Show all

பலநூறு தமிழ்ச்சொற்களின் வரையறைகள் வரிசையில், இயல்!

நிறைய தமிழ்ச் சொற்களை, அதன் பொருள் பொதிந்த வரையறைகளை, பார்ப்பனியம், ஐரோப்பியம், மார்க்சியம், வெவ்வேறு மதங்கள் என்று பல்வேறு அயல்சார்புகளில் மலைப்புகளில், தொலைத்து விட்டு, நாம் நீர்த்துப் போன வடிவங்களாக அச்சொற்களைக் கையாண்டு வருகிறோம். ஒவ்வொரு சொல்லாக வரையறை மீட்பதற்கானது இந்தக் கட்டுரை

22,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5123: நிறைய தமிழ்ச் சொற்களை, அதன் பொருள் பொதிந்த வரையறைகளை, பார்ப்பனியம், ஐரோப்பியம், மார்க்சியம், வெவ்வேறு மதங்கள் என்று பல்வேறு அயல்சார்புகளில் மலைப்புகளில், தொலைத்து விட்டு, நாம் நீர்த்துப் போன வடிவங்களாக அச்சொற்களைக் கையாண்டு வருகிறோம்.

அவ்வகையாக நாம் தொலைத்துள்ள பல நூறு சொற்களின் பொருள் பொதிந்த வரையறைகளை தெரிவிக்க 'பல நூறு தமிழ்ச் சொற்களின் வரையறைகள் வரிசையில்' என்கிற தலைப்பில், தொடர்ந்து கட்டுரைகள் படைக்கவிருக்கிறேன். இயல் என்ற சொல்லின் வரையறையை இந்தக் கட்டுரையில் முன்னெடுத்துள்ளேன். 

இயல்: தமிழில் 'இயல்' என்று வழங்கப்படுகிற சொல் சயின்ஸ் என்கிற ஆங்கிலச் சொல்லுக்கு நேரானதாகும். இயற்கை என்ற தமிழ்ச் சொல்லில் இயல் பொருந்தியது என்று பொருள் பொதிக்கப்பட்டுள்ளதால் இயற்கையில் எல்லாவற்றுக்கும் இயல் உண்டு என்ற செய்தி உள்ளடங்கியுள்ளது. ஆக இயல் உடையது இயற்கை- இயற்கையின் எல்லாவற்றுக்கும் இயல் உண்டு. 

சயின்ஸ் என்கிற ஆங்கிலச் சொல்லுக்கு 'அறிவு இயல்' என்று மொழிபெயர்ப்பு செய்து புழங்கும் நாம், இயல் என்ற சொல்லை வெறுமனே பிரிவு, நூற்பகுதி (சேப்டர்) என்று நீர்த்துப் போகச் செய்வதோடு உலகின் முதல் அணைக்கட்டு கண்ட தமிழனுக்கு சயின்சே இல்லை என்று ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கின்ற வகையில் அமைகிறது இந்த ஐரோப்பியச் சார்பு மொழிபெயர்ப்பு. காங்கிரசார் ஆட்சி காலத்தில் பார்ப்பனியச் சார்பில் இதை விஞ்ஞானம் (வானியல் அறிவு) என்றும் புழங்கியிருந்தோம். 
இந்தச் செய்தியைக் கீழ்கண்ட இணைப்பில் உள்ள கட்டுரையில் இன்னும் விரிவாகப் பார்க்கலாம்: 

http://www.news.mowval.in/Editorial/katturai/Eyalarivu-121.html

இயல் என்ற சொல்லில் இயம் + இயக்கம் = இயல் என்ற பொருள் பொதிப்பு இருக்கிறது. இருவேறு உலகத்து இயற்கை திருவேறு தௌளியராதல் வேறு என்பது திருக்குறள். இந்தக் குறளில் பொருள் + கருத்து = இயற்கை என்று சொல்லப்பட்டுள்ளது. 

பொருள் முதல்வாதம், கருத்து முதல்வாதம் என்ற பிரிவினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது இந்தக் குறளில். பொருளும் கருத்தும் சேர்ந்தே இருப்பதே இயற்கை என்கிறது இந்தக் குறள். 

இயலில் உள்ள ஒரு பகுதியான இயம் என்பது கருத்து அல்லது கோட்பாடு ஆகும். இயலில் உள்ள மறு
பகுதியான இயக்கம், தான்தோன்றி இயக்கம் உள்ள பொருள் அல்லது நடைமுறை ஆகும். ஆக கோட்பாடும் நடைமுறையும் கொண்டது இயற்கை; அது குறித்து படிப்பது இயல் என்று தமிழ் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே இயல் என்ற சொல்லில் செய்திகளைப் பொதித்து வைத்திருக்கிறது. 

ஆக இயற்றமிழ் என்று நமக்கு உள்ள மூன்றாவது தமிழ், சயின்ஸ் தமிழ் ஆகும். தற்காலத்து 'இயல்' அல்லது 'சயின்ஸ்' உலகப் பொதுவாக இருக்கிற நிலையில் அதை 'இயல் அறிவு' (நாலெட்ஜ் ஆப் சயின்ஸ்) என்று சொல்லலாம். 'அறிவு இயல்' (நாலெட்ஜ் சேப்டர் அல்லது சேப்டர் ஆப் நாலெட்ஜ்) என்று சொல்லக் கூடாது. 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,030.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.