Show all

சிவாஜி கணேசன் பிறந்தநாள் இன்று! கூகுளும் கிறுக்கலோவியம் வெளியிட்டுக் கொண்டாடுகிறது

தமிழ்க் கலைத்துறையின் நடிப்புச் செம்மல் என்று போற்றிக் கொள்ளப்படும் சிவாஜி கணேசன் அவர்களின் தொன்னூற்று நான்காவது பிறந்த நாள் இன்று. உலகம் முழுவதும் கொண்டாட இருக்கிறது.

15,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ்க் கலைத்துறையின் நடிப்புச் செம்மல் என்று போற்றிக் கொள்ளப்படும் சிவாஜி கணேசன் அவர்களின் தொன்னூற்று நான்காவது பிறந்த நாள் இன்று. 

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 94-வது பிறந்த நாளை உலகம் முழுவதும் கொண்டாட இருக்கிறது. இதனை முன்னிட்டு சென்னை அடையாறில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்குத் தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின் இன்று மரியாதை செலுத்துகிறார். 

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 94-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை அடையாறில் அமைந்துள்ள சிவாஜி கணேசன் மணிமண்டபத்தில் உள்ள அன்னாரின் திருவுருவச் சிலைக்கு வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில், தமிழ்நாடு அரசின் சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்த உள்ளார்கள். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பேரறிமுகங்கள்பலர் பங்கேற்றுச் சிறப்பிக்க உள்ளனர்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பிலே உச்சம் தொட்டு, உலகப் புகழ் பெற்றவராவர். குழந்தைப் பருவம் முதற்கொண்டு நடிப்பதில் பேரார்வம் கொண்டு, பல்வேறு நாடகக் குழுக்களில் பங்கேற்று நடித்து வந்தார். அண்ணாவால் எழுதப்பட்ட, வடஇந்திய மாமன்னன் சிவாஜி குறித்த நாடகத்தில் பேரரசர் சிவாஜியாக நடித்த அவரின் நடிப்புத் திறமையினைக் கண்ட பெரியார் வியந்து பாராட்டியதோடு, விழுப்புரம் சின்னையாப் பிள்ளை கணேசன் என்ற அவரது இயற்பெயரை சிவாஜி கணேசன் என்று பெயர் சூட்டினார். உலகப் புகழ்பெற்ற நடிகர் திலகத்திற்கு இந்த பெயரே இறுதிவரை நிலைத்து நின்றது.

காமராஜர், சிவாஜி கணேசன் நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவர் என்றும், அவரைப் பெற்றதால் இந்த நாடே பெருமை அடைகிறது என்று குறிப்பிட்டார். 

கருணாநிதி, பொங்கு தமிழர் கண்டெடுத்த புதையல், என்று பெருமையோடு குறிப்பிட்டதோடு, அவர் எழுதிய பராசக்தி, மனோகரா உள்ளிட்ட பல படங்களில் நடித்ததன் மூலம் நடிகர் திலகம் திரைவானிலே புதிய உச்சம் தொட்டார். 

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தொடக்கக் காலத்தில் எண்ணற்ற நாடகங்கள், 300க்கும் மேற்பட்ட தமிழ்த் திரைப்படங்கள், 2 ஹிந்தி திரைப்படங்கள், 9 தெலுங்கு திரைப்படங்கள் மற்றும் ஒரு மலையாளத் திரைப்படத்திலும் நடித்து தமிழ்த் திரையுலகில் வரலாறு படைத்தார். 
இவர் நடித்த கப்பலோட்டிய தமிழன், இராஜராஜ சோழன், வீரபாண்டிய கட்டபொம்மன் உள்ளிட்ட பல திரைப்படங்கள் தலைமுறைகள் பல கடந்தும் காண்போரின் மனதில் நின்று நிலைப்பதே சீரிய சான்றாகும். 

நடிகர் திலகத்தின் திறமைக்குச் சான்றாகப் பத்மசிறி விருது, பத்ம பூசன் விருது, செவாலியே விருது மற்றும் இந்தியாவின் உயரிய விருதான தாதா சாகிப் பால்கே விருது உள்ளிட்ட விருதுகளோடு அயல்நாட்டின் உயரிய விருதுகளையும் பெற்ற பெருமைக்குரியவர். 

நடிப்பின் இமயமாகத் திகழ்ந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அருமை பெருமைகளை போற்றுகின்ற வகையில் அவரின் பிறந்த நாளானது அரசு விழாவாக அறிவிக்கப்பட்டுக் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்றும் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் கொண்டாடப்படவிருக்கிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,023.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.