Show all

பாராட்டும் வரவேற்பும் பெற்ற தமிழ்நாட்டுச் சிறுமி! உலக வில்வித்தை போட்டியில் தங்கம் வென்றார்.

உலக அளவிலான இளவல் வாகையர் வில்வித்தைப் போட்டியில் தங்கம் வென்ற தமிழ்நாட்டுச் சிறுமிக்கு பாராட்டி வரவேற்பு அளித்தனர்.

03,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123: உலக அளவிலான இளவல் வாகையர் வில்வித்தைப் போட்டியில் தங்கம் வென்ற தமிழ்நாட்டுச் சிறுமிக்கு பாராட்டி வரவேற்பு அளித்தனர்.

போலந்து நாட்டில் நடந்த உலக இளைவல் வில்வித்தை வாகையர் போட்டியில் 52 நாடுகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் இந்திய அணியில் அங்கம் வகித்த கோவையை சேர்ந்த 14 அகவை ரிதுவர்சினி தங்கப்பதக்கம் வென்றார். 

போலந்தில் இருந்து நாடு திரும்பிய வில்வித்தை வீரர், வீராங்கனைகளை ஒன்றிய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாக்குர் பாராட்டினார். பின்னர் டெல்லியில் இருந்து சென்னைக்கு விமானம் முலம் வந்த ரிதுவர்ஷினியை விமான நிலையத்தில் தமிழ்நாடு வில்வித்தை சங்க செயலாளரும் இந்திய வில்வித்தை பயிற்சியாளர்கள் இயக்குனருமான சிகான் குசைனி மற்றும் வில்வித்தை வீரர்கள் மாலை அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர். அப்போது குசைனி செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘முதல்முறையாக உலக வில்வித்தை போட்டி போலந்து நாட்டில் நடந்தது. அந்த போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ரிதுவர்சினி உலக வாகையர் பட்டத்தை பெற்று இருக்கிறார். இது இந்தியாவிற்கு மட்டுமில்லாமல் தமிழ்நாட்டிற்கும் பெருமையாகும். ரிதுவர்சினிக்கும், அவரது பெற்றோருக்கும் பயிற்சியாளருக்கும் பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்’ என்றார்.

தங்கப்பதக்கம் பெற்ற ரிதுவர்சினி பேசுகையில், ‘பன்னாட்டுப்;; போட்டியில் இது தான் எனது முதல் வெற்றி. என்னுடைய வெற்றிக்கு நான் மட்டுமின்றி நிறைய பேரின் உழைப்பும் காரணமாகும். உலக இளவல் போட்டியில் வெற்றி பெற்றது போல் முதுவர் வாகையர் போட்டியிலும் பட்டத்தை வெல்ல ஆசைப்படுகிறேன். அரை இறுதிப்போட்டியில் இத்தாலியை வென்றோம். இறுதிப்போட்டியில் துருக்கியை வீழ்த்தினோம்’ என்றார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.