Show all

நான்காவது முறையாக IPL கோப்பையை வென்றது மும்பை; போராடி தோற்றது சென்னை

2019 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனின் இறுதிப் போட்டி ஐதராபாத் ராஜிவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 

இதையடுத்து முதலில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தது. பொல்லார்டு 25 பந்தில் மூன்று பவுண்டரி மற்றும் 3 சிக்சருடன் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 150 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. சென்னை அணி சார்பில் தீபக் சாகர் 3 விக்கெட்டுகளையும், தாகுர் மற்றும் இம்ரான் தாஹிர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 

151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அணி களமிறங்கியது. சென்னை அணி ஆரம்பத்தில் சிறப்பாக தொடங்கினாலும் ரெய்னா, ராயுடு மற்றும் டோனி ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் 15 ஓவர்களில் 88 ரன்கள் மட்டுமே எடுத்தது. எனினும் வாட்சன் சிறப்பாக விளையாடி 80 ரன்கள் குவித்து கடைசி ஓவரில் ரன் அவுட் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதியில் கடைசி பந்துக்கு 2 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட போது சர்துல் தாகூர் அவுட் ஆனதால் மும்பை இந்தியன்ஸ் அணி 1 ரன் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி 4-வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது. மும்பை அணி சார்பில் பும்ரா இரண்டு விக்கெட்டுகளையும், பாண்டயா, மலிங்கா மற்றும் சாகர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

சென்னை அணி பங்கேற்ற 10 சீஸனில் 8 முறை இறுதிப்போட்டி வரை சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.