Show all

கலி! தமிழ்ச் சொற்கள் வரிசையில்

29,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கலி என்பது அழகிய தமிழ்ச் சொல். கலி என்பதற்கு மகிழ்ச்சி என்று பொருள். கலி என்ற சொல் தமிழில் ஐயாயிரத்திற்கு மேலான ஆண்டுகளாகப் புழக்கத்தில் உள்ளது. பத்துப்பாட்டு எட்டுத் தொகை என்கிற, தமிழர்தம் பதினென் மேல்கணக்கு நூல்களில் எட்டுத்தொகை நூல்களில் ஒன்று கலித்தொகை. எட்டுத்தொகை நூல்களுக்;கான நினைவுச் செய்யுளில்- 
நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறம் என்று
இத்திறத்த எட்டுத் தொகை என்பதில்-
‘கலித்தொகை’ கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு என்று புகழப்பட்டிருப்பதில் கலி என்கிற சொல்லின் பழமை சொல்லாமலே விளங்கும். 
கலித்தொகை நூலில் குறிஞ்சிக் கலி, முல்லைக் கலி, மருதக் கலி, நெய்தல் கலி, பாலைக் கலி என ஐந்து தொகுதி பாடல்களும் கலி கலி என்று கொண்டாடப் படுகின்றன. 
கலித்தொகை ஒற்றைப் புலவரால் பாடபெற்று, கலி என்ற சொல் ஒரு புலவர் முன்னெடுத்த சொல் என்றும் சொல்லி விட முடியாது. 
கலித்தொகை நூலில் உள்ள
பாலைத்திணைப் பாடல்களைப் பாடியவர் (பாலை பாடிய) பெருங்கடுங்கோ
குறிஞ்சித்திணைப் பாடல்களைப் பாடியவர் கபிலர்
மருதத்திணைப் பாடல்களைப் பாடியவர் மருதன் இளநாகன்
முல்லைத்திணைப் பாடல்களைப் பாடியவர் சோழன் நல்லுருத்திரன்
நெய்தல் திணைப் பாடல்களைப் பாடியவர் நல்லந்துவனார் என்ற புலவரும் கலி என்ற சொல் குறித்து அறிந்துள்ளனர் என்பது புலனாகும். 
மேலும் தொல்காப்பியத்திலும் பா வகைகள் விளக்கப் படுகையில் கலிப்பாவை அவரும் கையாளுகிற நிலையில்; கலி என்ற சொல் தொல்காப்பியரும் கையாண்ட சொல் என்பது விளங்கும். 
ஆனால் கலியுகம் என்ற தலைப்பில் வருகிற கலி என்கிற சொல் மட்டும்- ‘கலியுகத்திற்கு’ ஆரியர்கள் கதை சொல்லி வைத்துவிட்டுச் சென்றதால், கலியை, கலியுகத்தை ஆரியர்கள் சொல்லாக தூக்கி வீசி விட்டனர் நம்முடைய பிற்காலத் தமிழ் அறிஞர்கள். அதுமட்டுமல்ல சாதகம், சோதிடத்தை தூக்கி வீசுகிறோம் என்ற பெயரில் தமிழர் வானியலையே தூக்கி வீசி விட்டனர். 
பாரசீகத்திலிருந்து இந்தியாவிற்கு வந்த, ஆரியர்களின் வேதகாலம் என்பது இந்தியாவில், ஆரியர்களின் மிகப் பழைய நூல்களான வேதங்கள் இயற்றப்பட்டு நடைமுறையில் இருந்த காலத்தை குறிக்கிறது. இது கி.மு இரண்டாம் ஆயிரவாண்டையும், முதலாம் ஆயிரவாண்டையும் சேர்ந்தது என அறிஞர்கள் கூறுகின்றனர். கிமு 1500 ஆம் ஆண்டளவில் தொடங்கி கி.மு. 500ஆம் ஆண்டு வரை நீடித்தது.
 
கலியுக ஆண்டுக் கணிப்பானது இன்றிலிருந்து 5121 ஆண்டுகளுக்கு முந்தையது. அந்தக் காலக்கட்டத்தில் ஆரியர்களுக்கு சமஸ்கிருத மொழியே கிடையாது. அந்தக் காலக்கட்டத்தில் அவர்கள் பாரசீகத்தில்  இருந்திருப்பர். பாரசீகத்தில் இருந்த காலத்திலேயே ஆரியர் கலியுக ஆண்டுக்கணிப்பை மேற்கொண்டிருந்தால் பாரசீகருக்கும் அது புழக்கத்தில் இருக்க வேண்டும். ஆனால் ஒரு வேடிக்கை என்னவென்றால் தமிழ்சோதிடர்களைத் தவிர வேறு யாரும் கலியுக ஆண்டுக்கணக்கை முன்னெடுப்பதில்லை. 

கண்ணன் இறந்தநாளில் கலியுகம் துவங்கியதாக ஸ்ரீமத் மகாபாகவதம் முதல் கந்தம்: அத்தியாயம் - 15, சுலோகம் - 36 கூறுகிறது. கலியுகம் கி.மு. 2449 ஆம் ஆண்டில் தொடங்குகிறது என்று வராகமிஹிரர் என்பவர் தெரிவித்ததாக ஒரு செய்தி இருக்கிறது. ஆனால் கி.பி. 476இல் பிறந்த ஆரியப்பட்டர் என்கிற ஆரியர் கொண்டாடும் வானியலார் கி.மு. 3102 பிப்ரவரி 18 ஆம் நாள் வெள்ளிக்கிழமை கலியுகம் தோன்றியதாக தெரிவித்ததாக, கலிஆண்டுக் கணக்கு தமிழர்களுடையது என்று சொல்லும் போது அதை மறுக்க பயன்படுத்துகிறார்கள் இன்றைய ஆரியர்கள்.  

ஆனால் சமஸ்கிருத மொழியை பேசுகிற ஆரியர்கள் யாரும் இல்லாதது போல, இந்த ஆரியப்பட்டர் சொல்லுகிற கணிப்பை எடுத்துக் கொள்கிற ஆரியர் யாரும் இருந்திருக்கவில்லை. 

சாலிவாகன ஆண்டு அல்லது சக ஆண்டு என்பது சாலிவாகன ஆண்டுக் கணிப்பு முறையின் கீழ் குறிக்கப்படும் ஆண்டைக் குறிக்கும். ஹிந்து நாட்காட்டி, இந்தியத் தேசிய நாட்காட்டி, கம்போடிய பௌத்த நாட்காட்டி என்பன இம் முறையையே கைக்கொள்ளுகின்றன. கௌதமிபுத்திர சதகர்ணி என்றும் அழைக்கப்படுகின்ற சாலிவாகனன் என்னும் சாதவாகன மன்னனே அவன் உஜ்ஜயினியின் விக்கிரமாதித்தனுக்கு எதிராகப் பெற்ற வெற்றியைக் கொண்டாடுவதற்காக கிபி 78 ஆம் ஆண்டில் இம் முறையைத் தொடக்கி வைத்ததாகச் சொல்லப்படுகின்றது.

இம்முறை ஜாவாவின் அரசவையில், பழைய ஜாவானியக் காலம் தொட்டு 1633 ஆம் ஆண்டுவரை புழக்கத்தில் இருந்தது. பின்னர் ஜாவானிய இசுலாமியக் கலப்பு முறையான அன்னோ ஜவானிக்கோ என்னும் முறையின் அறிமுகத்துடன் இது வழக்கொழிந்தது. பண்டைய வடஇந்தியக் கல்வெட்டுக்களில் குறிக்கப்பட்ட ஆண்டு முறைகளில் இதுவும் ஒன்றாகும்

ஆக கலியுகம் குறித்த கதை ஆரியர்களுக்கு சொந்தமானதுதான் ஆனால் கலியுக ஆண்டு கணக்கை ஆரியர்கள் கொண்டிருக்கவில்லை; கொண்டாடுவதும் இல்லை.

ஆக கலி என்கிற சொல் தமிழ்ச் சொல். கலியுக ஆண்டுக் கணக்கு தமிழர்களுடையது மட்டுமே. தமிழில் யுகம் என்பது கணினி யுகம், நெகிழி யுகம் என்பது போலக் கையாளப்படும். அதற்கு அந்த யுகத்திற்கு கால எல்லை கிடையாது. கலியுகம் என்கிற மகிழ்ச்சி யுகம் 5121 ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்களால் தொடங்கப்பட்டிருக்கிறது. அது தமிழர் தொடர் ஆண்டுக்கணக்கிற்கு பெயராக இருக்கும். 

ஆரியர்கள் பொங்கல் விழாவிற்கும் கதை சொல்லி இருக்கிறார்கள் என்பதை ஒருபோதும் மறந்து விடக் கூடாது. நாம் இன்னும் ஒரு ஐம்பது ஆண்டுகள் பொங்கலைக் கொண்டாடாமல் விட்டோமானால் பொங்கல் தமிழர் விழா அன்று; அது ஆரியர் விழாவே என்று நிறுவப்படுவதற்கு வாய்பாக பொங்கல் விழாவிற்கும் கதைகட்டி வைத்திருக்கின்றார்கள் ஆரியர்கள். சல்லிக்கட்டை கூட நாம் ஜல்லிக்கட்டு என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். அதையும் நாம் முன்னெடுக்காமல் நிறுத்தி விட்டோமானால் ஆரியர்கள் முன்னெடுத்த விளையாட்டு என்று நிறுவி விடுவார்கள். அதற்கான செய்தி வேதத்திலேயே இருக்கிறது என்று புளுகுவார்கள். ஏன் திருவள்ளுவரை ஹிந்துவாக்கும் முயற்சி முன்னெடுக்கப்பட்டு விட்டதுதானே? தமிழர்கள் கவனமாக இருக்க வேண்டும். எந்த ஒன்றையும் நம்முடையது இல்லை என்று தூக்கி ஏறிய முற்படும் போது ஆயிரம் முறை யோசிக்க வேண்டும்.

கரிகால சோழன் கரையெடுத்த காலத்தை உணர்த்தும் ஒரு பழைய வெண்பா: 
தொக்க கலியில் மூவாயிரத்துத் தொண்ணூற்றில் 
மிக்ககரி காலவேந் தனுந்தான் - பக்கம் 
அலைக்கும் புகழ்ப்பொன்னி யாறுகரை கண்டான் 
மலைக்கும் புயத்தானும் வந்து 
என கலியாண்டு 3090ல் கரிகால்சோழன் கரையெடுத்ததாகக் குறிப்பிடுகிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,396.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.