Show all

வல்லவனுக்கு விளையாட்டும் வெற்றிக்கான ஆயுதம்! இளம் சதுரங்க வீரர் பிரக்ஞானந்தாவிற்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பணி

உலகின் முன்னணி சதுரங்க வீரர்களை வீழ்த்தி செசபிள் மாஸ்டர்ஸ் தொடரில் இரண்டாவது இடம் பிடித்த இந்திய இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவிற்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு வழங்கப்படுவதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. 

13,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5124: சென்னை பாடியில் பிறந்த சிறுவனான பிரக்ஞானந்தா உலக அளவில் சதுரங்கப் போட்டிகளில் அசத்தி வருகிறார். ஐந்து அகவை முதல் சதுரங்க சோதனைப் போட்டிகளில் பங்கேற்று வரும் இவர் ஏழு அகவையிலேயே உலக வாகையர் பட்டத்தை வென்றுள்ளார். 

பத்தாவது அகவையில் பன்னாட்டு சதுரங்கத் தலைவன் வென்ற அவர், இளஅகவையில் பன்னாட்டு சதுரங்க தலைவர் பட்டத்தை வென்றவர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதேபோல் பல பட்டங்களையும் அவர் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இரண்டு மாதங்களுக்கு முன்பு உலக அளவில் சிறந்த 16 வீரர்கள் பங்கேற்ற செஸ்ஸபிள் மாஸ்டர் இயங்கலை சதுரங்கப் போட்டி தொடங்கியது. இந்தப் போட்டியில் சென்னையைச் சேர்ந்த 16 அகவை இளம் வீரர் பிரக்ஞானந்தாவும் பங்கேற்றார். 

தொடரின் 5வது சுற்றில் வாகையரும் முதல் நிலை வீரருமான நார்வே நாட்டைச் சேர்ந்த மேக்னஸ் கார்ல்சனை எதிர்த்து விளையாடினர் ப்ரக்ஞானந்தா. ஆட்டம் வெற்றிதோல்வி இல்லா நிலையை நோக்கிசென்று கொண்டிருந்த போது, கார்ல்சன் தனது 40வது நகர்வை தவறுதலாக நகர்த்தினார். இதை சாதகமாக்கி கார்ல்சனை தோற்கடித்தார். 

அடுத்ததாக கால் இறுதி சுற்றில், பிரக்ஞானந்தா 2.5-1.5 என்ற கணக்கில் சீனாவின் வெய்யியை வீழ்த்தினார். தொடரில் 2வது இடம் அரையிறுதி சுற்றில் நெதர்லாந்து வீரர் அனிஷ் கிரியை டை பிரேக்கர் சுற்றில் 1.5 - 0.5 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தினார். 

இதை தொடர்ந்து இறுதி போட்டிக்கு முன்னேறிய பிரக்ஞானந்தா சீன வீரர் டிங் லிரனை சந்தித்தார். இந்த போட்டியில் முதல் செட்டை சீன வீரர் திங் லிரன் கைப்பற்றினார். ஆனால் 2வது செட்டுக்கான போட்டியில் அவர் திறமையாக விளையாடி வெற்றி பெற்றார். இதனால், 1-1 என்ற செட் கணக்கில் போட்டி சமன் அடைந்தது. தொடர்ந்து டை பிரேக்கரில் தோல்வியடைந்ததால் 2வது பிடித்தார் ப்ரக்ஞானந்தா. 

உலகின் முன்னணி சதுரங்க வீரர்களை வீழ்த்தி செசபிள் மாஸ்டர்ஸ் தொடரில் இரண்டாவது இடம் பிடித்த இந்திய இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவிற்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு வழங்கப்படுவதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. 

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் வியாழன் அன்று அதன் தலைவர் ஸ்ரீகாந்த் மாதவ் வைத்யா மற்றும் அதன் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத் தலைவர் வி.சி. அசோகன் ஆகியோர் கலந்துகொண்ட விழாவில் முறைப்படி அந்நிறுவனத்தில் இணைந்தார். 

இப்போது 16 அகவையில் இருக்கும் ப்ராக்ஞானந்தா 18 அகவை எட்டியதும் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனத்தில் முறைப்படி இடம் பெறுவார். 

விழாவில் பேசிய ப்ராக்ஞானந்தா, இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் சார்பில் இணைப்பு ஆணை வழங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இந்தியன் ஆயில் கார்ப்பரேசனுடன் இருக்கும் பல சதுரங்க வீரர்களை நான் அறிவேன், அது அவர்களுக்கு எப்படி ஆதரவளிக்கிறது என்பது எனக்கு தெரியும், இந்தியன் ஆயில் கார்ப்பரேசனில் இணைந்தது பெருமையாக உள்ளது. இது எனது சதுரங்க வாழ்க்கையில் எனக்கு பெரும் ஆதரவாக இருக்கும் என்றார். 

இனி அவர் பங்கேற்கும் போட்டிகளுக்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் ஆதரவு வழங்குவதோடு, அலுவலர் அளவிலான பணிக்கு ஊதியம் என ஆண்டுக்கு பல லட்சம் ரூபாய் அவருக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,261.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.