Show all

பிறப்பொழுக்கம் என்றால் என்ன?

பிறப்பொழுக்கம் என்றால் என்ன? என்று வேறு ஒரு களத்தில் கேட்கப்பட்டிருந்த வினாவிற்கு விடையளிக்க உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை. பிறப்பொழுக்கம் என்கிற சொல்லை சிறப்பாகக்  கொண்டிருக்கிற ஒரு திருக்குறளை எடுத்து, அந்தக் குறள் தெரிவிக்கும் பொருள் அடிப்படையில் இந்த வினாவிற்கு விடை உருவாக்கப்பட்டுள்ளது. 

20,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5125. 

மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும். 
இந்தத் திருக்குறள்தான் பிறப்பொழுக்கம் என்கிற தலைப்பை முன்னெடுக்கிறது. 

குறளின் முதலாவது அமைந்த மறப்பினும் என்கிற சொல்லுக்கு உரிய பொருளை அடுத்து அமைகிற ஓத்துக் கொளலாகும் என்கிற சொல்தான் தெளிவாக உணர்த்த முடியும். 

கைதவறி நீங்கள் கீழே போட்டதால், உதிரியாகிப் போன, நீங்கள் விரும்பியிருக்கும் ஒரு கருவி தன் முழுமை ஒழுங்கை இழந்து விடுகிறது. ஆனால் அந்தக் கருவி இல்லாமல் போய்விடவில்லை என்பதைத் தெரிவிக்கின்றன ஓத்துக் கொளலாகும் என்கிற இரண்டு சீர்கள்.

அந்த உதிரி பாகங்களை முழுமையான கருவியாக மாற்ற (அதாவது ஒழுங்கு படுத்த) ஓத்துப் பெறமுடியும் என்கின்றன இந்தக் குறளின் முதல் மூன்று சீர்கள். ஓத்து என்பதற்கு முன்பு பொருந்தியிருந்த இடத்தில் பொருத்துதல் என்பது பொருள் ஆகும்.

மறப்பினும் ஓத்துக் கொளலாகும் என்பதில் ஒரு கருவி சீர்குலைந்திருந்தாலும் பொருந்தியிருந்த இடத்தைக் கண்டுபிடித்து பொருத்திக் கொள்ளத்தக்கது என்பது செய்தியாகும்.

அடுத்து வருகிற பார்ப்பான் என்பதற்கு- குமுகாய ஒழுக்கத்தைக் கொண்டாட மறுக்கிற ஒருவனை அல்லது குமுகாய ஒழுங்கிற்கு மாறுபட்ட ஒரு கூட்டத்தை பார்த்து இதுவும் நன்றாகத்தானே இருக்கிறது என்று மலைக்கிறவன் என்று பொருள்.

அவனுக்குச் சொல்லப்படுவதே பிறப்பொழுக்கம் குன்றக் (மீட்கவியலா வகைக்கு) கெடும் என்று கடைசி மூன்று சீர்கள் தெரிவிக்கிற செய்தியாகும்.

கருவி உதிரியானால் (ஒழுக்கம் இழத்தல்) ஒழுங்கு படுத்த வகை இருக்கிறது. ஆனால்வாழ்க்கை, உலகத்தோடு ஒட்ட ஒழுகாமல் உதிரியானால், மலையாக இருந்தது குன்றானது போல அடிப்படை காணமல் போய்விடும் மலையை மீட்க முடியாது என்று தெரிவிக்கிறார் திருவள்ளுவர்.

இந்த இடத்தில், அயல்களை மலைத்து குன்றாகக் குறுகிப்போன, நடப்பு நிலையில் இருக்கிற தமிழனைப் பார்ப்பனாக பொருத்திக் கொண்டு விடை தேடலாம். 

தமிழன் மலைத்த முதல்அயல் பிராம்மணியம். அப்புறம் அராபியம், ஐரோப்பியம், மார்க்சியம், இவைகளின் பல்வேறு சார்புக் கட்டமைப்புகள் எனத் தொடர்கிறது.

பிறப்பொழுக்கம் குன்றியிருந்தால் ஒருபோதும் அடிப்படையோடு பொருத்திக் கொள்ள முடியாது என்று தெளிவாகத் தெரிவிக்கிறார் திருவள்ளுவர் இந்தக் குறளில் பிறப்பொழுக்கம் குன்றக் கெடும் என்று.

தமிழ் என்பது வெறுமனே மொழி அன்று.
தமிழ் என்பது ஐம்பரிமாணங்களின் திரம் ஆகும். திரம் என்றால் குவிக்கப்பட்ட ஆற்றல்.
நிலம், நீர், தீ, காற்று, விசும்பை ஐந்திர அற்றல்கள் என்று நிறுவியுள்ளனர் தமிழ்முன்னோர்.

தமிழின் ஐம்பரிமாணங்களில் சார்பு நிலைப் பரிமாணங்கள் 
1. தமிழ்மொழி
2. தமிழ்இனம்
3. தமிழ்மண்

இவற்றுள் தமிழ்இனம் குறித்து பேசிக் கொண்டிருக்கிறார் சீமான். திராவிடம் என்கிற பிராம்மணிய ஐரோப்பிய கலவையின் சார்பு அமைப்புக்கு எதிராக, நாம் தமிழர் கட்சி சீமான் தமிழ்நாட்டை தமிழன்தான் ஆள வேண்டும் என்று பேசுகிறார். அந்த வகையாகவே யார் தமிழன்? என்கிற வினா தமிழ்நாட்டில் பேரளவாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 

ஆனால், ஒன்றிய பிராம்மணியப் பேரதிகாரத்தின் கீழ் அமைந்த தமிழ்நாடு ஆளுவதற்கு ஆனது அல்ல. வெறுமனே மேலாண்மைக்கானது மட்டுமே என்கிற தரவு அவருடைய செய்திக்கு முழுமை இல்லை என்று தெரிவிக்கிறது.

இவற்றுள் தமிழ் குறித்து தனித்தமிழ் இயக்கம் நீண்ட காலமாகப் பேசிவருகிறது. ஆனாலும் மேலாண்மைக்கான தமிழ்நாட்டில் தமிழ்வழிக்கல்விக்கு உறுதியான அமைப்பு எதுவும் இன்றுவரை இல்லை. 

தமிழ்மண் குறித்து பாவலரேறு பெருஞ்சித்திரனார் பேரளவாகப் பேசியிருந்தார். தமிழ்மண்ணை உலகஅளவில் நிறுவிட பேரளவாகக் களமாடினார் ஈழமண்ணில் பிரபாகரன். ஆனால் தமிழ்மொழி, தமிழ்இனம், தமிழ்மண் மூன்றிலும் நமக்கான அதிகாரம் இன்று வரை இல்லை.

தமிழின் ஐம்பரிமாணங்களில் அடிப்படை பரிமாணங்கள் 
1. தமிழியல் 
2. தமிழ்வரலாறு
இந்தத் தமிழியல்தான் தமிழனின் பிறப்பொழுக்கம்.

உலகில் காணப்படுகிற அத்தனைக் கோட்பாடுகளுக்கும் அடிப்படை 
1. வகைபாடு
2. பாகுபாடு
3. முரண்பாடு 
என்பனவே.

தமிழின் அடிப்படை பரிமாணங்களில் ஒன்றான 'தமிழியல்' உடன்மனிதரிடையே ஒப்புரவு பேணும், 'வகைபாட்டுக் கோட்பாடு' என்று தமிழ்முன்னோர் தெளிவாக நிறுவியுள்ளனர். 

உலக மதங்கள், கார்ப்பரேட்டுகள், முதலாளித்துவங்களின்  'பாகுபாட்டுக் கோட்பாடு' என்கிற ஏற்றதாழ்வுக் கோட்பாடு ஆகும்.

மதங்களுக்கெதிரான நாத்திக மதங்கள், பாகுபாட்டு அரசியலுக்கு எதிரான மார்க்சியம் ஆகியன 'முரண்பாட்டுக் கோட்பாடு' ஆகும்.

தமிழ்முன்னோர் தெளிவாக நிறுவிய- தமிழின் அடிப்படை பரிமாணங்களில் ஒன்றான 'தமிழியல்' உடன்மனிதரிடையே ஒப்புரவு பேணும், 'வகைபாட்டுக் கோட்பாடு' என்று இயங்குகிற தமிழனே பிறப்பொழுக்கம் கொண்டவன்.

மிகப்பெரும்பாலான தமிழர்கள், அரசியல்வாதிகள், தமிழ்ஆர்வலர்கள், தமிழ் அறிஞர்கள் தான்தமிழியலில் இயங்குதவாக அறிவிக்க முடியாது.

மிகப்பெரும்பாலான தமிழர்கள் பொருளாதார ஏற்றதாழ்வு கொண்டாடவே ஆங்கிலவழிக் கல்வியை நாடுகின்றனர். மிகப்பெரும்பாலான தமிழர்கள் சாதிய ஏற்றதாழ்வு அயலில் ஒழுகியே வருகின்றனர். 

அரசியல்வாதிகள், தமிழ்ஆர்வலர்கள், தமிழ் அறிஞர்களின் நிலையும் இதுவே. 

எல்லோரும் பார்ப்பனியம், அராபியம், ஐரோப்பியம், மார்க்சியம் உள்ளிட்ட அயல் சார்பினராகவே இயங்கி வருகிறோம். நாம் நம்முடைய பிறப்பொழுக்கமான தமிழியலை மீட்காமல் தமிழ்என்கிற ஐம்பரிமாண ஒழுங்கை ஒரு போதும் கட்டமைக்க முடியாது என்கிற கருத்தை இந்தக் திருக்குறள் நமக்கு தெளிவாக்குகிறது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,696.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.