Show all

தமிழர்தம் வரலாற்றுப் பெருமையை உலகினருக்கு பறை சாற்றும் நோக்கம் சார்ந்ததோ! சின அதிபர்- தலைமைஅமைச்சர் மாமல்லபுர வருகை

சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் தலைமைஅமைச்சர் மோடியின் மாமல்லபுர வருகை, முழுக்க முழுக்க தமிழர்தம் வரலாற்றுப் பெருமையை உலகினருக்கு பறை சாற்றும் நோக்கம் சார்ந்ததோ? என்பதாகவே அமைந்தது வருகை திட்டத்தின் போக்குகள் அனைத்தும்.

25,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சென்னை வந்திறங்கியுள்ளேன். கலாசாரம் மற்றும் விருந்தோம்பலுக்குப் பெயர் பெற்ற மாபெரும் மாநிலமான தமிழ்நாட்டிற்கு வந்திருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்று, தான் சென்னை விமான நிலையத்திற்கு வந்ததுமே, தலைமைஅமைச்சர் மோடி தனது கீச்சுப் பக்கத்தில் தமிழில் கீச்சு செய்திருந்தார். 
மேலும், தமிழகம் வந்த சீன அதிபரை, அதிபர் ஜி ஜின்பிங் அவர்களே! இந்தியாவிற்கு வருக வருக என்று வரவேற்கிறேன் என்றும் தமிழில் வரவேற்று கீச்சு செய்திருந்தார்கள் மோடி அவர்கள். 

யாரும் எதிர்பார்க்காத வகையில் மோடி அவர்கள், தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி- சட்டை அணிந்து வந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்த, இரு நாட்டுத் தலைவர்களின் முதற்கட்ட சந்திப்பு வெள்ளி மாலை மாமல்லபுரத்தில் நடைபெற்றது. முன்கூட்டியே வந்த மோடி, பின்னர் வந்த சீன அதிபரை வரவேற்றார். 

முதற்கட்ட சந்திப்பிலேயே தமிழர்களின் சிற்பக் களஞ்சியமான மாமல்லபுரத்தின் சிற்பங்களை இரு நாட்டுத் தலைவர்களும் பார்வையிட்டனர். மாமல்லபுரத்தின் சிறப்புகளை மோடியே சீன அதிபருக்கு விளக்கினார். இந்தச் சந்திப்பின் மூலமாக மாமல்லபுரத்தின் முழு சிறப்புகளையும் மோடியும் அறிந்திருப்பார். 

இதையடுத்து கடற்கரைக் கோவில் அருகே கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதிலும் தமிழர்களின் பாரம்பரியமான பரத நாட்டியம் இடம்பெற்றது. தமிழ்ப் பாடல்களும் இடம்பெற்ற நிகழ்வுகள் உணர்ச்சி மிக்கதாகவே இருந்தது. மோடியும், சீன அதிபரும் மிகவும் ரசித்து நிகழ்ச்சியை கண்டுகளித்தனர். இரவு தலைமைஅமைச்சர் மோடி, சீன அதிபருக்கு அளித்த விருந்தில் தமிழர்களின் பாரம்பரிய உணவுகளும் இடம்பெற்றன. 

இரு நாட்டுத் தலைவர்கள் சந்திப்பை பார்த்துக்கொண்டிருக்கும் உலக நாடுகள், கண்டிப்பாக இன்று தமிழகத்தின் சிறப்புகள் என்ன? மாமல்லபுரம் எங்கு இருக்கிறது? அதன் வரலாற்று சிறப்பம்சங்கள் என்ன? என கூகுளில் தேடிக்கொண்டிருக்கும்..

ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பு சீனப்பயணி யுவான் சுவாங் காஞ்சி நகருக்கு வந்தார். அப்போதைய பல்லவ மன்னன் முதலாம் நரசிம்ம வர்மன் அவரை வரவேற்று சிறப்பித்தார். அதன்பின்னர் இந்தியா விடுதலை அடைந்த ஒன்பது ஆண்டுகளுக்குப் பின்னர், சீன அதிபர் சூ என்லாய் மாமல்லபுரத்திற்கு வருகை தந்தார். சுமார் 60 ஆண்டுகளுக்கு பிறகு மாமல்லபுரத்தில் இந்திய- சீனத் தலைவர்கள் சந்திப்பு நடைபெற்றுள்ளது.

பண்டையக் காலத்தில் இருந்தே சீனர்களுக்கும், பல்லவர்களுக்கும் தொடர்பு இருந்து வரும் நிலையில், மாமல்லபுரத்தில் நடைபெற்ற தலைமைஅமைச்சர் மோடி- சீன அதிபரின் சந்திப்பும் வரலாற்றில் இடம்பெறும். தமிழகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது, தமிழர்களின் பெருமையையும், பாரம்பரியத்தையும் இவ்வுலகுக்கு மீண்டும் ஒருமுறை எடுத்துரைத்துள்ளது. 

இந்தியா என்றாலே தாஜ் மகால் தான் முதல் சுற்றுலா இடம் என்று வெளிநாட்டினர்களுக்கு தெரிந்திருக்க, தென்கோடியில் புகழ்பெற்ற மாமல்லபுரம் இருக்கிறது என்று சீனத்தின் மாமல்லபுரத் தேர்வில் இருந்து தெரியப்படுத்தியிருக்கிறது இந்த சந்திப்பு. 

தமிழர்களின் கட்டிடக்கலை, பாரம்பரியம் உலக நாடுகளுக்கு தெரிந்திருந்தாலும், இன்று உலக நாடுகளின் மூலை முடுக்கில் உள்ள மக்களுக்கு எல்லாம் சென்று சேர்ந்திருக்கிறது. உலகின் பழமைவாய்ந்த தமிழர்களின் நாகரிகம் உலகம் முழுவதும் இன்று நினைவு கூறப்பட்டுள்ளது. 

அண்மைக்காலமாக தமிழுக்கும், தமிழக மக்களுக்கும் பேச்சளவில் முதன்மைத்துவம் அளித்து வந்த தலைமை அமைச்சர் மோடி, தமிழகத்தில் இந்தச் சந்திப்பை நிகழ்த்தி, தமிழர்களுக்கு பெருமை சேர்த்துள்ளார். 

இரு நாட்டுத் தலைவர்கள் சந்திப்பிற்காக தமிழக அரசும் கடுமையாக இறங்கி வேலை செய்துள்ளது. தனது ஆட்சியில் தான் தமிழகத்தில் இரு நாட்டுத் தலைவர்கள் ஒரு சந்திப்பு நடைபெற்றது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் பெருமையாக சொல்லிக் கொள்வதற்கு வாய்ப்பாகவே: அனைத்து இடங்களிலும் சிறப்பான வரவேற்புகள், ஏற்பாடுகள் என தமிழக அரசு அதிகாரிகள் முதல் துப்புரவுப் பணியாளர்கள் வரை அனைவரின் அயராத உழைப்பும் இந்த சந்திப்பின் வெற்றியில் பங்கு கொண்டிருக்கிறது. 

தமிழர்தம் வரலாற்றுப் பெருமையை உலகினருக்கு பறை சாற்றும் நோக்கம் சார்ந்ததோ, இந்த இரு நாட்டுத் தலைவர்கள் சந்திப்பு? ஏற்பாடு செய்தது தமிழக அரசோ! என்பது போலவே அமைந்தது இருநாட்டு தலைவர்களின் சந்திப்பு அனைத்து நிலைகளிலும்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,303.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.