Show all

வருமான வரித்துறை கண்டுபிடித்துள்ளதாக தகவல்! பல ஆண்டுகள் வரிசெலுத்தாமல் மறைக்கப்பட்ட வருவாய் ரூ.1000 கோடியை

சூப்பர் சரவணா, சரவணா செல்வரத்தினம் நிறுவனங்களின் 37க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னெடுத்த வருமான வரித்துறையினர் சோதனையில்- ரூ 1000 கோடி வருவாயை பல ஆண்டுகளாக வருமான வரிக் கணக்கில் காட்டாமல் இருந்தது தெரியவந்தது என வருமான வரித்துறை அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

21,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: சென்னை தி.நகர், புரசைவாக்கம், குரோம்பேட்டை, போரூர் உள்ளிட்ட 37க்கும் மேற்பட்ட இடங்களில் சூப்பர் சரவணா, சரவணா செல்வரத்தினம் உள்ளிட்ட கடைகள் உள்ளன. இந்த கடைகளில் கடந்த 1ஆம் தேதி முதல் வருமான வரித் துறை சோதனை நடத்தப்பட்டது.

போரூர், புரசைவாக்கம் கடைகளில் நான்கு நாட்களாக நடந்த சோதனை முடிவடைந்த நிலையில், ஞாயிற்றுக் கிழமை ஐந்தாவது நாளாக திநகரில் உள்ள கடைகளில் சோதனை நடத்தப்பட்டது.

இந்த நிலையில் ஐந்து நாட்கள் நடத்தப்பட்ட சோதனை குறித்து வருமான வரித் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், புதியம் கிழமை முதல் சென்னை, கோவை, மதுரை மற்றும் நெல்லையில் சூப்பர் சரவணா, சரவணா செல்வரத்தினம் ஆகிய இரு நிறுவனங்களுக்கு சொந்தமான 37 இடங்களில் வருமான வரித் துறை சோதனை நடத்தினோம்.

இதில் சூப்பர் சரவணா ஸ்டோர்ஸில் இருந்து முதன்மை ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த நிறுவனம் ரூ 1000 கோடி வருவாயை பல ஆண்டுகளாக வருமான வரிக் கணக்கில் காட்டாமல் இருந்தது சோதனையில் தெரியவந்தது. அது போல் துகில், நகைகளை கணக்கில் வராத 150 கோடி ரூபாய் மூலம் வாங்கியதும் தெரியவந்துள்ளது.

அது போல் சரவணா செல்வரத்தினம் நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ 80 கோடி மதிப்பிலான போலி பற்றுத்தாள்கள் கண்டுபிடிக்கப்பட்டன. கணக்கில் வராத பணத்தின் மூலம் தங்கம் வாங்கியதற்கான ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டன. கணக்கில் வராத வாடகை பற்றுத்தாள்கள், பழைய பொருட்களை விற்பனை செய்ததன் மூலம் ரூ 7 கோடி கிடைத்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் சோதனை நடத்தப்பட்ட 37 இடங்களில் இருந்து ரூ 10 கோடி தொகையாக பணமும் ரூ 6 கோடி தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடத்தப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் வருமான வரித் துறையினர் தெரிவித்துள்ளனர்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,090.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.