Show all

பெற்றோர்களுக்கு இயங்கலை வகுப்பில் இருந்து விடுதலை! பால்வாடி, மழலையர் உள்ளிட்ட பள்ளிகள் அனைத்தும் திறக்க அனுமதி

15,ஐப்பசி (நவம்பர்.1) முதல் அரசு நடத்தும் பால்வாடி, மழலையர் வகுப்பு தொடங்கி அனைத்து பள்ளிகளும் திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

28,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5123: மருத்துவ நிபுணர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்களின் ஆலோசனையின்படி, 9, 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவ மாணவியருக்காகப் பள்ளிகளும் மற்றும் கல்லூரிகளும் இயங்கி வருகின்றன. 

அதேபோல், அரசு நடத்தும் பால்வாடி, மழலையர் பள்ளிகள் மற்றும் 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியர், பள்ளி செல்லாமல் பல மாதங்களாகத் தொடர்ந்து வீட்டிலேயே இருப்பது அவர்களிடையே பெரும் மன அழுத்தத்தையும் சமுதாயத்தில் பெரும் கற்றல் இடைவெளியையும் இழப்பையும் ஏற்படுத்தியுள்ளதாக மருத்துவ வல்லுநர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்கள் தெரிவித்ததைக் கருத்தில்கொண்டு, அனைத்து பள்ளிகளிலும், 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு மாணவ மாணவியருக்கான வகுப்புகள், கொரோனா நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி 15,ஐப்பசி (நவம்பர்.1) முதல் நடத்த அனுமதிக்கப்படும். அதற்கான முன்னேற்பாடுகளைப் பள்ளிக்கல்வித் துறை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியர்கள், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நடத்தப்படும் சிறப்பு தடுப்பூசி முகாம்களுக்குச் சென்று பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். பொது இடங்கள், கடைகள், வணிக நிறுவனங்களின் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 15,ஐப்பசி (நவம்பர்.1) முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார். 

பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களும் இரண்டு தடவைகள் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப்படும் மாதாந்திர மக்கள் தொடர்பு முகாம் நடத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தனியார் நிறுவனங்கள் நடத்தும் பொருட்காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

திருமணம் சார்ந்த நிகழ்வுகளில் 100 பேர் வரை பங்கேற்க அனுமதி அளித்து உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், இறப்பு தொடர்பான நிகழ்வுகளில் 50 பேர் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே அரசியல், சமுதாய, கலாச்சார நிகழ்வுகள் மற்றும் திருவிழாக்கள் நடத்த தடை தொடரும் என்று அரசு அறிவித்துள்ளது. 
 -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,036.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.