Show all

ஒளவைபெருமாட்டியின் பதின்மூன்று கட்டளைகள்! திருக்குறளின் ஒற்றைச் சொல்லின் விளக்கமாக

திருவள்ளுவர் தன் ஒன்னே முக்கால் அடி திருக்குறளில் திண்ணியராதல் என்று தெரிவிக்கிற ஒன்றைச் சொல்லுக்கு, ஒளவைப் பெருமாட்டி தனது பனிரெண்டு உயிரெழுத்துத்துத் தொடர்களிலும் ஒரு ஆய்த எழுத்துத் தொடரிலும், திண்ணியராதலுக்கு நமக்கான பதின்மூன்று கட்டளைகளைத் தருகிறார்.

15,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5124: திருவள்ளுவப் பெருந்தகை, நமக்கான தலைஎழுத்தை நாம்தாம் எழுதிக்கொள்கின்றோம் என்பதாக,
எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் 
திண்ணிய ராகப் பெறின்
என்ற குறளில், தெரிவிக்கிறார்.

வெற்றிகளோ, தோல்விகளோ, இதுவரை உங்களுக்கு எது கிடைத்திருந்தாலும், அது நீங்கள் கேட்டது மட்டுமே. நம்முடைய தலைஎழுத்தை வெற்றிக்கோ தோல்விக்கோ அமைத்துக்கொள்வது நாம்தாம் என்று தெரிவிக்கிறார்.

அதில் நம்மின் வெற்றிக்கானவைகளை (விசும்பில்) கேட்டுப்பெற, நம்மின் எண்ணத்தைச் செழுமைப் படுத்திக் கொள்ள வேண்டும் என்பதாக திண்ணியராகுக என்கிறார்.

திருவள்ளுவர் தெரிவிக்கிற அந்த திண்ணியராதலுக்கான நடைமுறை என்ன என்பதை ஒளவைப் பெருமாட்டி தனது பனிரெண்டு உயிரெழுத்துத்துத் தொடர்களிலும் ஒரு ஆய்த எழுத்துத் தொடரிலும் அமைத்து, திண்ணியராதலுக்கு நமக்கான பதின்மூன்று கட்டளைகளைத் தருகிறார்.

1. அறம் செய விரும்பு 
உங்கள் தலை எழுத்தை நீங்களே எழுதிக் கொள்கின்றீர் என்பதே தமிழ்முன்னோரின் தெளிந்த முடிவு. அதனால் உங்களுக்கான அறத்தை நீங்களே செய்ய விரும்புங்கள். 

2. ஆறுவது சினம்
உங்களுக்கு யாரோ, எதுவோ கெடுதி செய்வதாக நீங்கள் உணர்ந்தால், அவர் மீது கடும் சினம் எழும். அவரை ஏதாவது செய்துவிட வேண்டும் என்று மனதில் சிந்தனை எழும். ஆனால் நீங்கள் அந்த தற்பரை நேரத்தில் அவரை எதுவும் செய்யாமல் விட்டு சில மணித்துiளிகளையே சில நாட்களையோ கடத்திவிட்டால் உங்கள் சினம் காணமல் போயிருக்கும் என்பது நடைமுறை உண்மையல்லவா என்று கேட்கிறார் இந்தக் கட்டளையில் ஒளவை.
நீங்கள் ஏதாவதொரு வகையில் அவருக்கு ஒப்புக் கொடுத்திராமல் அவர் உங்களுக்கு தீங்கு இழைத்திருக்க முடியாது என்பதே உண்மை. அனாலும், அவர் மீது நீங்கள் எதாவது தாக்குதல் முன்னெடுத்தால்- எதை எதிர்க்கிறோமோ அதுவே நமது அடிப்படை என்கிற நிலையில்- அவரே உங்கள் வாழ்க்கையின் அடிப்படையாகி, அவரை உங்கள் வாழ்க்கையைத் தீர்மானிப்பவராக அமைத்துக்கொள்ளும் வகைக்கு நீங்கள் அறம் செய்ததாகிவிடும்.
இயல்பாக ஆறிப்போகும், நீங்கள் ஆறப்போடாமல் முன்னெடுக்கும் சினம், உங்கள் அடிப்டையை மாற்றி அலைகழிக்கும் என்கிறார் ஒளவை பெருமகள்.

3. இயல்வது கரவேல்
உங்களால் முடியும் என்கிற உங்கள் திறமைகளை மறைக்காதீர்கள் மறக்காதீர்கள். முடிந்ததை மறைக்கக் கூடாது என்பதையே இயல்வது கரவேல் என்கிறார் ஒளவை பெருமகள்.

4. ஈவது விலக்கேல்
எக்காரணம் பற்றியும் கொடுப்பதை விலக்கவேண்டாம். நீங்கள் ஒருவருக்கு உதவும் போது, அதில் உள்ள ஈவது என்கிற தலைப்பு உங்களின் ஈதல் ஒன்றுக்குப் பத்தாக படர்க்கையில் கிடைக்கச் செய்யும்.

5. உடையது விளம்பேல்
உங்களுக்குள்ள வலிமைச் சிறப்புகளைப் பலரும் அறியும்படி பெருமையாகப் பேசாதே. உங்களுக்குள்ள மெல்லியல்பாடு எதையும் பலரும் அறியும்படி சொல்லாதே. அதனால் உங்களுக்கும் கடவுளுக்கும் (விசும்பு) இடையிலான கமுக்கம் உடைக்கப்பட்டு உங்கள் வெற்றி தாமதப்படும்.

6. ஊக்கமது கைவிடேல்
நீங்கள் செய்த அறத்தின் விளைவுக்கான காலத்தை ஒருபோதும் தீர்மானிக்க முடியாது. காலம் கருதியிருந்து, பயன் தள்ளிப்போகும் நிலையில், ஊக்கத்தைக் கைவிட வேண்டாம்.

7. எண் எழுத்து இகழேல்
நீங்கள் உங்களுக்காக செய்யும் அறத்திற்கு (விதி) எண்ணமும் எழுத்தும் ஆன தமிழே (மொழி) அடிப்படையாகும். அயல்களை மலைத்து உன்மொழியை ஒருபோதும் இகழவேண்டாம். மொழிப்பற்றை ஒருபோதும் விடாதே.

8. ஏற்பது இகழ்ச்சி
உனக்கான உணவு, உனக்கான மொழி, உனக்கான பண்பாடு எதையும் பிச்சையாக ஏற்பது உனக்கான இழிவு ஆகும்.

9. ஐயம் இட்டு உண்
இந்தப் (நமது விளைவிப்பு) பொருளை ஏன் உண்ணவேண்டும்? இந்தப் பொருளின் பின்னால் இருக்கிற ஆதாயம் என்ன? அந்தப் (அயல் விளைவிப்பு) பொருளை ஏன் உண்ணக்கூடாது? அதில் இருக்கிற உண்ணவைப்பு அரசியல் என்ன? என்றெல்லாம் ஐயத்தை முன்னிறுத்தி தெளிவு பெற்று உண்பது உடல் நலத்திற்கானதும், இன நலத்திற்கானதும் ஆகும். 

10. ஒப்புரவு ஒழுகு
யாரும் பெரியவராகவே உருவாவதில்லை. யாரும் சிறியவராகவே இருந்து விடுவதும் இல்லை. சிறியதிலிருந்து பெரிது என்கிற வளர்ச்சி அனைவருக்கும் இயல்பானது என்று உணர்வதே தமிழ்நெறி தெரிவிக்கும் ஒப்புரவு ஆகும். பெரியோரை வியத்தலும் இலமே சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே என்று கணியன் பூங்குன்றனாரின் புறநானூற்று பாடலில் இந்தச் செய்தி எடுத்தாளப்பட்டிருக்கும். அதில் விட்டுக் கொடுத்தல் இல்லாமல் ஒழுக வேண்டும்.

11. ஓதுவது ஒழியேல்
அறம் செய்வதில் தொடங்கி ஒப்புரவு ஒழுகுதல் வரையிலும், அடுத்து பார்க்க இருக்கிற இரண்டு கட்டளைகளின் அடிப்படையில் நமது தேவைகள் எதுவாக இருந்தாலும் கடவுளிடம் நேரடியாக கேட்பதே ஓதுவது ஆகும். அதைக் கட்டாயம் அன்றாடம் முனைந்திட வேண்டும்

12. ஒளவியம் பேசேல்
ஒருவரிடமும் பொறாமை கொண்டு விடாதே. உங்கள் பொறாமையை அவர்கள் புறக்கணிக்கும் போது, சிறப்பாகச் சொன்னால் பொறுத்தருளும் போது உங்கள் பொறாமை உங்களை நோக்கித் திரும்பிவிடும்.

13. அஃகஞ் சுருக்கேல்
உயிர் எழுத்துக்களில் சொல்லபபட்ட இந்த பனிரெண்டு கட்டளைகளும் அறிவு அல்லது அறம் அல்லது உயிர் சார்ந்தது. உயிர்வாழ கட்டாயம் மெய்யும் தேவை. உங்கள் உடம்பை காக்க உரிய நேரத்தில் கட்டாயம் உணவு உண்ண வேண்டும். எக்காரணம் பற்றியும் வயிற்றை காயப்போடாதே.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,478.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.