கமல் கொரோனா குறுவித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரின் சிகிச்சை காலக்கட்டத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போவது இவரா? என்று முன்மொழியப்படும் தகவல், வதந்தியும் ஆகிப் போகலாம். ஆனாலும் இரண்டொரு நாளில் விடை தொரிந்துவிடும். 07,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: நடிகர் கமல்காசன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை விக்ரம் படத்தில் கமலுடன் நடித்துக் கொண்டிருக்கும் விஜய் சேதுபதி கமல் கொரோனா சிகிச்சை காலக்கட்டத்தில் தொகுத்து வழங்க வாய்ப்பு இருப்பதாகப் பேசப்பட்டது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடந்த நான்கு பருவங்களைத் தொகுத்து வழங்கிய நடிகர் கமல்காசன்தான் இந்தப் பருவ பிக்பாஸ் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார். அதன்படி கிழமை இறுதி நாட்களில் பிக்பாஸ் இல்லப் போட்டியாளர்களைச் சந்தித்து கிழமை முழுக்க நடந்த நிகழ்வுகளை விவாதித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் கமல்காசன், கடந்த கிழமை பிக்பாஸ் நிகழ்ச்சியை முடித்துவிட்டு அமெரிக்கா சென்றார். அங்கு தனது கதர் துகிலை அறிமுகப்படுத்திய நடிகர் கமல்காசன் அடுத்த ஓரிரு நாட்களிலேயே திரும்பினார். அமெரிக்காவில் இருந்து திரும்பிய கமல்காசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். கமல்காசன் பங்கேற்ற பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த சனிக்கிழமை படம்பிடிக்கப்பட்டது. இந்நிலையில் இருமலால் பாதிக்கப்பட்ட நடிகர் கமல்காசன் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டார். இதில் அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னை இராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் கமல்காசனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு லேசான காய்ச்சலும், மூச்சுப் பாதையில் தொற்றும் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. இதன் காரணமாக அடுத்த இரண்டு கிழமைகளுக்கு நடிகர் கமல்காசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டார் என கூறப்படுகிறது. இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியை வரும் கிழமைகளில் யார் தொகுத்து வழங்குவார் என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கப்போவது யார் என்பது குறித்த தகவல் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. விஜய் சேதுபதியால் நேரம் ஒதுக்க முடியாத நிலை ஏற்பட்டால் நடிகர் சிம்பு பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கலாம் என்றும் பேசப்பட்டது. பிக்பாஸ் நிகழ்ச்சியைக் கமலுக்கு பதில் யார் இந்தக் கிழமை தொகுத்து வழங்கப்போகிறார் என்பது குறித்த அதிகாரப்பாட்டுத் தகவல் ஓரிரு நாட்களில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கெல்லாம் அப்பாற்பட்டு புதிய செய்தியாக வரும் கிழமை மாற்று ஏற்பாடாக சுருதிகாசன் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. காரணம் தெலுங்கில் நாகார்ச்சுனா தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதேபோல இடையில் ஓரிரு கிழமைகள் அவர் படப்பிடிப்புக்காக செல்லவேண்டி இருந்தது. அந்தசமயத்தில் அவருக்கு பதிலாக அவரது மருமகள் சமந்தா அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அதன்பின் மீண்டும் நாகார்ச்சுனா வந்து பொறுப்பேற்று கொண்டார், அதே பாணியை பின்பற்றி இங்கே கமலின் மகளான சுருதிகாசன் இந்த கிழமை பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கான வாய்ப்பு இருப்பதாகவே தெரிகிறது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,076.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



