Show all

வன்னியர்களுக்கு வழங்கிய 10.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு களைவு! அவசர கோலத்தில் அதிமுக அரசு அள்ளித் தெளித்த கோலம் என்று குற்றச்சாட்டு

வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்கிய சட்டம் களையப்படுவதாக சென்னை உயர்அறங்கூற்றுமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

15,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123: மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 விழுக்காடு இடஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு முன்னுரிமை அளிக்கும் சட்டம் கடந்த அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது. இதனைக் களைந்திடக் கோரி சென்னை உயர்அறங்கூற்றுமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தேர்தலை கருத்தில் கொண்டே இச்சட்டம் இயற்றப்பட்டதாக மனுதாரர்கள் தரப்பில் வாதாடப்பட்டது.

இந்த வழக்கிற்கான தீர்ப்பில், வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்கிய சட்டம் களையப்படுவதாக சென்னை உயர்அறங்கூற்றுமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக, சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு அவசர, அவரசமாக சட்டம் இயற்றப்பட்டுள்ளது என்று அறங்கூற்றுமன்றம் தெரிவித்துள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் இந்தச் சட்டம் இயற்றப்பட்டதாகவும் அறங்கூற்றுமன்றம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

வன்னியருக்கு மட்டும் 10.5 விழுக்;காடு ஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்றும், வன்னியர் பிரிவில் 7 சாதிகள் உள்ளதாகவும், இச்சட்டத்தை நிறைவேற்ற அரசுக்கு அதிகாரம் உள்ளது எனவும் பாமக தரப்பில் வாதிடப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் அறங்கூற்றுமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

இந்நிலையில், 10.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ள நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தலைமைச்செயலகத்தில் அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

அரசு தரப்பு வழக்கறிஞர் சண்முகசுந்தரம், 'இட ஒதுக்கீடு வழங்கியதற்கு வரலாற்று காரணங்கள் உண்டு. முந்தைய அரசு கொண்டு வந்ததை இந்த அரசும் தொடரும் என தெரிவித்திருந்தோம். ஆனால் சட்டப்படி செல்லாது என அறிவித்துள்ளனர். சரியான காரணங்கள் உள்ளதால் மேல் முறையீடு செல்லலாம் என்பதை அரசிற்கு தெரிவிக்க உள்ளோம், அதனை ஏற்று அரசும் மேல்முறையீடு செல்லும்.

அரசியல் காரணங்களுக்காக இந்தச் சட்டம் இயற்றபட்டதாக மனுதாரர்கள் தரப்பில் கூறினார்கள். ஆனால், நாங்கள் அதற்கு எதிராக வாதங்களை முன் வைத்தோம். இட ஒதுக்கீடு வழங்க அரசுக்கு உரிமை உள்ளது. 10.5விழுக்காடு இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அதனால், உச்ச அறங்கூற்றுமன்றத்தில் மேல் முறையிடு செய்ய உள்ளோம்' என்று தெரிவித்துள்ளார்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,054.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.