Show all

மயக்கம் தரும் மூன்று சொற்கள் இந்து, இந்தி, இந்தியா

தமிழர்களாகிய நாம் மயக்கம் தரும் இந்து, இந்தி, இந்தியா என்ற மூன்று சொற்களின் வரலாற்றைப் புரிந்து கொண்டு தமிழ்த் தொடர்பு அற்ற இந்து, இந்தியை ஹிந்து, ஹிந்தி என்று எழுதி வேறுபடுத்திக் காட்ட வேண்டும்.

07,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்தியா என்பது தமிழ்ச்சொல். அது நாவலந்தேயம் என்ற சொல்லில் இருந்து ந்தேயா இந்தியா என்று மருவியது. ஹிந்து என்கிற வடஇந்திய மொழிகளின்  சொல்லை இந்து என்று தமிழ் ஒலிப்பில் எழுதிக் கொண்டிருக்கிறோம். ஹிந்தி என்கிற ஹிந்தி மொழிச் சொல்லையும் இந்தி என்று தமிழ் ஒலிப்பில் எழுதிக் கொண்டிருக்கிறோம். 

இந்தியா என்ற சொல் தமிழர் வரலாற்றுப்  பெருமையைப் பறைசாற்றும் சொல். ஹிந்து, ஹிந்தி என்ற தலைப்புக்கள் தமிழர்கள் வரலாற்றை தொலைப்பதற்காக திணிக்கப் படுகிற தலைப்புக்கள். அந்தத் தலைப்புகளை அன்னியப் படுத்த ஹிந்து, ஹிந்தி என்றே தமிழிலும் எழுத வேண்டும். என்பதை தமிழர்கள் ஒருபோதும் மறந்து விடக்கூடாது. 

ரிக் வேத காலத்து ஆரியர்களுக்கு, வட நாவலந்தேயம் எதிரிநாடு. தென் நாவலந்தேயம் என்கிற தமிழகம் அறிமுகமே இல்லை. 

ஆனால், அந்த காலத்தில் உலகத்தவர்களுக்கு நாவலந்தேயம் வணிகத் தொடர்பில் இருக்கும் நாடு. உலகில் கடல் தொடர்பு உடைய நாடுகள் அனைத்திற்கும் நாவலந்தேயத்தைத் தெரியும். நாவலந்தேயத்து மக்கள் தமிழர்கள் என்றும் தெரியும். ஏனென்றால் தமிழர்கள் எல்லா நாடுகளுக்கும் கடல் வழியைக் கண்டு வைத்திருந்தார்கள். தமிழர்களே வணிகர்களாக அனைத்து நாடுகளுக்கும் சென்று வந்தார்களேயொழிய உலகினர் யாரும் நாவலந்தேயத்தை கண்டுபிடிக்க முடியமலே இருந்தது. 

முத்து, ஏலம் இலவங்கம் நறுமணப் பொருட்கள், மயில்தோகை, மெல்லிய துணி வகைகள், இவற்றையெல்லாம் எடுத்துக் கொண்டு உலகம் சுற்றிய தமிழர்கள், அரபு நாடுகளிடமிருந்து குதிரைகளையும், மற்ற நாடுகளிடமிருந்து தங்கத்தையும் மாற்றாகப் பெற்று வந்தார்கள். 

தமிழர் வணிகம் புரிந்த கடற்தொடர்புடைய நாடுகள் அனைத்திற்கும் இந்தியாவைக் கண்டுபிடிப்பது அறைகூவலாக அமைந்தது. அந்த நாட்டு மன்னர்களும் பெரும் பொருள் கொடுத்து உதவ பலர் இந்தியாவைத் தேடி அலைந்தார்கள். 

அப்படி, ஐரோப்பியர்களின் இந்தியா தேடும் வேகத்தில் அமெரிக்கவைக் கண்டு பிடித்தார் கொலம்பஸ். ஆம்!  கிழக்கத்திய இந்தியாவை எட்ட கொலம்பசு மேற்கில் பயணித்து உலகைச் சுற்றி இந்தியாவை அடைய முன்மொழிந்தார். இதற்கு எசுப்பானிய அரசரின் ஆதரவைப் பெற்ற கொலம்பசு 1492இல் மேற்கில் பயணித்து புதிய உலகத்தை கண்டறிந்தார். அது அமெரிக்கா.

ஆனால் இதுவரை ஐரோப்பியர்கள் கண்டறியாத புதிய கண்டத்தை வந்தடைந்துள்ளோம் என்பதை ஏற்றுக்கொள்ளாத கொலம்பசு இங்கு வாழ்ந்திருந்த மக்களை இன்டியோசு என்றே அழைத்தார். ஆம் அமெரிக்காவின் அந்தப் பகுதி இந்தியா என்றே நம்பினார்.

ஆனால் உண்மையிலேயே இந்தியாவை வாஸ்கோடகாமா வந்தடைந்த போது அவர் தேடி வந்த நாவலந்தேயம் இல்லை. முத்து வணிகர்கள் இல்லை. ஏலம் இலவங்கம் நறுமணப் பொருட்கள் இல்லை. மெல்லிய துணி வகைகள் இல்லை. மயில்தோகை இல்லை. தமிழ் வளர்த்த, தமிழ் வணிகர்களைப் பேணிய மூவேந்தர்கள் இல்லை.

மாற்றாக. குறு நில மன்னர்கள், வேற்றின அரசுகள், சாதியம், பார்ப்பனிய ஆதிக்கம் அனைத்தும் கொண்ட இழிநிலை மக்களாக தமிழர்கள் வாழ்ந்திருந்தார்கள்.

வெள்ளையர்கள் வருகைக்குப் பிறகு பிரித்தானிய இந்தியாவில் பெரியார், அண்ணாவின் திராவிட இயக்கம், மறைமலை அடிகளார், காசுப் பிள்ளை, பாவாணர், பாரதிதாசன், பாவலரேறு பெருஞ்சித்திரனார் போன்றோரின் தனித்தமிழ் இயக்கம் தமிழர் பெருமை மீட்கும் தடத்தை கண்டறிந்தது. 

வெள்ளையர்கள் தமிழர் நாகரிகம் என அரப்பா மொகஞ்சதரோவை மீட்டுக் கொடுத்த போதும் பார்ப்பனிய ஆதிக்க அரசுகள் அதை கிடப்பில் போட்டன. தமிழர் தம் தொடர் ஊக்கத்தால், நேற்று சல்லிக் கட்டையும் இன்று கீழடியையும் மீட்டு நிறுவிக் கொண்டிருக்கிறோம். 

நாவலந்தேயத்திலிருந்து உலகினர் மாற்றி அழைத்த இந்தியா  என்கிற சொல்லும், சொல்லின் வரலாறும், இந்தியாவில் எந்த மாநிலத்தவருக்கும் தெரியாது. இந்தியாவின் அனைத்து மாநிலத்தவர்களும் இந்தியாவை பாரதம் என்றே அழைக்கின்றனர். பாரதம் என்பதை ஆங்கிலத்தில் இந்தியா என்று எழுதுகிறார்கள் என்று தான் இந்தியாவில் அனைவருக்கும் தெரியும்.  

பாரசீகர்கள் படையெடுப்புக்கு முன்னம் ஹிந்து, ஹிந்தி இரண்டும் இல்லவேயில்லை. வடபுல மக்களின் சமயக் கோட்பாடுகளுக்கு ஹிந்து என்றும், வடபுல மக்களிடம் உருவான கலப்புமொழிக்கு ஹிந்தி என்றும் பெயரிட்டு அழைத்தவர்கள் பாரசீகர்கள். அதையொட்டி இந்தியாவை ஹிந்துஸ்தான் என்று அறிவிக்க வேண்டும் என்ற ஒரு சாரரின் முயற்சி கூட தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் இந்தியா தமிழர்களுக்கு மட்டுமே தொடர்புடைய சொல்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,315.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.