Show all

இருபத்திமூன்று மாதங்களுக்கு பிறகு அனுமதி! திருவண்ணாமலையில் பக்தர்கள் விடிய, விடிய மலைவலம்

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த இருபத்தி மூன்று மாதங்களாக திருவண்ணாமலையில் முழுநிலா நாள் மலைவலத்திற்கு மாவட்ட நிர்வாகம் மூலம் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு வந்தது.

04,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5123: இருபத்தி மூன்று மாதங்களுக்கு பிறகு மலைவலத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதால் திருவண்ணாமலை நகரமே விழாக்கோலம் பூண்டது போன்று காட்சி அளித்தது.

தமிழ்நாட்டில் உள்ள கோயில்கள் நிலம், நீர், தீ, காற்று, விசும்பு என்கிற ஐந்திர ஆற்றல்களுக்கும் பட்டியலிடப்படுகிற வழிபாட்டுவழக்கம் உள்ளது. அந்த வகையில் தமிழர்தம் விளக்கேற்றுத் திருவிழாவை சிறப்பாக முன்னெடுத்து வருகிற 'தீ' திரத்திற்கான கோயிலாக திருவண்ணாமலை கோவில் விளங்குகிறது. 

நிலா ஆண்டுக்கணக்கு அடிப்படையில் திதிகளில் விழா கொண்டாடுவது தமிழர் மரபு இல்லை. ஆனாலும் எக்காரணம் பற்றியோ திருவண்ணாமலையில், முழுநிலா நாட்களில் கோவிலின் பின்புறம் உள்ள மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் மலை சுற்றும் பாதையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலைவலம் செல்லும் வழிபாட்டுநடைமுறை முன்னெடுக்கப்பட்டு தொடர்கிறது.

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த இருபத்தி மூன்று மாதங்களாக திருவண்ணாமலையில் முழுநிலா நாள் மலைவலத்திற்கு மாவட்ட நிர்வாகம் மூலம் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு வந்தது.

தற்போது கொரோனா பரவல் முற்றிலும் குறைந்ததையடுத்து அனைத்து கட்டுப்பாடுகளும் விலக்கிக்கொள்ளப்பட்டன. இந்த நிலையில் இந்த மாதத்திற்கான முழுநிலா நாளில் பக்தர்கள் மலைவலம் செல்ல மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது. 

நேற்று முழுநிலா நாள் ஆனதால், 23 மாதங்களுக்கு பிறகு திருவண்ணாமலையில் மலைவலம் செல்ல அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பக்தர்கள் நேற்று காலையில் இருந்தே தனித்தனியாக மலைவலம் சென்றனர். காணும் இடமெல்லாம் பொதுமக்கள் யாரும் கலந்து கொள்ளும் வகைக்கு பலரும் விருந்தோம்பலில் ஈடுபட்டனர்.

மாலை சுமார் 5 மணிக்கு மேலிருந்து பக்தர்களின் வருகை அதிகரிக்க தொடங்கியது. இதனால் திருவண்ணாமலை மையப் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் அரசு கலைக்கல்லூரி அருகில் உள்ள நகராட்சித் திடல், திருக்கோவிலூர் சாலையில் உள்ள திடல் உள்ளிட்ட இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு அங்கு பேருந்துகள் நிறுத்தப்பட்டன.

மலைவலப்பாதையில் பக்தர்களுக்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருந்தன. மலைவலப்பாதையில் ஆங்காங்கே காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

கோவில் முன்பு பக்தர்கள் கற்பூர தீபம், நெய் தீபம் ஏற்றி வழிபட்டனர். இதனால் கோவில் முன்பு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இரவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலைவலம் சென்றனர். பக்தர்கள் விடிய, விடிய மலைவலம் சென்றனர். மேலும் பக்தர்களின் பாதுகாப்பை கருதி காவல் துறையினர் தொடர்ந்து உலாப்பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,191.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.