09,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மும்பை பாந்த்ரா தொடர்வண்டி நிலையத்துக்கு வெளியே இன்று பெஹ்ராம்படா குடிசைப் பகுதிகளில் பயங்கரமான தீப்பிடிப்புச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. மும்பை மாநகர அதிகாரிகள் இங்கு கட்டிட இடிப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த போது இந்தப் பயங்கர தீப்பிடிப்புச் சம்பவம் ஏற்பட்டுள்ளது. இந்தத் தீ தொடர்வண்டி நிலையத்தின் நடை மேம்பாதை மேற்கூரைக்கும் பரவியது. அந்த இடமே புகைமண்டலமாக காட்சியளிக்கிறது. இதில் தீயணைப்பு வீரர் ஒருவர் காயமடைந்தார். பிஎம்சி பேரழிவுக் கட்டுப்பாட்டு அமைப்பின் தகவல்களின் படி 16 தீயணைப்பு வண்டிகள், 17 தண்ணீர் வண்டிகள் தீயணைப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. பல கிலோமீட்டர்களுக்கு புகை மண்டலம் தெரிகிறது. தொடர்வண்டி நிலையம் அருகேயுள்ள மேம்பாதையை அதிகாரிகள் அடைத்துள்ளனர். மேற்கு எக்ஸ்பிரஸ் ஹை வேயில் பெரிய அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. முதல் எரிவாயு சிலிண்டர் வெடித்து பிறகு மேலும் 2 சிலிண்டர்கள் வெடித்து தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மிகவும் நெரிசலான இந்தக் குடிசைப்பகுதியில் வீடுகளில் சிலிண்டர்கள் இருப்பதால் தீவிபத்து மேலும் மோசமடையலாம் என்ற பீதி நிலவுகிறது. அண்மை நிலவரப்படி நிலைமை பெரும்பாலும் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. தீயணைப்பு வீரர் ஒருவருக்கு காயம் தவிர உயிரிழப்புகள் பற்றி தெரியவில்லை. அனைத்துப் பக்கங்களிலிருந்தும் தீயை அணைக்க போராடி வருகின்றனர் என்று தலைமை தீயணைப்பு அதிகாரி பி.எஸ். ரஹாங்டேல் தெரிவித்துள்ளார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.