Show all

கங்கை அமரன் நெகிழ்ச்சிப் பதிவு! ஹிந்தி திரைஇசை ஆதிக்கத்திலிருந்து தமிழ்த் திரைஇசையை மீட்ட வரலாற்றுப் பெருமகனோடு சந்திப்பு

தமிழ்த் தெருவெங்கும் ஹிந்தித் திரைஇசைப் பாடல்கள் ஒலித்துக் கொண்டிருந்த காலத்தில், அன்னக்கிளி உன்னைத் தேடுதே என்று பாடி தமிழ்த்திரை இசையை மீட்டெடுத்த வரலாற்று பெருமகன் இளையராசாவின் சந்திப்பு குறித்து கங்கை அமரன் நெகிழ்ச்சிப் பதிவு.

05,மாசி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ்த் திரையுலகத்தில் அண்ணன், தம்பி கூட்டணியில் பல வெற்றிப் பாடல்களைக் கொடுத்த கூட்டணி- தமிழ்த் தெருவெங்கும் ஹிந்தித் திரைஇசைப் பாடல்கள் ஒலித்துக் கொண்டிருந்த காலத்தில், அன்னக்கிளி உன்னைத் தேடுதே என்று பாடி தமிழ்த்திரை இசையை மீட்டெடுத்த வரலாற்று பெருமகன் இளையராசா - கங்கை அமரன் கூட்டணி. 

அண்ணன் இசையில் தம்பி எழுதிய பல பாடல்கள் வெற்றிப் பாடல்கள். தம்பி இயக்கிய 'கரகாட்டக்காரன்' படத்தின் பாடல்கள், படத்தின் வெற்றி தமிழ்த் திரையுலக சாதனை மறக்க முடியாத ஒன்று.

அண்ணன், தம்பி இருவருக்குள்ளும் ஏதோ சிக்கல், அதனால் பிரிந்துவிட்டார்கள் என்ற செய்தி கடந்த சில ஆண்டுகளாக இருந்து வந்தபோதும், இருவருமே அதைப் பற்றிப் பேசியதில்லை.

கங்கை அமரன் மகன் வெங்கட்பிரபு இயக்கும் படங்களில் இளையராஜாவின் மகன் யுவன்சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இருவரது தம்;மக்களுக்குள்ளும் எந்த மோதலும் இல்லாமல் பாசம் அதிகமாகவே இருக்கிறது.

இந்நிலையில் நேற்று கங்கை அமரன் அவரது சமூகவலைதளத்தில் 'இன்று நடந்த சந்திப்பு. இறை அருளுக்கு நன்றி. உறவுகள் தொடர்கதை!' என்று இளையராசாவுடனான சந்திப்பு குறித்து பதிவிட்டு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் இளையராசா, வெங்கட் பிரபு, பிரேம்ஜி, யுவன் ஆகியோரையும் இணைத்துக் கொண்டுள்ளார்.

இருவரது சந்திப்பும் அவர்களது கொண்டாடிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்ணன், தம்பி இருவரும் மீண்டும் இணைந்து வெற்றிப் பாடல்களைத் தர வேண்டும் என்று பலரும் கருத்து பதிவிட்டுள்ளனர்.

ஒரு கொண்டாடி தனது கருத்துரையில், இரஜினிகாந்த் நடிக்க, இளையராசா இசையில், கங்கை அமரன் எழுதிய- ஆணென்ன பெண் என்ன பாடலில் உள்ள 'சொந்தம் பந்தம் சேர்ந்திருந்தா சொத்து சுகம் தேவையில்லே, பந்தம் விட்டுப் போச்சுதுன்னா வாழ்வதிலே லாபம் இல்லே, எண்ணம் மட்டும் சேர்ந்திருந்தா இன்றும் என்றும் சோகம் இல்லே' என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,162.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.