும் வகையில் ஒரு அழகியல் முன்னெடுப்பை மதுரை மாநகராட்சி மேற்கொண்டுள்ளது.

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆலோசனையின் படி பெரியார் பேருந்து நிலைய கட்டிடங்களில் பிரம்மாண்ட தமிழி எழுத்துக்களும், மாமதுரை போற்றுவோம் என்ற தலைப்பில் கண்கவர் ஓவியங்களும் வரையப்பட்டுள்ளன. தமிழர்ப் பண்பாட்டை பிரதிபலிக்கும் விதமாக நாட்டார் தெய்வங்களின் படங்கள், நாட்டுப்புற கலைகளின் படங்கள் வண்ண ஓவியங்களாக படைக்கப்பட்டுள்ளன.

இது தவிர, சுமார் 70 ஆண்டுகளுக்கு முந்தைய பெரியார் பேருந்து நிலைய படமும், மதுரையின் பல்வேறு பகுதிகளில் இயக்கப்பட்ட பேருந்துகளின் படங்களும், அதில் பயணம் செய்த மக்களின் படங்களும் ஒளிரும் படங்களாக அமைக்கப்பட்டுள்ளன. மேலும், மதுரையின் சுற்றுலா தளங்களான திருமலை நாயக்கர் அரண்மனை உள்ளிட்ட இடங்களும், பண்பாட்டு அடையாளங்களான சித்திரை திருவிழா மற்றும் சல்லிக்கட்டு போட்டிகளின் படங்களும் ஒளிரும் படங்களாக அமைக்கப்பட்டுள்ளன.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,090.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.