Show all

ஒற்றை இரவில் மாறிப்போனது வாழ்க்கை! கோடிகளைப் பரிசுகளாகக் குவிக்கும் தடகளவீரர்

ஒரே இரவில் மாறியே விட்டது நீரஜ் சோப்ரா வாழ்க்கை. டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் ஈட்டி எறிதலில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவுக்குப் பரிசு மழை கொட்டி வருகிறது. 

23,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5123: ஒரே இரவில் மாறியே விட்டது நீரஜ் சோப்ரா வாழ்க்கை. டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் ஈட்டி எறிதலில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவுக்குப் பரிசு மழை கொட்டி வருகிறது. 

டோக்கியோவில் இந்தியா மொத்தம் 7 பதக்கங்களை வென்றிருந்தாலும், அதில் தங்கம் வென்றது நீரஜ் தான். ஒலிம்பிக்கில் தடகள பிரிவில், கடந்த 100 ஆண்டு கால காத்திருப்பை, ஏக்கத்தை நிறைவு செய்துள்ளார் நீரஜ் சோப்ரா. 
டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியின் இறுதிச்சுற்று நேற்று நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த மொத்தம் 12 வீரர்கள் கலந்துக்கொண்ட நிலையில் அவர்களுக்கு நீரஜ் சோப்ரா முதல் சுற்றில் இருந்தே அறைகூவலாகத் திகழ்ந்தார். மொத்தம் 12 வீரர்கள் பங்கேற்ற இறுதிச்சுற்று, 6 சுற்றுகளாக நடத்தப்பட்டது. அதாவது மொத்தம் 6 வாய்ப்புகள் கொடுக்கப்பட்டன. தனது முதல் சுற்றில் 87. 03 மீட்டர் தூரம் ஈட்டியை வீசி நீரஜ் சோப்ரா அசத்தினார். 2வது சுற்றில் 87.58 மீ தூரம் வீசி அசர வைத்தார். இதனால் முதல் 2 சுற்றுகளில் உச்ச இடத்தில் இருந்தார். இதன் பின்னர் நடைபெற்ற 3,4, 5வது சுற்றுகளில் நீரஜ் சோப்ராவால் பெரியளவில் சாதிக்க முடியவில்லை. எனினும் சோப்ராவாவின் 87.58 மீட்டர் என்ற தூரத்தை எந்த ஒரு வீரராலும் தகர்க்க முடியவில்லை. 

இதனால் இறுதியில் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா முதலிடத்தை பெற்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். இந்தச் சாதனையைத் தொடர்ந்து, நீரஜ் சோப்ராவுக்கு பரிசு மழை குவிந்து வருகிறது. 

ஹரியானா முதல்வர் எம்.எல்.கட்டார் விடுத்த அறிவிப்பில், ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு, ரூ.6 கோடி தொகைப் பரிசும், முதல்நிலைப் பணியும், ஒரு குடியிருப்பு மனை குறைந்த விலையிலும் வழங்கப்படும் என அறிவித்தார். 

பஞ்சாப் முதல்வர் அமரிந்தர்சிங் விடுத்த அறிவிப்பில், ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பஞ்சாப் அரசு சார்பில் ரூ.2 கோடி தொகைப்பரிசு வழங்கப்படும். எனத் தெரிவித்துள்ளார். 

இந்திய துடுப்பாட்டக் கட்டுப்பாட்டு வாரியம் விடுத்த அறிவிப்பில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு ரூ.1 கோடி தொகைப் பரிசு வழங்கப்படும் என அறிவித்தது. 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பரிசு அறிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அணி விடுத்த அறிவிப்பில், ஈட்டி எறிதலில் ஒலிம்பிக்கில் தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த நீரஜ் சோப்ராவுக்கு சிஎஸ்கே அணி சார்பில் ரூ.1 கோடி தொகைப் பரிசு வழங்கப்படும். அவர் எறிந்த தொலைவைக் குறிப்பிட்டு 8758 என்ற எண்ணில் ஜெர்ஸி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. 

இந்திய விமான நிறுவனமான இன்டிகோ நிறுவனம், ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா இன்று முதல், இன்டிகோ நிறுவனத்தில் ஓராண்டுக்கு எவ்விதக் கட்டணமும் இன்றி பயணிக்கலாம் எனத் தெரிவித்துள்ளது. 

மகிந்திரா அண்ட் மகிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மகிந்திரா விடுத்த அறிவிப்பில், ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா இந்தியா வந்தபின் அவருக்குப் புதிய எக்ஸ்யுவி 700 வகை சொகுசு கார் பரிசாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார். 

எலான் குழுமத்தின் தலைவர் ராகேஷ் கபூர் விடுத்த அறிவிப்பில், நீரஜ் சோப்ராவுக்கு ரூ.25 லட்சம் ரொக்கப் பரிசு தங்கள் நிறுவனத்தின் சார்பில் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். 

மணிப்பூர் அரசும் பரிசு அறிவித்துள்ளது. 100 ஆண்டுகளுக்குப் பின் ஒலிம்பிக்கில் தடகளத்தில் இந்தியா தங்கப் பதக்கம் வென்றது வரலாற்று நாள். ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவைப் பெருமைப்படுத்த அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இதையடுத்து சோப்ராவுக்கு ரூ.1 கோடி பரிசு வழங்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது என அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.