Show all

அறிவோம் இந்திய அரசியலமைப்பு

இருபத்தியோரு மொழிக்கான மாநில ஆட்சிக்கு முனையும் அரசியல் கட்சிகளும்- பெருவாரியாக ஒருங்கிணைந்து போராடினால் 17 சட்டப்பிரிவை அப்புறப்படுத்தி அட்டவணை எட்டில் குறித்த தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளுக்கும் சமமான அதிகாரத்தை நிறுவிடலாம்.

21,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5123: இந்திய அரசியலமைப்பு என்பது இந்தியாவின் உயர்ந்தபட்ச சட்டமாகும். இது எழுதப்பட்டு சட்டமாக்கப்பட்ட அரசியலமைப்பு, நெகிழாத்தன்மையும் நெகிழ்ச்சித் தன்மையும் உடையது, கூட்டாட்சியும் ஒருமுகத்தன்மையும் கொண்டது, பொறுப்புள்ள அரசாங்கத்தை உடையது. இது அடிப்படை அரசியல் கொள்கைகள், அரசாங்க நிறுவனங்களின் கட்டமைப்பு, நடைமுறைகள், சக்திகள், மற்றும் அடிப்படை உரிமைகள், உத்தரவுக் கொள்கைகள், குடிமக்களின் கடமைகள் ஆகியவற்றின் கட்டமைப்புகளை உள்ளடக்கியுள்ளது. 

இதில் மொத்தம் 25 பிரிவுகள், 12 அட்டவணைகள், 104 திருத்தங்கள், 448 உட்பிரிவுகள் மற்றும் 1,17,369 சொற்கள் உள்ளன. இது ஆங்கிலப் பதிப்பைத் தவிர, ஒரு ஹிந்தி மொழிபெயர்ப்பினையும் கொண்டுள்ளது. 

இந்திய அரசியலமைப்பை உருவாக்கும் பணி இந்தியா விடுதலை பெற்ற இரண்டாவது கிழமை தொடங்கியது. முதல் இந்திய அரசமைப்பு நிர்ணய மன்றத்தால் தொடங்கப்பட்டது. முழுமையடைந்த அரசியலமைப்பு நாளது 10,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5052 அன்று (26.08.1950) நடைமுறைக்கு வந்தது. இதன் மூலம் இந்தியா ஒரு ஒருங்கிணைந்த, தன்னாட்சி கொண்ட, குடியரசின் மக்களாட்சிக் கோட்பாட்டின்படி வழிநடத்துகின்ற நாடாக அறிவித்துக் கொண்டது. இந்தியா தனது அரசியலமைப்பின் ஏற்பை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26ம் தேதியை குடியரசு நாளாகக் கொண்டாடுகிறது.

இந்திய அரசியலமைப்பின் படி இந்தியா ஒரு கூட்டாட்சி (பெடரிலிசம்) நாடாகும். இருப்பினும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் ‘கூட்டாட்சி’ கூட்டரசு (பெடரல் கவர்ன்மென்ட்) என்ற சொல்லிற்குப் பதிலாக ‘ஒன்றியம்’ (யூனியன்) என்ற சொல்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்திய அரசியலமைப்பின் முகப்புரையில், ‘இறையாண்மை உடைய மக்களாட்சி, சமதர்ம, சுதந்திரக் குடியரசு’ என்றும்  ‘இந்திய ஒன்றியம்’ என்றும் இந்தியா பெயரிடப்பட்டுள்ளது. இது இச்சட்டத் தொகுப்பின் முழுப் புரிதலையும் தரும்படி அமைக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியக் குடிமக்களுக்கான அடிப்படை உரிமைகள் தொடக்கத்திலேயே வழங்கப்பட்டிருந்தாலும், பின்பு அடிப்படைக் கடமைகளும் உருவாக்கப்பட்டன. இந்திய அரசமைப்பின் தனிச் சிறப்புக்களில் ‘அடிப்படை உரிமைகளும்’ அடங்கும்.

இந்திய அரசமைப்பு சட்டம் உருவாக்கப்படும் போது, பல்வேறு நாடுகளின் அரசமைப்புச் சட்டங்களின் கூறுகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. இதனால் இந்திய அரசமைப்பு சட்டத்தை, ‘கடன்களின் பொதி’ என்பர். ‘கூட்டாட்சி முறையை’ கனடாவில் இருந்தும், ‘அடிப்படை உரிமைகள்’ அமெரிக்க ஐக்கிய நாடுகளிடம் இருந்தும், அடிப்படைக் கடமைகளை அன்றைய சோவியத் யூனியனிடமிருந்தும் பெற்றது. அரசியல் சட்டத்திருத்த முறையை தென்னாப்பிரிக்கா விடமிருந்தும், மாநிலங்களவை நியமன பாராளுமன்ற உறுப்பினர்கள் முறையை அயர்லாந்திடம் இருந்தும் பெற்றது.

இந்திய அரசியலமைப்பு 22 அத்தியாயங்களாகப் பிரிகக்ப்பட்டுள்ளது. 

பகுதி 1 (உட்பிரிவு 1-4) இந்திய ஒன்றியம் பற்றியது. அதாவது மாநில அமைப்பு. மாநில எல்லை வரையறை போன்றவை.

பகுதி 2 (உட்பிரிவு 5-11) இந்திய குடியுரிமை பற்றியது.

பகுதி 3 (உட்பிரிவு 12-35) அடிப்படை உரிமைகள் மற்றும் அது மறுக்கப்படும் போது அதற்கான தீர்வுகள்.

பகுதி 4 (உட்பிரிவு 36-51) அரசு கொள்கைக்கான வழி காட்டும் நெறிகள்.

பகுதி 4அ (உட்பிரிவு 51அ) அடிப்படை கடமைகள். (1976 ஆம் ஆண்டு 42வது திருத்தத்தின் மூலம் சேர்க்கப்பட்டது)

பகுதி 5 (உட்பிரிவு 52- 151) ஒன்றிய அரசமைப்பு அதாவது குடியரசு தலைவர், துணைக் குடியரசு தலைவர், நடுவண் அமைச்சரவை, பாராளுமன்றம் மற்றும் அதன் அமைப்பு, உச்ச அறங்கூற்றுமன்றம் மற்றும் அதன் அமைப்பு.

பகுதி 6 (உட்பிரிவு 152-237) மாநில அரசமைப்பு, ஆளுநர், மாநில அமைச்சரவை. மாநில சட்டமன்றம் மற்றும் சட்ட மேலவை அதன் அமைப்பு உயர் அறங்கூற்று மன்றம் அதன் அமைப்பு.

பகுதி 7 (உட்பிரிவு 238) அரசமைப்பு சட்டம் முதல் பட்டியலில் உள்ள மாநிலங்கள் பற்றியது- இந்தப் பிரிவு இப்போது நீக்கப் பட்டுள்ளது.

பகுதி 8 (உட்பிரிவு 239 -242) ஒன்றியப் பகுதிகள் குறித்து.

பகுதி 9 (உட்பிரிவு 243-243) உள்ளாட்சி நிர்வாகம் இந்த உட்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளன.

பகுதி 9அ (உட்பிரிவு 243அ) நகராட்சி நிர்வாகம் இந்த உட்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளன.

பகுதி 10 (உட்பிரிவு 244) பட்டியல் சாதிகள், பழங்குடியினர், ஆங்கிலோ இந்தியர் ஆகியோர் குறித்து.

பகுதி 11 (உட்பிரிவு 245-263) ஒன்றிய மற்றும் மாநில அரசு உறவு, மாநிலங்ளுக்கிடையேயான உறவு.

பகுதி 12 (உட்பிரிவு 264-300) அரசின் நிதி குறித்த உட்பிரிவுகள் நிதி மற்றும் நிதியினைக் கையாளும் நெறிகள்.

பகுதி 13 (உட்பிரிவு 301-307) இந்திய நாட்டில் வணிகம் செய்யும் நடைமுறைக்கான உட்பிரிவுகள்.

பகுதி 14 (உட்பிரிவு 308-323) அரசுப் பணிகள்

பகுதி 14அ (உட்பிரிவு 323அ மற்றும் 323ஆ) ஒன்றிய அரசின் தீர்ப்பாயங்கள்.

பகுதி 15 (உட்பிரிவு 324-329) தேர்தல்கள், தேர்தல் ஆணையம்.

பகுதி 16 (உட்பிரிவு 330-342) - பகுதிவாரி பெரும்பாண்மை சாதிகளுக்கான உரிமைகள் பற்றி.

பகுதி 17 (உட்பிரிவு 343-351) அலுவல் மொழி, வட்டார மொழி, அறங்கூற்று மன்றங்களில் மொழி.

பகுதி 18 (உட்பிரிவு 352-360) அவசர நிலைக்கானது பிரகடனம் (எமெர்ஜென்சி)

பகுதி 19 (உட்பிரிவு 361-367) இதர (இதில் குடியரசு தலைவர், ஆளுநர் இந்தப் பதவிக்கான சட்ட சிறப்பு பாதுகாப்பு மற்றும் சில)

பகுதி 20 (உட்பிரிவு 368) இந்திய அரசமைப்புச் சட்டம் திருத்தம் அதற்கான நடைமுறை.

பகுதி 21 (உட்பிரிவு 369-392) தற்காலிக, இடைநிலை மற்றும் சிறப்பு ஒதுக்கீடுகள்

பகுதி 22 (உட்பிரிவு 392-395) குறுகிய தலைப்பு, ஆரம்பம் தேதி, இந்தி மற்றும் ரிப்பீல்ஸில் அதிகாரப்பாட்டு உரை.

முதலாம் அட்டவணை

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் விவரம் மற்றும் அவற்றின் எல்லை பட்டியலை கொண்டுள்ளது.

இரண்டாவது அட்டவணை

குடியரசு தலைவர், மாநில ஆளுநர்கள், ராஜ்ய சபா, லோக் சபா சபாநாயகர் மற்றும் துணைத் தலைவர், மாநில சட்டமன்ற சபாநாயகர் மற்றும் துணைத் தலைவர், உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆகியோரது சிறப்பு உரிமைகள் மற்றும் ஊதிய படிகள் விவரங்களை கொண்டுள்ளது.

மூன்றாவது அட்டவணை

பதவி பிரமாணம் மற்றும் உறுதிமொழிகள்

நான்காவது அட்டவணை

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் மாநிலங்களவையின் (ராஜ்ய சபா) எண்ணிக்கை

ஐந்தாவது அட்டவணை

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினரின் நிர்வாகம் மற்றும் கட்டுப்பாடு விதிகளை கொண்டுள்ளது.

ஆறாவது அட்டவணை

அசாம், மேகாலயா, திரிபுரா மற்றும் மிசோரம் மாநிலங்களில் உள்ள பழங்குடிப் பகுதிகளின் நிர்வாக விதிகளை கொண்டுள்ளது.

ஏழாவது அட்டவணை

மத்திய, மாநில அரசு அதிகார பட்டியல் மற்றும் பொது பட்டியலை கொண்டுள்ளது.

எட்டாவது அட்டவணை

அங்கீகரிக்கப்பட்ட அலுவலக மொழிகளின் பட்டியலை கொண்டுள்ளது.

ஒன்பதாவது அட்டவணை

நில சீர்திருத்தம் மற்றும் ஜமீன்தாரி ஒழிப்பு சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறையின் விதிகளை கொண்டுள்ளது.

பத்தாவது அட்டவணை

கட்சி தாவல் மற்றும் தகுதியிழப்பு போன்ற விதிகளை கொண்டுள்ளது.

பதினோராவது அட்டவணை

பஞ்சாயத்துகளின் அதிகாரம் மற்றும் பொறுப்புகளை உள்ளடக்கியது.

பனிரெண்டாவது அட்டவணை

நகராட்சிகளின் அதிகாரம் மற்றும் பொறுப்புகளை உள்ளடக்கியது.

இந்தியா விடுதலை பெற்றதிலிருந்து ஆட்சியில் இருந்து வரும் வடஇந்தியக் கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜகவின் ஆட்சியாளர்கள் - இதில் அட்டவணை எட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள அரசியலமைப்புச் சட்டப்படி, தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளில், ஹிந்திக்கு மட்டும் அதிகாரம் வழங்கி மற்ற மொழிகளுக்கு உரிய அதிகாரம் வழங்குவதற்கான நடைமுறைகளைச் செயல்படுத்தாமல் ஏமாற்றி வருகின்றன.

ஹிந்திக்கு மட்டும் அதிகாரம் வழங்குவதற்கு இந்திய அரசியலமைப்பின் 22 அத்தியாயங்களில் சட்டப்பிரிவு 17ல் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி அலுவல் மொழிகள் என்று குறிப்பிட்டாலும், ஹிந்தியை மட்டும் வைத்துக் கொண்டு ஆங்கிலத்தை அப்புறப்படுத்த வேண்டும் என்ற செய்தியே அந்தச் சட்டப்பிரிவில் தலைமை இடம் பெறுகிறது. 

அரசியல் சட்டப்பிரிவு 17 ஆனது, ஆங்கிலத்தை அகற்றும் போது அந்த இடத்தில் ஹிந்தியை நிறுவுவதற்கான சட்டப்பிரிவாக வைக்கப்பட்டுள்ளது. அந்தச் சட்டப்பிரிவில் ஆங்கிலத்தை 15 ஆண்டுகளுக்குள் அப்புறப்படுத்திவிட்டு ஹிந்தியை நிறுவ மட்டுமே காலம் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இந்தியா விடுதலை பெற்று எழுபத்து ஐந்து ஆண்டுகளாக ஆங்கிலத்தை அப்புறப்படுத்த சிறப்பாக தமிழ்நாடும், பொதுவாக மற்ற மற்ற மாநிலங்களும் அனுமதிக்காமல் தொடரும் நிலையில் கடந்த அறுபது ஆண்டுகளாக தோல்வியுற்ற 17 சட்டப்பிரிவை அப்புறப்படுத்தாமல் வைத்துக் கொண்டிருப்பது ஒன்றிய ஆட்சிக்கு முனைகிற கட்சி காங்கிரசானாலும், பாஜகவானாலும் அவைகளில் இருப்பவர்கள் ஹிந்தி ஆதிக்கவாதிகளாக இருக்கிற காரணம் பற்றியதாகும்.

பதினைந்து கூட்டல் அறுபது என கடந்த எழுபத்தைந்து ஆண்டுகளாக ஆங்கிலத்திற்கு மாற்றாக ஹிந்தியை நிறுவ முடியாத நிலையில், அட்டவணை எட்டில் அந்த ஹிந்தியும் ஒரு மொழியாக இடம் பெற்றிருக்கிற நிலையில்- 

சட்ட உள்பிரிவு 320ஐ நீக்குவதில் இன்றைக்கு பாஜக காட்டி வென்றெடுத்த முனைப்பை- 

மற்ற இருபத்தியோரு மொழிக்கான மாநில ஆட்சிக்கு முனையும் அரசியல் கட்சிகளும்- பெருவாரியாக ஒருங்கிணைந்து போராடினால் 17 சட்டப்பிரிவை அப்புறப்படுத்தி அட்டவணை எட்டில் குறித்த தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளுக்கும் சமமான அதிகாரத்தை நிறுவிடலாம். இதை நாம் மக்களின் பேசுபொருளாக்கிட தொடர்ந்து எழுதுவோம்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.