Show all

சென்னை புத்தகக் கண்காட்சி நடந்தேற வேண்டுமே! எதிர்பார்ப்பில்- படிப்பாளர்கள், பதிப்பகங்கள், நூல் விற்பனையாளர்கள்

தமிழ்நாடு அரசு கருணை வைத்து, ஏதேனும் கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து, எப்படியாவது சில நாள்கள் தள்ளியேனும் திட்டமிட்டபடி சென்னைப் புத்தகக் காட்சியை நடத்த அரசு அனுமதித்துவிடாதா என்ற எதிர்பார்ப்பும் பதிப்பகங்கள் மற்றும் புத்தக விற்பனையாளர்கள் நடுவில் நிலவுகிறது. 

20,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: நாற்பத்தைந்தாவது சென்னை புத்தகக் கண்காட்சி எப்போது நடக்கும் என்பது கேள்விக் குறி ஆகியுள்ளது. தமிழ்நாடு அரசு பதிப்பகங்களின் நெருக்கடியை புரிந்துகொண்டு விரைவில் ஏதாவது செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இதற்காக, பதிப்பாளர்களோ புத்தக விற்பனையாளர்களோ அரசைக் குறை கூறவில்லை என்றாலும் பதிப்பகங்களுக்கு தமிழ்நாடு அரசு உதவி செய்ய வெண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கொரோனா குறுவிப் (வைரஸ்) பரவல் அதிகரிப்பு காரணமாக, தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டில் பொருட்காட்சி மற்றும் கண்காட்சிகளைத் தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அறிவித்ததையடுத்து, 45வது சென்னை புத்தகக் கண்காட்சி நடக்குமா என்ற கேள்வி வாசகர்களையும் பதிப்பகங்களையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

கொரோனா குறுவித் தொற்று பரவலால் தேக்கம் கண்டிருந்த புத்தக விற்பனை, புத்தகம் பதிப்பு பணிகளுக்கு நல்வாய்ப்பாக- இந்த ஆண்டு 45வது சென்னை புத்தகக் கண்காட்சி 22,மார்கழி முதல் 10,தை வரை (சனவரி6-23) சென்னை நந்தனம் கிறித்துவ இளைஞர் சங்க வளாகத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. 

தென்னிந்திய பதிப்பாளர்கள் மற்றும் புத்தக விற்பனையாளர்கள் சங்கம் நடத்தும் 45வது சென்னை புத்தகக் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என்று அறிவிப்பும் வெளியானது. 

இந்த அறிவிப்பால் படிப்பாளர்களும், பதிப்பாளர்களும் புத்தக விற்பனையாளர்களும் மகிழ்ச்சி அடைந்தனர். தமிழில் முன்னணி பதிப்பகங்கள், விற்பனையாளர்கள் பலரும் தங்கள் புதிய புத்தகங்களை அச்சிடுவதற்கு அச்சகங்களுக்கு அனுப்பிவிட்டனர். 45வது சென்னை புத்தகக் கண்காட்சியில் பல நூறு அரங்கங்கள் இடம்பெறும் என்பதால் பல பதிப்பகங்கள் மற்றும் விற்பனையாளர்கள் தங்களுக்கு தேவையான அரங்கங்களை கட்டணம் செலுத்தி பதிவு செய்துள்ளனர். புத்தக விற்பனை இரண்டு ஆண்டுகளாக தேக்கம் கண்டு முடங்கியிருக்கும் சூழலில், சென்னை புத்தக கண்காட்சி பதிப்பாளர்களுக்கும் விற்பனையாளர்களுக்கும் ஒரு வாய்ப்பு என்பதால் குதுகலத்துடன் தயாரானார்கள்.

சென்னை நந்தனம் கிறித்துவ இளைஞர் சங்க வளாகத்தில் ஒரு கோடி ரூபாய் செலவில் பேரளவான புத்தகக் கண்காட்சி அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 900 அரங்குகள் அமைக்கப்பட்டு, பதிப்பகங்களுக்குக் கடைகள் ஒதுக்குவதற்காக திங்கள்கிழமை குலுக்கல் நடத்தப்படவிருந்தது. 

சென்னை புத்தகக் கண்காட்சியில் சிறந்த எழுத்தாளர்கள் படைப்பாளிகளுக்கு வழங்கப்படும் கலைஞர் பொற்கிழி விருதும் அறிவிக்கப்பட்டது. புத்தக் கண்காட்சிக்கான அழைப்பிதழ்களும் அச்சடிக்கப்பட்டு கொண்டுதரப்பட்டது. படிப்பாளர்களும் சென்னை புத்தக் கண்காட்சியை எதிர்நோக்கி ஆர்வமாக இருந்தனர்.

இந்த சூழ்நிலையில்தான், தமிழ்நாட்டில் கொரோனா பரவல் எண்ணிக்கை கடந்த சில நாட்களில் திடீரென அதிகரித்தது. அதோடு ஒமிக்ரான் பரவலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் இரண்டு நாட்களில் சென்னை புத்தக கண்காட்சி தொடங்க இருந்த நிலையில், தமிழ்நாடு அரசு மூன்று நாட்களுக்கு முன்பு வெளியிட்ட கொரோனா புதிய கட்டுப்பாடுகளில் பொருட்காட்சி மற்றும் புத்தகக் கண்காட்சிகளை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அறிவித்தது. தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பு படிப்பாளர்களையும் பதிப்பகங்களையும் புத்தக விற்பனையாளர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தொழில்நுட்ப முன்னேற்றத்தின் காரணமாக பலரும் அச்சுப் புத்தக குறைத்து வருகின்றனர். இருந்தாலும், படிப்பாளர்களுக்கு இன்னும் அச்சுப் புத்தகத்தை தொட்டு வாசிக்கும் பழக்கம் அப்படியேதான் உள்ளது.

சென்னை புத்தகக் காட்சியை இலக்காகக் கொண்டு பல நூறு பதிப்பாளர்கள், புதிய புத்தகங்கள், மறுபதிப்புகள் கோடிக்கணக்கில் பணத்தை வட்டிக்கு கடன் வாங்கி அச்சிட்டு, முதலீடு செய்திருக்கின்றனர். இது எல்லாம் புத்தகக் காட்சி விற்பனைக்குப் பின் கடனை திருப்பித் தந்துவிட முடியும் என்ற நம்பிக்கையில் பதிப்பகங்கள் முன்னெடுத்துள்ளதாகும்.

இவர்களில் பெரும்பாலும் சிறு பதிப்பகங்கள் புத்தகம் பதிப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். புத்தகக் கண்காட்சி தொடங்குவதற்கு சில நாட்களே இருந்த நிலையில், தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், என்ன செய்வது என்று தெரியாமல் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்தநிலைமை இன்னும் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும், ஒரு சில நாட்களில் முடிவுக்கு வந்துவிடுமா அல்லது கிழமைக் கணக்கில் ஆகுமா? அதுவரை அமைக்கப்பட்டுள்ள புத்தகக் காட்சி அரங்கு தாங்குமா என்ற அச்சமும் எழுந்துள்ளது. இதனால், விறுவிறுப்பாக நடந்துகொண்டிருந்த புத்தகம் அச்சிடும் பணிகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதற்காக, பதிப்பாளர்களோ புத்தக விற்பனையாளர்களோ அரசைக் குறை கூறவில்லை என்றாலும் பதிப்பகங்களுக்கு தமிழக அரசு உதவி செய்ய வெண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக புத்தகக் கண்காட்சியை நடத்த முடியாததால், பதிப்பாளர்கள் கடும் சிரமத்தில் உள்ளனர். இப்போது பதிப்பகங்கள் பலரும் அதிக பணத்தை முதலீடு செய்து அதிக தலைப்புகளுடன் தயாராக உள்ளனர். 

ஆனால், தொற்றுநோய் பெரும் தடையாக வந்துள்ளது. புத்தகக் கண்காட்சியில் அரங்குகளை அமைப்பவர்களில் 70விழுக்காட்டு பேர்கள் சிறு பதிப்பகங்கள்தான். இவர்களின் விற்பனை நூலக கேட்பு தவிர, ஆண்டுதோறும் நடைபெறும் இந்த புத்தகக் கண்காட்சியை நம்பித்தான் இருக்கிறது. ஆனால், புத்தகக் கண்காட்சி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் நெருகடிக்குள்ளாகி இருக்கிறார்கள்.

இதனால், பதிப்பகங்களுக்கு தமிழ்நாடு அரசு உதவ முன்வர வேண்டும் என்ற குரல்களும் எழுந்துள்ளன. புத்தகக் கண்காட்சியில் பங்கேற்கும் பதிப்பாளர்களிடமிருந்து புத்தகங்களையாவது அரசு வாங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன. 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,118.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.