Show all

இலங்கையில், தேவாலய தாக்குதல் பற்றி 10 நாட்களுக்கு முன்பே காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது தெரிய வந்துள்ளது

 

தேசிய தவ்ஹீத் ஜமாஅத் என்ற அமைப்பு, முதன்மையான தேவாலயங்களையும், கொழும்புவில் உள்ள இந்திய தூதரகத்தையும் குறிவைத்து தற்கொலை தாக்குதல் நடத்த உள்ளதாக வெளிநாட்டு உளவு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளதாக 10 நாட்களுக்கு முன்பே காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது தெரிய வந்துள்ளது

08,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: இலங்கை தலைநகர் கொழும்புவில் தேவாலயங்கள், மின்மினி உணவகங்கள் உள்பட 8 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் 207 பேர் உயிரிழந்துள்ளனர். 450க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இந்தத் தாக்குதல் குறித்து 10 நாட்களுக்கு முன்பே காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. முதன்மையான தேவாலயங்களை குறிவைத்து தாக்குதல் நடக்க உள்ளதாக இலங்கை காவல்துறை தலைவர் புஜுத் ஜெயசுந்தரா 10 நாட்களுக்கு முன்பே எச்சரிக்கை விடுத்திருந்தது தெரிய வந்துள்ளது.

 

உளவுத்துறை எச்சரிக்கையை அவர் உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தார். ''தேசிய தவ்ஹீத் ஜமாஅத் என்ற அமைப்பு, முதன்மையான தேவாலயங்களையும், கொழும்புவில் உள்ள இந்திய தூதரகத்தையும் குறிவைத்து தற்கொலை தாக்குதல் நடத்த உள்ளதாக வெளிநாட்டு உளவு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அமைப்பு கடந்த ஆண்டு நடந்த புத்தர் சிலைகள் உடைப்பு மூலம் பலருக்கும் தெரிய வந்த இயக்கம் ஆகும். ஆனால் இப்போது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எந்த ஒரு இயக்கமும் இதுவரை பொறுப்பு ஏற்கவில்லை.

இதற்கிடையே ஒரே இயக்கத்தை சேர்ந்தவர்கள் தாக்குதலை நடத்தியுள்ளனர் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குண்டு வெடிப்பு தொடர்பாக 7 பேர் கைதும் செய்யப்பட்டுள்ளனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,129.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.