Show all

அன்று சீனாவுக்குப் போய் தமிழர்கள் கரும்பைக் கொண்டுவந்தார்கள்! இன்று சீன அதிபர் தமிழகம் வருகிறார் என்ன எடுத்துச் செல்வார்

பல்லவ பேரரசு காலத்தில் செழித்தோங்கி வளர்ந்த கலைத்திறனுக்கு சாட்சியாக விளங்கும் மாமல்லபுரத்துக்கு எதிர்வரும் வெள்ளியன்று, சீன அதிபர் வரும் நிலையில், பழந்தமிழர் வணிகத் திறன் நினைவுகளோடு அவரை வரவேற்போம்.

21,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சங்ககாலத்தில் தமிழர்கள், முத்துக்களையும், ஏலம் போன்ற நறுமணப் பொருள்களையும், மயில்தோகை மற்றும் மெல்லிய துணிவகைகளையும் எடுத்துக் கொண்டு சீனாவிற்கு பயணித்த போது தங்கத்தையும் கொஞ்சம் கரும்புக் கணுக்களையும் கொண்டு வந்தார்கள். சீனாவில் இருந்து கொண்டுவரப்பட்ட கரும்பு வகைகளை மன்னர் அதியமானின் மூதாதயர்கள் இங்கு பயிரிட்டனர். பின்னாட்களில் சர்க்கரையை தமிழர்கள் சீனி என்று அழைப்பதுவும்  அதன் பொருட்டே.
   
சங்ககாலத் தமிழர்கள் சீனாவடன் கொண்டிருந்த வணிகத் தொடர்புகளை புதுப்பிக்க, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்,  நமது மாமன்னர் இராசராச சோழன் சீனாவுக்கு தனது அரசவை பேராளர்களை அனுப்பி வைத்தது தெரியவந்துள்ளது.

சீனாவின் கேன்டோன் பகுதியில் எழுநூறு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட திருகானிஸ்வரர் என்ற சிவன் கோவில்  உள்ளது. அந்த கோவிலுக்கு அப்போதைய மங்கோலிய மன்னர் செகசாய் கான் என்பவரது பெயரின் இறுதிப் பகுதியைக் குறிக்கும் விதமாக ‘கானிஸ்வரம்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

நாகப்பட்டினத்தில் அறுநூறு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ஒரு புத்த கோவிலுக்கு ‘சீனக்கோவில்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதே போன்று தமிழகத்தை சேர்ந்த மன்னர்கள் சீனாவுடன் வணிகம் மற்றும் பண்பாட்டுத் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளதற்கான  பல்வேறு ஆதாரங்கள் தமிழ்நாட்டிலும், சீனாவிலும் காணக் கிடைக்கின்றன.

இந்தியா-சீனா இடையே வணிக உறவு உட்பட இரு நாடுகளுக்கும் நட்புணர்வை மேம்படுத்தும் வகையில் சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகிற வெள்ளிக் கிழமையன்று தமிழகம் வர உள்ளார்.

ஒன்றியத் தலைமைஅமைச்சர் மோடியை சந்திக்கும் ஜி ஜின்பிங் மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை மற்றும் கோவில்களை சுற்றிப்பார்க்க உள்ளார். இதனால் மாமல்லபுரம் முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

பல்லவ பேரரசு காலத்தில் செழித்தோங்கி வளர்ந்த கலைத்திறனுக்கு சாட்சியாக விளங்கும் மாமல்லபுரத்துக்கு  சீன அதிபர் வரும் நிலையில், பழந்தமிழர் வணிகத் திறன் நினைவுகளோடு அவரை வரவேற்போம்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,299.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.