ஆன்டி இண்டியன்; திரைப்படம் தமிழ்நாடு, கர்நாடக, அமெரிக்கா திரையரங்குகளில் இன்று வெளியாகி உள்ளது. சிங்கபூரில் தடைசெய்யப்பட்டுள்ளது. 23,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: தணிக்கை குழு தடையை எதிர்த்து சட்டப் போராட்டத்தால் வென்ற ஆன்டி இண்டியன்; திரைப்படம் திரையரங்குகளில் இன்று வெளியாகி உள்ளது. இந்தப் படம் தடை செய்யப்படுவதாக அறிவித்து இருந்த நிலையில், தயாரிப்பாளர் ஆதம் பாவா மற்றும் இயக்குநர் ப்ளூ சட்டை மாறன் சட்டப்பாடாக முன்னெடுத்த போராட்டம் வெற்றி பெற்ற நிலையில், இன்று திரையரங்குகளில் ஆன்டி இண்டியன் திரைப்படம் வெளியாகி உள்ளது. ஆன்டி இண்டியன் திரைப்படத்தை குறைந்த பட்சம் 150 முதல் அதிகபட்சமாக 175 திரையரங்குகளில் வெளியிடவே படக்குழுவினர் திட்டமிட்டு இருந்ததாகவும் ஆனால், படத்திற்கு கிடைத்த நல்ல வரவேற்பு காரணமாக தமிழ்நாட்டில் 228 திரையரங்குகள் இந்தப் படத்தை வாங்கி வெளியீடு செய்ய முடிவு செய்துள்ளதாகவும் கர்நாடகாவில் 20 திரையரங்குகளில் படம் வெளியாகி உள்ளதாகவும் ப்ளூ சட்டை மாறன் அறிவித்துள்ளார். ப்ளூ சட்டை மாறனின் ஆன்டி இண்டியன் திரைப்படத்தைப் பார்த்த தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநர்களான பாரதிராஜா, சீமான், பாக்கியராஜ், சேரன் மற்றும் சுப்பிரமணியம் சிவா உள்ளிட்ட பல இயக்குநர்கள் படம் நல்லா இருக்கு என பாராட்டி உள்ளனர். அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளிலும் படத்தை வெளியீடு செய்ய ஆன்டி இண்டியன் படக்குழு முயற்சி செய்தது. அமெரிக்காவில் படம் வெளியீடு செய்யப்பட்டுள்ள நிலையில், சிங்கப்பூரில் படம் வெளியீடு ஆகவில்லை. ஆன்டி இண்டியன் படத்தை சிங்கப்பூரில் தடை செய்துள்ளனர். ஆன்டி இண்டியன் திரைப்படத்தில் சாதி மற்றும் மதத்தை வைத்து நடத்தும் அரசியலை பகிரங்கமாக எடுத்து கூறியுள்ளதால் தான் நம்நாட்டின் தணிக்கை குழு அந்தப் படத்தை முதலில் தடை செய்தது. இந்நிலையில், மதம் சார்ந்த சர்ச்சைக்குரிய காட்சி இருப்பதால் சிங்கப்பூரில் படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் அந்தப் படத்தை அங்கே வெளியீடு செய்ய அனுமதிக்கவில்லை. ஆன்டி இண்டியன் படக்குழு அங்கேயும் மறு தணிக்கைக்காக மேல் முறையீடு செய்துள்ளனர். நாளை அல்லது நாளை மறுநாள் சிங்கப்பூரிலும் படம் வெளியாகும் என ப்ளூ சட்டை மாறன் தனது கீச்சுப்பக்கத்தில் உறுதி அளித்துள்ளார்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,093.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



