Show all

இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் வென்றார் மல்யுத்த வீராங்கனை பிரியா மாலிக்! இது டோக்கியோ ஒலிம்பிக்கில் முன்னெடுக்கப்பட்ட சாதனையல்ல.

இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் வென்றுகொடுத்து அசத்தியுள்ளார் மல்யுத்த வீராங்கனை பிரியா மாலிக். இது டோக்கியோ ஒலிம்பிக்கில் முன்னெடுக்கப்பட்ட சாதனையல்ல. ஹங்கேரி நாட்டு புடாபெஸ்டில் நடைபெற்று வரும் உலக இளவல்நிலை மல்யுத்த வாகையர் தொடரில்.

09,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5123: ஹங்கேரி நாட்டு புடாபெஸ்டில் உலக இளவல்நிலை மல்யுத்த வாகையர் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இந்தியாவை சேர்ந்த மல்யுத்த வீராங்கனை பிரியா மாலிக் தங்கப்பதக்கம் வென்று பெருமை சேர்த்துள்ளார். 

இந்த தொடருக்கான இறுதிப்போட்டி இன்று நடைபெற்ற சூழலில், இந்தியாவின் பிரியா மாலிக் 73 கிலோ பிரிவில் களமிறங்கினார். இவரை எதிர்த்து பெலாரஸ் நாட்டின் க்சேனியா படபோவிச் போட்டியிட்டார். தொடக்கம் முதலே ஆவேசமாக செயல்பட்ட மாலிக் ஆட்டத்தின் அடுத்தடுத்து புள்ளிகளை தன்பக்கம் சேர்த்து முன்னிலை பெற்றார். 

பிரியா மாலிக் ஆட்டம் முழுவதுமே மிகவும் சாதூர்யமாக செயல்பட்டதால் பெலாரஸ் நாட்டு வீராங்கனையால், அவரை வீழ்த்தி ஒரு புள்ளிகளை கூட பெறமுடியவில்லை. இதனால் ஆட்டத்தின் முடிவில் 5-0 என்ற கணக்கில் பிரியா வெற்றிபெற்று தங்கப்பதக்கத்தை ஏந்தினார். 

முந்தாநாள் தெடங்கி இன்னும் இரண்டு கிழமைகள் தொடரவுள்ள டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு இன்னும் ஒரு தங்கம் கூட கிடைக்காமல் வருத்தத்தில் உள்ள இந்திய விளையாட்டுக் கொண்டாடிகளுக்கு மற்றொரு சிறப்புமிக்க தொடரில் இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் கிடைத்திருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதனால் பிரியா மாலிக்குக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. இது குறித்து கீச்சுவில் பதிவிட்டுள்ள மேற்குவங்க முதல்வர் மமதா பேனர்ஜி, தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ள பிரியா மாலிக்கை நினைத்து பெருமை படுவதாக குறிபிட்டுள்ளார். இதே போல வடக்கத்திய திரைத்துறை கலைஞர்களான கரீனா கபூர், அபிஷேக் பச்சன், சன்னி டியோல், ஏக்தா கபூர் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.