Show all

தொடர்மழை காரணம்! ஏரிக்காடு மலைபாதையில் சரிந்தது, நூறாயிரம் கிலோ எடையுள்ள பெரும்பாறை

சேலம் அருகே அமைந்த கோடைச்சுற்றுலாத் தளமான ஏரிக்காடு மலைப் பாதையில் தொடர் மழை காரணமாக இடிந்து விழுந்த மாபெரும் பாறை, வெடி வைத்து அகற்றப்பட்டது.

27,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ்நாட்டையே தண்ணீர் காடாக்கியுள்ள வடகிழக்கு பருவக்காற்று சேலம் மாவட்டம், அருகே அமைந்த கோடைச்சுற்றுலாத் தளமான ஏரிக்காட்டிலும் கடந்த சில நாட்களாகத் தொடர் மழையை அளித்து வந்தது.

இந்நிலையில் தொடர் மழையின் காரணமாக, மலைப் பாதையில் உள்ள 60 அடிப் பாலத்தின் அருகில், நேற்று மாலை 6.30 மணியளவில் மாபெரும் பாறை ஒன்று உருண்டு விழுந்தது.

ஏரிக்காட்டில் இருந்து சேலம் வரும் வழியில், 60 அடிப் பாலத்தைத் தாண்டி 50 மீட்டர் தொலைவில் இந்தப் பாறை விழுந்தது. அந்த நேரத்தில் அவ்வழியாக வாகனங்கள் ஏதும் செல்லாததால், எதிர்பாராபாதிப்பு தவிர்க்கப்பட்டது. இதுகுறித்த தகவல் கிடைத்ததும், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும், காவல்துறையினரும் நிகழ்வு இடத்திற்கு விரைந்து சென்றனர். அந்தப் பாறை சாலையின் ஒரு பகுதியில் விழுந்துள்ளது.

சுமார் 100 டன் எடையுள்ள அந்த மாபெரும் பாறையை வெடி வைத்துத் தகர்த்துதான் அப்புறப்படுத்த முடியும் என்பதால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பாறையை வெடிவைத்துத் தகர்த்தனர். தற்போது பாறையை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்

இதற்காக இரண்டு பொக்லைன் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு, இரவு பகலாக அதிகாரிகள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மலைப்பாதையில் பாறை கிடக்கும் இடம் அண்மையில் சாலை அகலப்படுத்திய இடம் என்பதால் காவல்துறையினர் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி, வாகனங்களை அனுப்பி வைத்து வருகின்றனர். அங்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,066.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.