Show all

ஒமிக்ரான் உருமாறிய குறுவியைக் கண்டறிய! தமிழ்நாட்டில் உள்ள 12 ஆய்வகங்களில் உரிய கருவிகள் ஏற்பாடு

பன்னாட்டு விமான நிலையங்கள் உள்ள சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட12 அரசு ஆய்வகங்களில் ஒமிக்ரான் உருமாறிய குறுவியைக் கண்டறிய, வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகத்தின் சார்பில் இதற்கான கருவிகள் ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

15,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: ஒமிக்ரான் உருமாறிய கொரோனா குறுவியை எளிதாக வெறும் 3 மணி நேரத்தில் கண்டறியும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள 12 ஆய்வகங்களில் உரிய கருவிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அண்மைக்கால பேசுபொருளாக மாறிவிட்ட ஒமிக்ரான் உருமாறிய கொரோனா, தென் ஆப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்டது. கடந்த காலங்களில் உருமாறிய கொரோனா வகைகளே அடுத்தடுத்த அலைகளை ஏற்படுத்தியதால், இம்முறை உலக நாடுகள் ஒமிக்ரான் குறுவிக்கு எதிராக எச்சரிகையுடன் உள்ளன.

தென் ஆப்பிரிக்காவில் இந்தக் குறுவி (வைரஸ்) முதலில் கண்டறியப்பட்டிருந்தாலும் கூட, வெகுசில நாட்களில் 10க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த உருமாறிய குறுவி பரவிவிட்டது. உலக நலங்கு அமைப்பு ஓமிக்ரான் கொரோனாவைக் கவலைக்குரிய கொரோனா வகையாக பட்டியிடப்பட்டுள்ளதால் பல்வேறு நாடுகளும் தென் ஆப்பிரிக்கா உடனான விமான போக்குவரத்துக்கு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளன. ஜப்பான், பிரிட்டன் போன்ற நாடுகள் முழுமையாகவே வெளிநாட்டினருக்குத் தடை விதித்து விட்டன.

இந்தியாவில் தற்போது வரை ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பு யாருக்கும் கண்டறியப்படவில்லை. இந்தியா வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு இன்று முதல் புது கட்டுப்பாடு, கடுமையான விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பொதுவாக மரபணு வரிசைப்படுத்துதல் சோதனை மூலம் ஒருவருக்கு என்ன மாதிரியான பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதைக் கண்டறிய ஒரு கிழமை வரை கூட ஆகும். ஆனால், வெறும் 3 மணி நேரத்தில் ஒமிக்ரான் உருமாறிய குறுவியைக் கண்டறியும் வசதி தமிழ்நாட்டில் உள்ள 12 ஆய்வகங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகத் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. 

பன்னாட்டு விமான நிலையங்கள் உள்ள சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட12 அரசு ஆய்வகங்களில் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகத்தின் சார்பில் இதற்கான கருவிகள் ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

ஓமிக்ரான் கொரோனாவின் புரத நீட்சிகளில் 30க்கும் மேற்பட்ட மாற்றங்கள் உள்ளதாகவும் இதுவரை எந்த உருமாறிய கொரோனா குறுவியிலும் இந்தளவுக்கு மாற்றங்களைக் கண்டறியவில்லை என்றும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். உலக நலங்கு அமைப்பும் இந்த ஓமிக்ரான் கொரோனா வகையைக் கவலைக்குரிய கொரோனா வகையாகப் பட்டியலிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,084.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.