Show all

இருவருமே தமிழ்இசையில் தடம் பதித்தவர்கள்! ஆனாலும் அப்பா ஹிந்துத்துவாவில், நல்லவேளை மகன் தமிழியலில்

சமூகநீதிக் காவலர் அம்பேத்கரையும் ஹிந்துத்துவா ஆதிக்கவாதி மோடியையும், இளையராசா ஒப்பீடு செய்து எழுதியிருந்த முன்னுரை அரசியல் களத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

06,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5124: இளையராசா என்றதும் நமக்கு நினைவுக்கு வருவது- தமிழ்நாட்டின் தெருக்கள்தோறும் முழங்கப்பட்டு வந்த ஹிந்தி திரைஇசைப்பாடல்களை ஓடஓட விரட்டியடித்து, தமிழ்படப் பாடல்களை அந்த இடங்களில் நிறுத்திய பெருமைதான்.
 
ஆனாலும்- ஹிந்தியை தமிழ்த்தெருக்களில் இருந்து விரட்டியடித்த இளையராசா, ஹிந்துத்துவாவை கொண்டாடுவதில் சளைத்தவர் இல்லை. இன்று எல்லை கடந்து- சமூக நீதிக்கான மாமனிதன் அம்பேத்காரோடு, ஹிந்துத்துவா பேராதிக்க அமைப்பான ஆர்எஸ்எஸ்ஸின் பெருந்தொண்டன் மோடியை ஒப்பிட்டு புகழ்ந்தது சமூகநீதி மற்றும் நடுநிலையாளர்களால் கொஞ்சமும் தங்கிக்கொள்ள முடியாத முன்னெடுப்பாகக் கருதப்படுகிறது.

தமிழ்த்திரையின் இசைஞானி என கொண்டாப்படும் இளையராசா இல்லாமல், தமிழ் மக்கள் ஒரு நாளைக்கூட கடந்து போக முடியாது, என்ற சூழல் தமிழ்த்திரையில் ஏறத்தாழ அரை நூற்றாண்டு காலமாக நிலவி வருகிறது.

இந்நிலையில் சமூகநீதிக் காவலர் அம்பேத்கரையும் ஹிந்துத்துவா ஆதிக்கவாதி மோடியையும், இளையராசா ஒப்பீடு செய்து எழுதியிருந்த முன்னுரை அரசியல் களத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. 

இளையராசா இப்படி கூறலாமா? என ஒரு தரப்பும், இளையராஜா எப்படிக் கூறலாம்? என இளையராஜாவுக்கு எதிராக ஒரு தரப்பும் புறப்பட, தற்போது இளையராசாவின் முன்னுரையைத் தொடர்ந்து எதிர்வினையாளர்களால், பெரும் பெரும் கட்டுரைகள் வடிக்கப்பட்டு வருகின்றன.

இளையராசாவின் இந்த முன்னுரைக்கு அவரது மகன் யுவன் சங்கர் ராசா முடிவுரை ஒன்றை எழுதி இருக்கிறார். இளையராசா எழுதிய கட்டுரை ஆதிக்கவாத சிந்தனையுடன் அமைந்த நிலையில், பெருமைமிகு தமிழன் என்ற தலைப்புடன் யுவன் சங்கர் ராசா புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ஒட்டுமொத்த விவாதத்தையும் தன் பக்கம் திருப்பி உள்ளார்.

யுவன் சங்கர் ராசாவின் தமிழ் பற்று பற்றி கேள்வி கேட்க முடியாத அளவிற்கு ஒரு முன்னோட்டத்தை ஏற்கனவே தயார் செய்து வைத்துள்ளார் அல்லவா? ஏற்கனவே ஹிந்தி தெரியாது போடா என்ற அடைமொழியுடன் யுவன் சங்கர் ராசா அரைக்கை சட்டை அணிந்து புகைப்படம் ஒன்றை வெளியிட, அது இந்திய அளவில் தலைப்பானது நம் நினைவில் இருந்து அகல வாய்ப்பில்லை.

ஹிந்தி தெரியாது போடா என்ற அந்தக் கருத்து கீச்சுவில் உலக அளவில் தலைப்பு ஆனதோடு, ஆங்கிலம் உள்ளிட்ட பிறமொழி ஊடக விவாதங்களிலும் இடம்பெறும் அளவிற்கு முதன்மைத்துவம் பெற்றது. 

மேலும் தமிழ் கிழமைஇதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்த யுவன் சங்கர் ராசா, ஹிந்தி தெரியாது போடா எனக் கூற என்ன காரணம் என கேள்வி எழுப்பப்பட்ட போது, தான் விமானநிலையத்தில் இழிவு செய்யப்பட்டது குறித்து பேசி இருந்தார். விமான நிலையத்தில் விமான நிலைய ஊழியர்கள் ஹிந்தியில் பேசுமாறு வலியுறித்தியதாகவும், அதற்கு ஹிந்தி தெரியாது என அவர் கூறியதற்கு, இந்தியனாக இருந்துகொண்டு ஹிந்தி தெரியாமல் இருந்தால் எப்படி என்று, இந்தியாவை ஹிந்தியின் ஆதிக்க உடைமை ஆக்கிக்கொள்ளும், ஆதிக்கவாத  பதில் கேள்விகளை எதிர் கொண்டதாகவும் யுவன் சங்கர் ராசா தெரிவித்தார்.

எனவே ஏ.ஆர் ரகுமானை போல ஹிந்தி ஆதிக்கத்திற்கு எதிராக ஒரு வலுவான கருத்தை கொண்டிருக்கும் யுவன் சங்கர் ராசா, தற்போது தனது தந்தை ஒன்றிய அரசுக்கு ஆதரவாக ஒரு நிலைப்பாட்டை எடுக்கும் போது, அதற்கு தனது கண்டனத்தை தெரிவிக்கும் வகையிலும் தனது தமிழியல் நிலைபாட்டையும் உறுதி செய்யும் வகையிலும் இந்தப் புகைப்படத்தை பதிவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,223. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.